Panai kizhangu 
ஆரோக்கியம்

பனங்கிழங்கு சாப்பிடுவதில் இத்தனை நன்மைகள் இருக்கா?

நான்சி மலர்

னங்கிழங்கு விற்பதை எத்தனையோ முறைப்  பார்த்திருப்போம். இருப்பினும் அதை வாங்கி சாப்பிடாமல், ‘இதிலென்ன பெரிதாக நன்மைகள் இருக்கப் போகிறது’ என்று அலட்சியமாக எண்ணியிருப்போம். ஆனால், இதில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகளைக் கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

பனங்கிழங்கு என்பது நேரடியாக நமக்கு மரத்தில் இருந்து கிடைப்பது கிடையாது. பனை மரத்திலிருந்து கிடைக்கும் பனம் பழத்தை மண்ணிலே புதைத்து விட்டால், ஒரு சில மாதத்திலேயே அதிலிருந்து முளை விட்டு வரத்தொடங்கும். இப்போது அதை தோண்டிப் பார்த்தால் நீளமான குச்சி போன்று வந்திருக்கும். அதுதான் பனைக்கிழங்கு என்கிறார்கள். பனங்கிழங்கை உணவில் எடுத்துக்கொள்வதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.

பனங்கிழங்கை தோலை நீக்கி விட்டு பாத்திரத்தில் உப்பு, சிறிது மஞ்சள் சேர்த்து தண்ணீர் விட்டு வேக வைக்க வேண்டும். இப்போது வெந்த கிழங்கில் நாரை மட்டும் நீக்கிவிட்டு அப்படியே சாப்பிடலாம். இதை காய வைத்து அரைத்து மாவாகவும் பயன்படுத்தலாம்.

உடல் எடை குறைவாக இருப்பவர்கள் உடல் எடை அதிகரிக்க பனங்கிழங்கை சாப்பிடலாம். பனங்கிழங்கு உடல் சூட்டை குறைக்கக்கூடியது. மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பனங்கிழங்கை உணவில் எடுத்துக்கொள்ளும்போது, இதில் உள்ள அதிகமான நார்ச்சத்து செரிமான மண்டலத்தை சீராக்கி மலச்சிக்கலைப் போக்கும்.

பலகீனமான கர்ப்பப்பையைக் கொண்ட பெண்கள் தேங்காய் பாலுடன் பனங்கிழங்கு மாவை சேர்த்து சாப்பிட்டு வந்தால், கர்ப்பப்பை வலுப்பெறும். இதையே ஆண்கள் சாப்பிடும்போது ஆண்மைத்தன்மை அதிகரிக்கும். பனங்கிழங்கில் அதிகமாக இரும்புச்சத்து உள்ளதால், இரும்புசத்து குறைப்பாட்டால் ஏற்படும் இரத்த சோகையை குணமாக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.

சர்க்கரை நோயாளிகள் பொதுவாக பூமிக்கு அடியில் விளையும் எந்தக் கிழங்கையும் சாப்பிடக் கூடாது என்று சொல்வார்கள். ஆனால், பனங்கிழங்கில் உள்ள சில வேதிப்பொருட்கள் இன்சுலினை சுரக்கச் செய்ய உதவுகிறது. எனவே, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக்க இது உதவுகிறது. பனங்கிழங்கு மாவில் களி, புட்டு, கஞ்சி போன்றவையும் செய்யலாம். இலங்கையில் ‘ஒடியல் கூழ்’ என்று பிரசித்திப் பெற்ற உணவிருக்கிறது. அது இந்த பனங்கிழங்கு மாவை வைத்து செய்யக் கூடியதாகும்.

பசும்பாலுடன் பனங்கிழங்கு மாவை சேர்த்து காய்ச்சி  குழந்தைகளுக்குக் கொடுத்து வர அவர்களின் உடல் வளர்ச்சி அதிகரிக்கும். இதில் அதிகமாக கால்சியம் இருப்பதால், எலும்புகள் வலுப்பெற உதவுகிறது. எனவே, இனி பனங்கிழங்கை உணவில் அதிகமாக சேர்த்துக்கொண்டு நன்மையடையுங்கள்.

புயல் காற்றையே தடுத்து நிறுத்தும் ஆற்றல் கொண்ட அலையாத்திக் காடுகள்!

சிறுகதை; தண்டனை!

AI தொழில்நுட்பத்தை மாணவர்கள் பயன்படுத்துவதன் சாதக பாதகங்கள் என்னென்ன தெரியுமா? 

குடித்துவிட்டு ரகளை செய்த வடிவேலு, முரளி… கண்டித்த விஜயகாந்த்… பின் என்ன நடந்தது தெரியுமா?

சிறுகதை: திருடு போன திருஷ்டி பொம்மை!

SCROLL FOR NEXT