மனிதர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு நுரையீரல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். ஏனெனில் நுரையீரல் உடலுக்கு ஆக்ஸிஜனேற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆஸ்துமா, நாள்பட்ட நுரையீரல் நோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் போன்ற சுவாசப் பிரச்னைகளால் பலர் பாதிக்கப்படுகின்றனர். கீழ்க்காணும் 8 வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் நுரையீரலை சிறப்பாகச் செயல்படச் செய்யலாம்.
1. சரிவிகித உணவு: பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவுகள் நுரையீரல் ஆரோக்கியத்தை நன்றாகப் பராமரிக்க உதவும். கீரைகள், ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கொண்ட கடுகு எண்ணெய், மாங்காய், ஆளி விதைகள்,வெண்டைக்காய்,சோயாபீன்ஸ், முட்டைக்கோஸ் மற்றும் காலிஃபிளவர் போன்ற உணவு வகைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். அவை நுரையீரலில் வீக்கத்தை குறைக்கவும் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவவும்.
2. உடற்பயிற்சி: தினந்தோறும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியம். ஏனெனில் உடற்பயிற்சி நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தும். உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும். ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்களாவது நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் அல்லது வீட்டிலேயே செய்யக்கூடிய ஏரோபிக் பயிற்சிகளை செய்யலாம்.
3. மன அழுத்த நிவாரணம்: மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு எப்போதும் சுவாச பிரச்னைகளை அதிகப்படுத்தும். யாராவது ஒருவர் மன அழுத்தத்தில் இருக்கும்போது அவர் சரியாக சுவாசிக்கவே மறந்துவிடுவார். அவரது சுவாசம் சீராக இருக்காது. கோபம், கவலை, வருத்தம் போன்றவற்றின் பிடியில் இருக்கும்போது சுவாசத்தில் மிகுந்த மாறுபாடுகள் ஏற்படும். எனவே, மன அழுத்தத்தை நிர்வகிக்க தியானம், ஆழ்ந்த சுவாசப் பயிற்சி, யோகா போன்றவற்றை பயிற்சி செய்ய வேண்டும்.
4. புகைப்பிடித்தல் தவிர்க்கவும்: நுரையீரல் புற்றுநோய் மற்றும் நுரையீரல் சார்ந்த பிரச்னைகளுக்கு புகைபிடித்தல் முக்கியமான காரணியாகும். புகைப்பழக்கத்தை நிறுத்துவது நுரையீரல் ஆரோக்கியத்தை பெரிதும் மேம்படுத்துகிறது. அதைப்போல செகண்ட் ஹேண்ட் புகை எனப்படும் பிறர் புகைபிடிக்கும் இடத்தில் நிற்பதை தவிர்க்கவும். செயலற்ற புகைப்பிடித்தலும் நுரையீரல் புற்றுநோய்க்கு வழி வகுக்கும். வீட்டில் மற்றும் நண்பர்கள், உறவினர்கள் புகைப்பிடித்தால் அவர்களை அந்த பழக்கத்தை கைவிட ஊக்குவிக்கவும்.
5. சுகாதாரம்: வெளியில் சென்று விட்டு வரும்போது, உணவு உண்ணும் முன்பு, வீடு சுத்தம் செய்த பின்பு கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். மேலும், காய்ச்சல் சளி இருமல் இருக்கும் காலகட்டங்களில் சுவாசத் தொற்றுகள் பிறருக்கு பரவாமல் இருக்கவும் கைகளை நன்றாக சோப்பு போட்டுக் கழுவ வேண்டும்.
6. காற்று மாசுபாட்டைத் தவிர்க்கவும்: வீடு சுத்தம் செய்யும்போது முகத்திற்கு மாஸ்க் போட்டு, கைகளுக்கு கிளவுஸ் அணிந்து ஒட்டடை அடிப்பது மற்றும் ரசாயனங்கள் கொண்டு கழிவறை குளியலறை சுத்தம் செய்வது முக்கியம். வெளியில் மாசு அதிகம் உள்ள பகுதிகளுக்குச் செல்லும்போதும் மாஸ்க் அணிந்துகொள்ள வேண்டும்.
7. போதுமான தூக்கம்: நுரையீரல் ஆரோக்கியத்திற்கு மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் போதுமான தூக்கம் அவசியம். தினமும் 7 லிருந்து 8 மணி நேரம் வரை தூங்குவதை இலக்காகக் கொள்ள வேண்டும்.
8. நீரேற்றத்துடன் இருத்தல்: தினமும் உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். சளி, இருமல் இருந்தால் தண்ணீர் குடிக்கும்போது சளியை மெலிதாக்கி எளிதாக வெளியேற்றவும் உதவும். சுவாசத் தொற்று நோயின் அபாயத்தையும் குறைக்கும். மேலும், நுரையீரல் தொடர்பான ஏதாவது நோய் ஏற்பட்டால் உடனே சிகிச்சை எடுத்துக்கொண்டு அதை சரி செய்ய வேண்டும்.