நம் உடல் ஆரோக்கியத்தின் அடிப்படையே பற்களிலிருந்துதான் ஆரம்பமாகிறது. உண்ணும் உணவை நன்கு மென்று உமிழ் நீருடன் கலந்து வயிற்றுக்குள் அனுப்பும்போது செரிமானத்தின் முதல் படி தொடங்குகிறது. எனவே, நம் பற்கள் முப்பத்திரெண்டும் முழு பலமும் ஆரோக்கியமும் பெற்றிருக்க வேண்டியது அவசியமாகிறது. இதற்கு நாம் உட்கொள்ள வேண்டிய 5 வகை சத்தான உணவுகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. பாலும் பால் சார்ந்த பொருட்களும் பற்கள் பலமுடன் இருக்க பெரிதும் உதவுகின்றன. இவற்றிலுள்ள கால்சியம் மற்றும் புரோட்டீன் சத்துக்கள் பற்களின் எனாமலைப் பாதுகாக்கும்.
2. பச்சை இலைக் காய்கறிகளிலுள்ள முக்கியமான வைட்டமின்களும் மினரல்களும் பல் எனாமலைப் பாதுகாப்பதுடன், மொத்த வாய்ப் பகுதி ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகின்றன.
3. கேரட், செலரி போன்ற கிரஞ்சியான காய்கள் இயற்கையாகவே பற்களையும் ஈறுகளையும் சுத்தமடையச் செய்கின்றன. மேலும், இவை உமிழ் நீரின் உற்பத்தியைப் பெருகச் செய்து வாயினுள் பாக்டீரியாக்கள் தங்குவதைத் தடுத்து அவை வெளியேற உதவுகின்றன.
4. கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் நிறைந்துள்ள தாவர வகைக் கொட்டைகளும் விதைகளும் பல் எனாமலை வலுவடையச் செய்வதோடு உமிழ் நீர் சுரப்பையும் அதிகரிக்கச் செய்கின்றன. இதனால் உமிழ் நீரிலுள்ள என்ஸைம்கள் சிறப்பான செரிமானத்துக்கு உதவி செய்ய முடிகிறது.
5. மீன் உணவுகளை உண்பதால் அவற்றில் நிறைந்துள்ள வைட்டமின் D மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம் சத்து உடலுக்குள் உறிஞ்சப்படுவதற்கு பெரிய அளவில் உதவி புரியும். இதனால் பற்கள் பலமும் ஆரோக்கியமும் பெறும்.
மேற்கூறிய 5 வகை உணவுகளையும் தவறாமல் உட்கொண்டு இறுதிவரை இயற்கைப் பற்களுடன் இணைந்து வாழ்வோம்.