மழைக்காலம் தொடங்கி விட்டது. இந்த மழைக்காலத்தில்தான் மக்களுக்கு நிறைய நோய் தொற்றுகள் ஏற்படுகின்றன. அத்தகைய நோய் தொற்றுக்களை உருவாக்கக்கூடிய 7 வகையான உணவுகள் என்ன என்பதையும், அவற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வது என்பதைப்பற்றியும் இந்தப் பதிவில் காண்போம்.
1. Street foods: ரோட்டுக்கடை உணவுகள் ருசியாக இருந்தாலும், அது எந்நேரமும் ஆரோக்கியமாகவும், துய்மையாகவும் இருக்குமா என்பது சந்தேகமே! தூய்மையற்ற தண்ணீர், சுத்தமற்ற இடங்களில் தயாரிக்கப்படும் Street foodகளை மழைக்காலங்களில் தவிர்ப்பது புட் பாய்சன், குடல் சம்பந்தமான நோய்களில் இருந்து நம்மைப் பாதுகாக்கும். அதற்கு பதில் வீட்டில் தூய்மையாக செய்யப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்வது சிறந்தது.
2. Beverages: குளிர்பானம் குடிப்பது புத்துணர்ச்சியாக இருந்தாலும், அவை செரிமான பிரச்னையை உண்டாக்குவது மட்டுமில்லாமல், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியையும் குறைக்கிறது. அதற்கு பதில் ஆரோக்கியமான பானங்களான இஞ்சி தண்ணீர், மூலிகை டீ, சூப் போன்றவற்றை அருந்துவதால், மழைக்காலத்தில் செரிமான பிரச்னை ஏற்படாமல் பாதுகாக்கும்.
3. Oily foods: மழைக்காலங்களில் அதிகமாக எண்ணெய் உணவுகள், கார உணவுகள் எடுத்துக்கொள்வது வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தி செரிமானப் பிரச்னையை உருவாக்கும். இதனால் அசிடிட்டி, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். அதற்கு பதில் மழைக்காலங்காளில், காரம் மற்றும் எண்ணெய் குறைவாக இருக்கும் உணவுகளை சாப்பிடுவது வயிற்றுக்கு நல்லதாகும்.
4. Raw salads: மழைக்காலங்களில் காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. மழைக்காலத்தில் காய்கறிகள் அதிக ஈரப்பதத்துடன் இருக்கும். அதனால் பாக்டீரியா, பூஞ்சை போன்ற நுண்ணுயிர்கள் அதில் வளர்ந்து இருக்கக்கூடும். அதனால் காய்கறிகளை பச்சையாக உண்ணாமல் நன்கு வேகவைத்து சமைத்து சாப்பிடுவது சிறந்தது.
5. Sea foods: மழைக்காலத்தில் மீன், இறால் போன்ற கடல் உணவுகள் சீக்கிரமே கெட்டுப்போவதற்கான வாய்ப்புகள் அதிகம். அது மட்டுமில்லாமல். பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்களின் வளர்ச்சி அதிகமாக இருக்கும் என்பதால் புட் பாய்சன் ஆக அதிக வாய்ப்புகள் உள்ளட். எனவே, மழைக்காலத்தில் Sea food உபயோகிப்பதைத் தவிர்ப்பது சிறந்தது.
6. Dairy Products: பதப்படுத்தப்படாத பால் மற்றும் பால் சம்பந்தமான உணவுகள் மழைக்காலத்தில் மிகவும் ஆரோக்கியமற்றதாகக் கருதப்படுகிறது. மழைக்காலத்தில் இருக்கும் ஈரமான சூழ்நிலை பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்கள் வளருவதற்குக் காரணமாக இருக்கும். இது வயிறு சம்பந்தமான தொற்றுக்களை உருவாக்கும். அதற்கு பதில் பதப்படுத்தப்பட்ட பாலை வாங்கி நன்றாகக் காய்ச்சி பயன்படுத்துவது சிறந்தது.
7. Fruit juices: மழைக்காலத்தில் வெளியிலே வாங்கிச் சாப்பிடும் பழச்சாறுகள் தூய்மையற்ற முறையில் மாசுப்பட்ட தண்ணீரில் தயாரிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால், முழு பழங்களை வாங்கி உண்பது சிறந்ததாகும்.
மழைக்காலத்தில் இந்த 7 உணவுகளையும் தவிர்த்து ஆரோக்கியமான உணவுமுறையைக் கடைப்பிடித்தால் நோயின்றி வாழலாம். முயற்சித்துதான் பாருங்களேன்.