A summer health drink that makes you ask for 'ones more' https://www.youtube.com
ஆரோக்கியம்

ஒன்ஸ்‘மோர்’ எனக் கேட்க வைக்கும் கோடைக்கால ஆரோக்கிய பானம்!

ஆர்.ஜெயலட்சுமி

கோடை வெயில் கடுமையாகக் கொளுத்தத் தொடங்கி விட்டது. கோடைக் காலத்தில் உங்கள் ஆரோக்கியத்தை கவனித்து உடலுக்கு குளிர்ச்சியை வழங்கும் உணவை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இந்த விஷயத்தில் மோர் மிகவும் நன்மை பயக்கும். தயிருடன் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்கி தயாரிக்கப்படுவது மோர். இது தயிரைக் காட்டிலும் அதிக பலன் தருகிறது.

கோடைக் காலத்தில் அனைவர் வீட்டிலும் மோர் கட்டாயம் இருக்க வேண்டும். இது உடலுக்கு  குளிர்ச்சியையும் ஆற்றலையும் தருவது மட்டுமின்றி, ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். கோடைக் காலத்தில் உடலில் தண்ணீர் பற்றாக்குறையை போக்க கண்டிப்பாக மோர் அருந்த வேண்டும்.

மோர் சத்துக்களின் களஞ்சியம் என்றால் மிகையல்ல. உப்பு, சர்க்கரை, புதினா ஆகியவை சேர்த்து மோர் குடித்தால் நீர்சத்து குறைபாடு, வயிற்றுப்போக்கு, உடல் உஷ்ணம் ஆகியவை நீங்கிவிடும். அதிக வெப்பத்தால் பல நேரங்களில் கண்களில் எரிச்சல் ஏற்படும். மோர் குடிப்பதால் உடலுக்கு உள்ளிருந்து குளிர்ச்சி கிடைக்கும். இதனால் கண்கள் எரியும் உணர்வும் நீங்கும். அதேபோல், சிலருக்கு சருமத்தில் எரியும் உணர்வு இருக்கும். அப்படி இருந்தால் மோரை சருமத்தில் தடவ, உடனடி நிவாரணம் கிடைக்கும். கோடையில் அசிடிட்டி பிரச்னை தலைதூக்கும். மோர் அசிடிட்டிக்கு ஒரு அருமருந்தாக செயல்படுகிறது. மோரில் கொஞ்சம் கல் உப்பு, கரு மிளகு சேர்த்து குடித்து பாருங்கள் அமிலத்தன்மை உடனே குறைந்து விடும்.

மோரில் உள்ள எலெக்ட்ரோலைட்ஸ் நம் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகிறது. ஒரு கிளாஸ் மோருடன் உப்பு சேர்த்து தினம் குடித்து வர உடல் மற்றும் சரும வறட்சி பிரச்னைகள் நீங்கும். உண்ணும் உணவில் உள்ள கழிவுகளைப் போக்கி உணவின் சத்துக்களை முழுமையாக உடலுக்குக் கொண்டு சேர்க்கும் பணியை மோரில் உள்ள சேர்மங்கள் செய்கின்றன. இதனால் கல்லீரலின் ஆரோக்கியம் மேம்படும்.

மலச்சிக்கல், செரிமான பிரச்னை உள்ளவர்கள் மோர் குடிப்பது நல்லது. மோரில் காணப்படும் ப்ரோபயோடிக்ஸ் என்ற பாக்டீரியாக்கள் உடலில் செரிமான செயல்பாட்டை மேம்படுத்து உதவுகிறது. உடலில் சேரும் நச்சுப் பொருட்களை வெளியேற்றும் பணியை மோர் மிகச் சிறப்பாக செய்கிறது. மோர் கொண்டு முகத்திற்கு மசாஜ் செய்து வந்தால் சருமத்தில் உள்ள நச்சுக்கள் நீக்கி சருமம் பொலிவு பெறும்.

மசாலா பொருட்கள் நிறைந்த கடின உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது வயிற்றில் ஏற்படும் எரிச்சல் போன்ற உணர்வினை கட்டுப்படுத்த ஒரு கிளாஸ் மோருடன் இஞ்சி சேர்த்து குடிப்பது நல்லது. மாதவிடாய் காலங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் அதிகப்படியான இரத்தப்போக்கு பிரச்னைக்கும், வயிற்று வலிக்கும் மோர் ஒரு சிறந்த மருந்தாக உள்ளது. ஒரு கோப்பை மோரில் வெந்தயம் சேர்த்து குடித்து வர, இந்தப் பிரச்னைகள் நீங்கும்.

மோரில் பயோ ஆக்டிவ் புரதங்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் காணப்படுகின்றன. இவை நம் உடல் செல்களில் உள்ள சோடியத்தின் அளவை சமநிலைப்படுத்த உதவுவதோடு, இரத்த அழுத்தத்தையும் சமநிலைப்படுத்துகிறது.

மோரில் புரதச்சத்து அதிக அளவு காணப்படுகிறது. இந்தப் புரதம் உடலில் சேரும்போது நம் உடம்பில் இருக்கும் கொழுப்பின் அளவு குறைக்கப்படுகிறது. எனவே, ஆரோக்கியமான உடல் எடை குறைப்பு விரும்புவோர் மோரை அதிகமாக பருக வேண்டும். ஆரோக்கியமான எலும்புகளுக்கு முக்கியமான கால்சியம் மற்றும் பிற தாதுக்கள் மோரில் ஏராளமாக உள்ளன. தொடர்ந்து மோர் உட்கொள்வது ஆஸ்டியோ போரோசிஸ் போன்ற எலும்பு நோய்களை தடுக்க உதவுகிறது.

கோடைக் காலத்தில் உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். இத்தச் சூழ்நிலையில் நீங்கள் தொடர்ந்து மோர் குடித்து வந்தால் உங்கள் உடல் எப்போதும் நீர்ச்சத்துடன் இருக்கும். கோடைக்காலத்தில் தொடர்ந்து மோர் உட்கொள்வதால் வயிற்றில் வெப்பம் தணிந்து உள்ளிருந்து புத்துணர்ச்சி பெறலாம். மோர் வைட்டமின் சி மற்றும் பி ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்த இரண்டு சத்துக்களும் முடி மற்றும் சருமத்திற்கு மிகவும் நன்மை அளிக்கிறது.

மோரை ஒருபோதும் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இதனால் வயிற்று பிரச்னைகள் ஏற்படும். வெளியில் செல்வதற்கு முன் மோர் குடிக்கலாம். ஆனால், வெயிலில் இருந்து வந்த உடனே குளிர்ந்த மோர் குடிக்கக் கூடாது. அதிக வேலை செய்யும் நேரத்தில், வெளியிடங்களுக்குச் செல்லும் நேரத்தில் பசி எடுத்தால் பசிக்கும் போதெல்லாம் வேறு எதையும் சாப்பிடுவதற்கு பதிலாக ஒரு கிளாஸ் மோர் குடித்துப் பழகுவது நல்லது.

வாழ்க்கை என்பது கொடுக்கல் வாங்கல் மட்டுமல்ல…

புடவைக் கட்டும் பொழுது பெண்கள் செய்யக்கூடாத 9 தவறுகள்!

நிமிர்ந்த நடைக்கு ஆதாரமான முதுகெலும்பை பராமரிக்க 10 எளிய வழிகள்!

புதுமைக்கொரு எடுத்துக்காட்டு; துணிச்சலுக்கு ஓர் அடையாளம் - HBD பார்த்திபன் Sir!

நிக்ரஹம் செய்யத் தெரியாதவள்!

SCROLL FOR NEXT