ஒரு ஃபிரஷ் ஆப்பிள் மற்றும் வால்நட்டுடன் ஆலிவ் ஆயில் சேர்த்து சாலட் செய்து சாப்பிடும்போது நம் உடலுக்கு பலவித ஆரோக்கிய நன்மைகள் கிடைப்பது உண்மை. ஊட்டச்சத்துக்களின் பவர் ஹவுஸ் என அழைக்கப்படும், சுவை மிகுந்த இந்த சாலட் உடலுக்கு ஆரோக்கியம் நிறைந்த கொழுப்புகளைத் தந்து உற்சாகம் அளிக்கக் கூடியது. இதை ஏன் தினசரி உணவில் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. ஆப்பிள் பழத்தில் உள்ள பாலிஃபினால்ஸ் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலில் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை சமநிலைப்படுத்தி வீக்கங்களைக் குறைக்க வல்லவை. இதனால் இதய நோய், கேன்சர் மற்றும் நீரிழிவு போன்ற நாள்ப்பட்ட வியாதிகள் வரும் அபாயம் தடுக்கப்படுகிறது. வால்நட்டில் உள்ள வைட்டமின் E போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலில் தீங்கிழைக்கக் கூடிய ஃபிரீரேடிக்கல்களின் அளவைக் குறைக்க உதவும்.
2. எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் ஆயிலில் உள்ள மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளின் (LDL) அளவைக் குறைக்கவும் நல்ல கொழுப்பின் (HDL) அளவு அதிகரிக்கவும் உதவும். வால்நட்டில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இதயத்திற்கு செல்லும் இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். இதனால் இரத்த அழுத்தம் சமநிலைப்படவும், வீக்கங்கள் குறையவும் வாய்ப்பாகிறது. வால்நட் மற்றும் ஆலிவ் ஆயிலில் உள்ள சரிவிகித அளவிலான நல்ல கொழுப்புகள் ஒருவரின் இதயம் ஆரோக்கியமாகவும் பலமாகவும் இருக்க உதவுகின்றன.
3. ஆப்பிளில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம். வால்நட்டில் புரோட்டீன் மற்றும் ஆரோக்கியம் தரும் கொழுப்புகள் அதிகம். இவை அனைத்தும் வயிறு அதிக நேரம் நிரம்பியுள்ள உணர்வைக் கொடுத்து உட்கொள்ளும் உணவின் அளவைக் குறைக்க உதவும். மேலும், ஆலிவ் ஆயில் கொழுப்புகளை உடைக்கவும், மெட்டபாலிச ரேட்டை அதிகரிக்கவும் உதவும். இதன் மூலம் உடலின் எடை அதிகரிக்காமல் சமநிலையில் வைத்துப் பராமரிக்க முடியும்.
4. ஆப்பிள் மற்றும் வால்நட்டில் உள்ள நார்ச்சத்துக்கள் சீரான செரிமானத்துக்கும் குடல் இயக்கம் கோளாறின்றி நடைபெறவும் உதவுகின்றன. ஆலிவ் ஆயிலின் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணம் ஜீரண மண்டல உறுப்புகளுக்கு இதமளித்து, இந்த சாலட் உண்பவர்களுக்கு நல்ல நண்பனைப் போல் உதவி புரியும்.
5. இந்த சாலட்டை 'பிரைன் ஃபுட்' (Brain Food) எனவும் கூறுவதுண்டு. ஏனெனில், இதிலுள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பல வகையான கூட்டுப் பொருள்கள் மூளையில் உள்ள வீக்கங்களைக் குறைக்கவும் அறிவாற்றலை அதிகரிக்கவும் உதவுகின்றன. ஆலிவ் ஆயிலில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் மூளையின் நினைவாற்றலை அதிகரிக்கவும், வயதாவதினால் உண்டாகும் அறிவாற்றல் குறைபாடுகளைக் களையவும் செய்யும்.
6. எலும்புகளை வலுவடையச் செய்யும் கொலாஜனின் உற்பத்திக்கு உதவும் வைட்டமின் C ஆப்பிளில் உள்ளது. வால்நட்டில் மக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற கனிமச் சத்துக்கள் உள்ளன. இவை எலும்புகளின் உட்புறம் உள்ள மஜ்ஜை (Bone marrow)யின் அடர்த்தியை அதிகரிக்க உதவி புரிபவை. ஆலிவ் ஆயில் உடலுக்குள் கால்சியம் உறிஞ்சப்படுவதற்கு பெரிதும் உதவி புரியும். இதுவும் எலும்புகள் வலுப்பெற உதவும்.
7. ஆப்பிளில் உள்ள வைட்டமின் C, கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். இது சருமம் உறுதி பெறவும், உடலுக்கு இளமைத் தோற்றம் தரவும் உதவும். வால்நட்டில் உள்ள கொழுப்பு அமிலங்கள் சருமத்தை ஈரப் பசையுடனும் மினு மினுப்புடனும் வைக்க உதவும். ஆலிவ் ஆயிலில் உள்ள வைட்டமின் E மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சூரியனின் அல்ட்ரா வயலட் கதிர்களின் தாக்கத்தால் விளையும் தீங்குகளை விலக்கி உடலின் இளமைத் தோற்றம் நிலைக்க உதவும்.
8. ஆலிவ் ஆயில் மற்றும் வால்நட் இரண்டுமே ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணம் கொண்டவை. வால்நட்டில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களும் உடலின் வீக்கங்களை எதிர்த்துப் போராட உதவும். ஆப்பிள் வால்நட் சாலட்டை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், இதய நோய் மற்றும் ஆர்த்ரைடிஸ் நோய் வரக்கூடிய அறிகுறிகளான நாள்ப்பட்ட வீக்கங்கள் குறையும்.
9. ஆப்பிளில் உள்ள வைட்டமின் C, வால்நட்டில் உள்ள வைட்டமின் E, கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் E சத்தை அதிகமாக உறிஞ்சி உடலுக்குள் சேர்க்கும் திறன் கொண்ட ஆலிவ் ஆயில் இம்மூன்றின் உதவியால் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நோய்களை உண்டாக்கும் கிருமிகள் உடலுக்குள் நுழைவதும் தடுக்கப்படும்.
இத்தனை நன்மைகள் தரக்கூடிய இந்த ஆப்பிள் - வால்நட் சாலட்டை நாமும் அடிக்கடி உட்கொண்டு நலம் பல பெறுவோம்.