“ஐயோ! ஒரே தலைவலியா இருக்கே. சரி கொஞ்சம் தைலத்தை எடுத்து தடவுவோம்” என நினைக்கும் நபரா நீங்கள்? இந்த பதிவு உங்களுக்காகதான். தலைவலி என்பது பலரை பாதிக்கும் ஒரு உடல் பிரச்சனையாகும். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். இதை சரி செய்வதற்கு பெரும்பாலும் தைலங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் தலைவலிக்கு அடிக்கடி தைலம் தடவுவது சரியா? இதன் நன்மை, தீமைகள் என்னென்ன என்பது பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
தைலத்தின் நன்மைகள்:
சந்தையில் கிடைக்கும் பல தைலங்கள் வலிக்கு உடனடி நிவாரணம் அளிக்கின்றன. இவை தசைப்பிடிப்பை குறைத்து தலைவலியின் தீவிரத்தை குறைக்க உதவும்.
பல தைலங்கள் நறுமணமுடையவை என்பதால், இவை மனதை தளர்த்தி மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. சில தைலங்கள் ரத்த ஓட்டத்தை அதிகரித்து தலைவலிக்கு உடனடியான நிவாரணத்தை அளிக்கும்.
இரவில் தைலம் தடவுவதால் தூக்கம் மேம்பட்டு உறக்கமின்மையால் ஏற்படும் தலைவலி பாதிப்புகள் இல்லாமல் போகலாம்.
தைலத்தின் தீமைகள்:
சிலருக்கு, தைலங்களில் உள்ள பொருட்களால் அலர்ஜி ஏற்பட்டு தோல் அரிப்பு, வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். கண்களில் தவறுதலாக தைலம் பட்டுவிட்டால் அது அதிக எரிச்சலை ஏற்படுத்தும். சில வகை தைலங்கள் தலைமுடி உதிர்வை ஏற்படுத்துவதாக சொல்லப்படுகிறது.
தைலங்கள் தலைவலிக்கு தற்காலிக நிவாரணம் மட்டுமே அளிக்கும். தலைவலியின் உண்மையான காரணத்தை இவற்றால் சரி செய்ய முடியாது. தைலங்களை அதிகமாக பயன்படுத்துவது சரும பாதிப்பை ஏற்படுத்தி, தீவிர பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
தலைவலிக்கு அடிக்கடி தைலம் தடவுவது அவசியம் இல்லை. தலைவலியின் உண்மையான காரணத்தைக் கண்டறிந்து அதற்கு ஏற்ப சிகிச்சை பெறுவது நல்லது. அதுவும் மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே தைலங்களை பயன்படுத்த வேண்டும். எனவே, இனி நீங்களாகவே தலைவலி வந்தால் அதிகமாக தைலத்தை எடுத்து தேய்க்காமல், அதற்கான உண்மையான காரணத்தை கண்டறிந்து, நிவாரணம் பெறுவது நல்லது.
உங்களுக்கு ஒருவேளை தலைவலி மிகவும் கடுமையாக இருந்தாலோ, நீங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகள் பலன் தரவில்லை என்றாலோ மருத்துவரை கட்டாயம் அணுக வேண்டும். அல்லது தலைவலியுடன் கூடிய வாந்தி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால், மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எந்த மருந்துகளையோ தைலத்தையோ பயன்படுத்தக் கூடாது.
தலைவலிக்கு தைலங்கள் தற்காலிக நிவாரணம் அளிக்கலாம் என்றாலும், அவற்றை அடிக்கடி பயன்படுத்துவது நல்லதல்ல. ஆரோக்கியமான வாழ்க்கை முறை, போதுமான உறக்கம் மன அழுத்தம் இல்லாமல் இருப்பது போன்றவை தலைவலியைத் தடுக்க உதவும்.