‘ஸிர்கேவாலே பியாஸ்' என்பது பிக்கிள்ட் ஆனியன் இன் வினிகர் (Pickled Onion in Vinegar) என்று கூறப்படுகிறது. ஆனியன், வினிகர் மற்றும் சில ஸ்பைஸஸ் சேர்த்து தயாரிக்கப்படும் இதை கோடைக் காலங்களில் நம் உணவுடன் சேர்த்து உண்ணும்போது உடலுக்கு அநேக நன்மைகள் கிடைக்கின்றன.
ஸிர்கேவாலே பியாஸ் கோடையில் உடலுக்கு குளிர்ச்சியையும் நீரேற்றத்தையும் தருகிறது. வினிகர் குளிர்ச்சியையும், ஆனியன் நீரேற்றத்தையும் தர உதவுகின்றன. இதிலுள்ள முக்கியமான என்சைம்களும் அமிலங்களும் செரிமானம் சிறப்பாக நடைபெறவும், சத்துக்கள் உறிஞ்சப்படுவதற்கும் உதவி புரிகின்றன.
ஸிர்கேவாலே பியாஸில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இவை உடலுக்கு தீங்கிழைக்கும் ஃபிரிரேடிக்கல்களை எதிர்த்துப் போராடி உடலைப் பாதுகாப்பதோடு, கேன்சர், இதய நோய் போன்ற நாள்பட்ட வியாதிகள் வரும் ஆபத்தையும் தடுக்கின்றன.
இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் C ஆகியவை உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. வினிகரில் உள்ள ஆன்டி பாக்ட்டீரியல் குணமானது உடலுக்கு தீங்கிழைக்கும் பாக்ட்டீரியாக்களை அழிக்க உதவுகிறது. வினிகரும் வெங்காயமும் தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்களை உடலிலிருந்து வெளியேற்றி, கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படச் செய்கின்றன.
ஸிர்கேவாலே பியாஸ் குறைந்த கலோரி அளவும், அதிகளவு நார்ச்சத்தும் கொண்டது. நார்ச்சத்தானது அதிக நேரம் குடலில் தங்கி மீண்டும் பசி எடுக்கும் நேரத்தை தள்ளிப் போகச் செய்கிறது. இதனால் உட்கொள்ளும் உணவின் அளவு குறைந்து எடை அதிகரிப்பு தடுக்கப்படுகிறது.
ஸிர்கேவாலே பியாஸ் உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குறைக்க வல்லது. குறிப்பாக, வயிற்றுக்கு உள்ளும் வயிற்றைச் சுற்றிலும் தோன்றும் வீக்கங்களைக் குறைத்து, சருமத்தில் தடிப்பு, வலி, சிவத்தல் போன்ற கோளாறுகள் ஏற்படாமல் பாதுகாக்கும். நீரிழிவு நோய் உள்ளவர்களின் இரத்த சர்க்கரை அளவைக் குறைத்து சமநிலையில் வைத்துப் பராமரிக்கவும் ஸிர்கேவாலே பியாஸ் உதவி புரிகிறது.
இத்தனை நன்மைகள் கொண்ட இந்த உணவை நாமும் உணவுடன் சேர்த்து உட்கொண்டு மேம்பட்ட ஆரோக்கியம் பெறுவோம்.