சத்து நிறைந்த உணவுகளை அடிப்படையாகக் கொண்டே நம் உடல் முழு ஆரோக்கியம் பெற்று நல்ல முறையில் இயங்க முடியும். அப்படி உண்ணப்படும் உணவுகளிலுள்ள சத்துக்கள் உடலில் சேர அந்த உணவுகள் சிறந்த முறையில் ஜீரணமாக வேண்டியது அவசியம். வயிற்றுப் பொருமல், வீக்கம் எதுவும் ஏற்படாமல் முறையான செரிமானத்துக்கு உதவக்கூடிய 5 பொருட்கள் உள்ளன. உணவு உண்ட பின் இவற்றில் ஏதேனும் ஒன்றை உட்கொள்வது சிறந்த பலனளிக்கும். அவை என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. இஞ்சி: உணவுக்குப் பின் ஒரு சிறு துண்டு இஞ்சியை வாயில் போட்டு மெல்வதால் வயிற்றுக்குள் உற்பத்தியாகும் செரிமானத்துக்கு உதவும் ஒரு வகை ஜூஸ் மற்றும் என்சைம்களின் அளவு அதிகரிக்கும். இதனால் ஜீரணம் விரைவாக நடைபெறும். இஞ்சியின் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணமானது உணவுப் பாதையிலுள்ள வீக்கங்களையும் குறைக்கும்.
2. பப்பாளி: இதிலுள்ள பாபெயின் என்ற என்சைம் உணவிலுள்ள புரோட்டீன்களை உடைக்க உதவும். மேலும் உணவுப் பாதையை ஆரோக்கியமானதாக்கி வீக்கம், வாய்வு உண்டாகாமல் பாதுகாக்க உதவும்.
3. யோகர்ட்: இதிலுள்ள புரோபயோடிக்ஸ் எனும் நல்ல பாக்டீரியாக்கள் குடலிலுள்ள நல்ல பாக்டீரியாக்களின் அளவையும் ஆரோக்கியத்தையும் சமநிலையில் வைக்க உதவும். இதனால் ஜீரணம் சிறப்பாக நடைபெறும்.
4. பெருஞ்சீரகம்: இது இரைப்பை - குடல் பாதையில் உள்ள தசைகளை தளர்வுறச் செய்யும். இதனால் வீக்கம், வாய்வு போன்ற அசௌகரியங்கள் உண்டாவதற்கான வாய்ப்புகள் குறைந்து ஜீரணம் சிறப்பாக நடைபெறும்.
5. கிவி: இந்தப் பழத்திலுள்ள ஆக்ட்டினிடின் (Actinidin) என்ற என்சைம் புரோட்டீன்களை உடைக்க உதவி புரியும். மேலும், இதிலுள்ள அதிகளவு நார்ச் சத்துக்கள் குடல் இயக்கம் சுமூகமாக நடைபெறச் செய்யும்.
உணவுக்குப் பின் மேற்கூறிய பொருட்களில் ஒன்றை தேவையான அளவு உட்கொண்டு சீரான செரிமானத்துக்கு உதவுவோம்.