லெமன் கிராஸ், வேப்பிலை, அஸ்வகந்தா, சீந்தில், இஞ்சி, துளசி 
ஆரோக்கியம்

மழைக்கால நோய்களைப் போக்கும் ஆயுர்வேத மூலிகைகள்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து பருவ மழை நிவாரணம் அளித்தாலும், அது சில நோய்களையும் கூடவே அழைத்து வந்துவிடும். சளி, இருமல், காய்ச்சல், டெங்கு, காலரா, மலேரியா போன்ற பல நோய்கள் ஏற்பட வழிவகுக்கும். இச்சமயத்தில் நோய்கள் நம்மையும் நம்  குழந்தைகளையும் தாக்காமல் தற்காத்துக்கொள்ள பாரம்பரிய மருத்துவ முறையான ஆயுர்வேதம் சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் நம்மை பாதுகாத்துக்கொள்ள வழிவகை செய்துள்ளது.

1. லெமன் கிராஸ்: எலுமிச்சை புல் எனக் குறிப்பிடப்படும் லெமன் கிராஸ் நம் உடலில் இருக்கும் நோயை உண்டாக்கக்கூடிய ஃப்ரீரேடிக்கல்ஸ்களை அகற்ற உதவும். வலி மற்றும் வீக்கத்தில் இருந்து நிவாரணம் தரும். கொலஸ்ட்ரால் லெவலை மேம்படுத்தும். லெமன்கிராஸ் டீ அல்லது சூப்பில் இதனை சேர்த்துக்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கி மழைக்கால நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்.

2. வேப்பிலை: வேப்பிலையில் உள்ள நிம்பிடின் மற்றும் நிம்போலைடுஆகியவை பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. எனவே, மழைக்காலத்தில் இளம் தளிரான வேப்ப இலைகள் மற்றும் குச்சிகளை வைத்து வேம்பு டீ தயாரித்து குடிப்பது அல்லது இளம் வேப்பிலைகளை மென்று சாப்பிடுவது நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். இதில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட், கிருமி நாசினிகள், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் போன்றவை நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கியப் பங்கு கொள்கிறது.

3. அஸ்வகந்தா: இது ஒரு அற்புதமான மூலிகை ஆகும். மன அழுத்தம், சோர்வு, வலி போன்றவற்றை குறைக்கும் சக்தி வாய்ந்த மூலிகை இது. இதில் இருக்கும் அற்புதமான பண்புகள் நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும். மழைக்காலத்தில் நம் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும்.

4. சீந்தில்: இதய வடிவில் இருக்கும் இந்த சீந்தில் ஆயுர்வேதத்தில் மிகவும் முக்கியமான மூலிகை ஆகும். இது சிறந்த ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட் பண்புகள் நிறைந்தது. இவை நம் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். காய்ச்சல், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவும் சீந்திலை டிகாஷனாகவோ, பவுடர் வடிவிலோ எடுத்துக்கொள்வது மழைக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.

5. இஞ்சி: இஞ்சியில் உள்ள பயோ ஆக்டிவ் உட்பொருளான ஜின்ஜரால் அழற்சி எதிர்ப்பு, ஆன்டி வைரஸ், ஆன்ட்டி ஆக்சிடென்ட் மற்றும் ஆன்ட்டி பாக்டீரியல் பண்புகளைக் கொண்டுள்ளன. உணவில் இஞ்சி சேர்த்துக்கொள்வது மலச்சிக்கல், வாயு போன்ற பிரச்னைகளை சரி செய்யும். இஞ்சி டீ பருகுவதும், தயாரிக்கும் ரசம், சூப்புகளில் இஞ்சி விழுதுகளை சேர்ப்பதும் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். காய்ந்த இஞ்சியை நாட்டு சர்க்கரை, மிளகுடன் சேர்த்து பொடித்து 1 கப் சூடான நீரில் ஒரு ஸ்பூன் அளவில் கலந்து சாப்பிட இருமல், சளி குணமாகும். ஆஸ்துமா நோயாளிகளுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். அதற்கு இஞ்சி சாறு சிறிது எடுத்து சூடான நீர் கலந்து பருக நுரையீரலில் இறுக்க நிலை குறைந்து மூச்சு விடுவதில் இருக்கும் சிரமம் நீங்கும்.

6. வைட்டமின் சி: வைட்டமின் சி நிறைந்த காய்களையும், பழங்களையும் எடுத்துக் கொள்வது நல்லது. ஆரஞ்சு, எலுமிச்சை, பப்பாளி, கொய்யா போன்ற நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட பழங்களை எடுத்துக்கொண்டால் உடம்பில் சளி சேராது.‌ மழைக்காலங்களில் நீர்ச்சத்து அதிகம் உள்ள காய்களான சுரைக்காய், பூசணி, வெள்ளரி போன்றவை சிலருக்கு ஒத்துக் கொள்ளாது. இவர்கள் பொரியல், கூட்டு செய்யும் சமயம் மிளகுப் பொடி சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.

7. துளசி: ஆயுர்வேதத்தில் துளசி முக்கியமான ஒரு மூலிகையாகும். சளி, காய்ச்சல் போன்றவற்றை சரி செய்ய உதவும் துளசியில் இயற்கையாகவே பாக்டீரியாவை எதிர்த்துப் போராட கூடிய பண்புகளும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் தொற்றுகள் ஏற்படாமல் தடுத்து நம்மைப் பாதுகாக்கிறது. தினமும் நான்கு ஐந்து துளசி இலைகளை பச்சையாக நின்று சாப்பிடலாம் அல்லது தேனீர் தயாரிக்கும் போது சேர்த்து அருந்தலாம்.

இவையெல்லாம் மழைக்கால நோய்கள் நம்மை அணுகாமல் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT