இப்போதெல்லாம் பலர் வயிற்று உபாதைகளால் அதிகமாக அவதிப்படுகின்றனர். இதற்குக் காரணம் தற்போதைய நவீன உலகில் மாறியுள்ள உணவுமுறைப் பழக்கங்கள்தான். மேலும், நேரத்திற்கு சரியாக உணவை எடுத்துக்கொள்ளாமையால் இத்தகைய பிரச்னைகள் அதிகம் ஏற்படுகின்றன. உங்களுக்கு செரிமானப் பிரச்னை இருந்தால், சில விஷயங்களைத் தவிர்த்தாலே அதிலிருந்து விடுபடலாம். அவை என்னென்ன என்பது பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
உங்களுக்கு செரிமானப் பிரச்னை இருந்தால் முதலில் நீங்கள் தவிர்க்க வேண்டியது இறைச்சி சார்ந்த உணவுகள்தான். இறைச்சியில் உள்ள அதிகமான எண்ணெய் மற்றும் கொழுப்புகள் செரிமானப் பிரச்னையை மேலும் அதிகமாக்கும்.
நொறுக்குத் தீனிகள் அதிகம் சாப்பிடுவதை நிறுத்துங்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகள், கார வகைகள், கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அதேபோல், பால் பொருட்களையும் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக, வெண்ணெய், பன்னீர் போன்றவை செரிமானத்திற்கு நேரம் அதிகம் எடுக்கும் என்பதால், அது உங்கள் செரிமான பாதிப்பை மேலும் அதிகரிக்கும்.
கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்த உணவுகளான பாஸ்தா, ரொட்டி, கோதுமை, பழுப்பு அரிசி ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டாம். இதில் அதிகப்படியான மாவுச்சத்து இருப்பதால் செரிமானத்தைத் தாமதமாக்கி ஒவ்வாமைக் கோளாறுகளை ஏற்படுத்தும்.
வயிற்று உபாதைகளால் அவதிப்படுபவர்கள் சிட்ரஸ் பழங்களான பெர்ரி, பீச், திராட்சைப்பழம், தக்காளி, அவகோடோ போன்றவற்றை சாப்பிட வேண்டாம். இதனால் வயிற்றில் அமிலத்தன்மை அதிகரித்து மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தும். அதேபோல, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் என எதையும் சாப்பிடக்கூடாது. இது நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும்.
உங்களுக்கு செரிமான பிரச்னை இருந்தால் அதிகப்படியாக தண்ணீர் குடியுங்கள். தண்ணீருக்கு நிகரான சிறந்த மருந்து எதுவும் இல்லை. போதிய அளவு தண்ணீர் குடித்தாலே, அது செரிமானம் ஆகாத உணவுகளை செரிமானம் ஆக வைக்கும். எனவே, எப்போது செரிமான பிரச்னை ஏற்பட்டாலும் முதலில் அதிகப்படியாக தண்ணீர் குடியுங்கள். அதேநேரம் மேலே குறிப்பிட்ட உணவுகளை எடுத்துக் கொள்வதைத் தவிருங்கள்.