ஆரோக்கியம்

குழந்தைகளுக்கு டயபர் நல்லதா? டயபர் போட்டால் என்னென்னப் பிரச்னைகள் ஏற்படும்?

கல்கி டெஸ்க்

என். கங்கா, குழந்தைகள் நல மருத்துவர்

திருமணம் போன்ற விசேஷங்களில் பங்கேற்கும் போதோ, வெளியூர் பயணத்தின்போதோ குழந்தைகளுக்கு டயபர் அணிவிப்பது வழக்கமாகி வருகிறது. தங்கள் வசதிக்காக குழந்தைகளுக்கு டயபர் அணிவிக்கும் தாய்மார்கள், அதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பை உணர்வதில்லை. தொடர்ந்து டயபர் அணிவிப்பதால் ஏற்படும் தீமைகள் என்ன? டயபர் அணிவிக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? பார்ப்போமா?

பெண் குழந்தைகளுக்கு டயபர் அணிவிக்கும்போது அது பிறப்புறுப்பைத் தொட்டுக்கொண்டே இருக்கும். இதனால் அந்த இடத்தில் தோலில் அழற்சி Dermatisis ஏற்படும். சிறுநீரில் உள்ள யூரியா போன்ற வேறு உப்புகள் குழந்தையின் தோலில் தடிப்பு மற்றும் வீக்கத்தை ஏற்படுத்துவதோடு, பூஞ்சைத் தொற்றையும் ஏற்படுத்தும். காற்றோட்டம் இல்லாத ஈரமான இடங்களில் பூஞ்சைத் தொற்று எளிதில் ஏற்படும். கிருமிகள் பிறப்புறுப்பின் உள்ளே சென்று யூரினரி இன்ஃபெக்ஷனை ஏற்படுத்தக்கூடும். பெண் குழந்தைகளுக்கு இந்தப் பாதிப்பு அதிகம்.

ஆண் குழந்தைகளுக்கு டயபர் அணிவிக்கும்போது அது விரைப்பையில் பட்டு அதிகச் சூட்டை உண்டாக்கும். இந்தச் சூடு அவர்களுக்கு நல்லதல்ல. இதனால் அணுக்கள் பாதிக்கப்பட்டு பின்பு  விந்தணு உற்பத்தியாவது குறையக்கூடும். இந்தப் பாதிப்பு குழந்தையாக இருக்கும்போது தெரிய வாய்ப்பில்லை. ஆனால் அவர்கள் வளர்ந்து பெரியவர்களான பின்புதான் தெரிய வரும்.  

ஜெல் டெக்னாலஜி உள்ள டயபர் நல்லது என்று சிலர் கருதுகிறார்கள். ஆனால், ஜெல்லில் உள்ள ரசாயனப் பொருட்கள் குழந்தையின் மென்மையான தோலுடன் வினைபுரிந்து அதிகமான அழற்சியை ஏற்படுத்தலாம்.

இரவு நேரங்களில் டயபர் அணிவிக்கும்போது குழந்தைகள் சிறுநீர், மலம் கழித்தால் அம்மாவுக்குத் தெரியாது. ஆனால் குழந்தை அசௌகரியமாக உணரும். கழிவில் உள்ள பாக்டீரியாக்களால் அரிப்பு, எரிச்சல் ஏற்பட்டு  சிறிது நேரத்திலேயே அந்தக் குழந்தை அழ ஆரம்பிக்கும்.

தளர்வான டயபர்களே சிறந்தவை. தசைகளை இறுக்கிப் பிடிப்பது போன்ற டயபர்களைத் தவிர்க்கவும். பயன் படுத்தியே ஆகவேண்டிய நிலையில் வயதுக்கேற்ற டயபர்களை வாங்கிப் பயன்படுத்தவும்.

ஒருவகை விஸ்கோஸ் இழையால் தயாரித்த டயபர்களை உபயோகிப்பது சிறந்தது. ஆனால் அது இந்தியாவில் கிடைப்பது அரிது. அந்த டயபரையுமே கூட அதிக பட்சமாக இரண்டு மணி நேரம்தான் பயன்படுத்த வேண்டும்.

பிளாஸ்டிக் இழைகள் கலந்ததைக் கட்டாயம் தவிர்க்கவும். இது அரிப்பு, வறட்சி மற்றும் தோல் சிவந்துபோதல், புண் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.

சில நேரங்களில், ஒரு சில காலகட்டத்தில், டயபர் அணிவிப்பதை முற்றிலும் தவிர்ப்பது என்பது இயலாத காரியம். வெளியூர் மற்றும் விசேஷங்களுக்குச் செல்லும்போது அணிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலைகளில், இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக டயபரை மாற்றவேண்டும்.

டயபரைக் கழற்றியவுடனே அடுத்ததை அணிவிக்கக் கூடாது. கொஞ்ச நேரம் (சுமார் அரைமணி நேரம்)  காற்றுபட விட்டுவிட்டு பிறகு போடவும்.

குழந்தை சிறுநீரோ, மலமோ கழிக்கவில்லை என்பதற்காகப் பயன்படுத்தியதையே திரும்பப் போட்டுவிடக்கூடாது. புதிதாகத்தான் அணிவிக்கவேண்டும்.

டயபர் போடும்போது சிறிது தேங்காய் எண்ணெய் தடவினால் தடிப்பு ஏற்படுவது குறையும் என்று சிலர் எண்ணுகிறார்கள். அது தவறு. சிறுநீரில் உள்ள யூரியா மற்றும் மற்ற உப்புக்களானது எண்ணெயுடன் வினைபுரிந்து மேலும் பாதிப்பை அதிகரிக்கும்.

டயபர்களைக் கண்ட இடங்களில் தூக்கி வீசுவது கூடாது.

ஒன்றரை வயதைத் தாண்டிய குழந்தைகளுக்கு டயபரைத் தவிர்த்து ‘டாய்லெட் ட்ரெய்னிங்’ கொடுக்க வேண்டும். தொடர்ந்து டயபர் போடும் குழந்தைகளுக்கு இந்தப் பயிற்சி அளிப்பது தாமதமாகும். இதை முதலில் இருந்தே கவனத்தில் கொள்வது அவசியம்.

நிறைய தாய்மார்கள் டயபருக்கு மேல் பேண்டீஸையும் அணிவிக்கிறார்கள். அது முற்றிலும் தவறு. இதனால் காற்றோட்டம் சுத்தமாகக் கிடைக்காது. இதே மாதிரி தொடர்ந்து அணிவிக்கும்போது குழந்தைகளின் இரண்டு தொடைகளும் விலகி அவர்களுடைய நடையில் மாற்றம் ஏற்படும்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT