பல வகையான டீ வகைகள் இருந்தாலும், நாம் தூக்கிப்போடும் வாழைப்பழத் தோலை வைத்து செய்யும் டீ, நம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதாகும். அந்தவகையில் இந்த டீயின் செய்முறை மற்றும் நன்மைகள் ஆகியவற்றைப் பார்ப்போம்.
எப்போதும் வாழைப்பழத்தை சாப்பிட்டுவிட்டு தோலைத் தூக்கி எறிவோம். ஆனால், நாம் தூக்கி எறியும் தோலில் அவ்வளவு நன்மைகள் உள்ளன. அந்தத் தோல் வைத்து டீ செய்வது எப்படி என்று பார்ப்போம்.
வாழைப்பழத் தோல் டீ செய்வதற்கு தேவையான பொருட்கள்:
1. 2 பழத்தின் வாழைப்பழத் தோல்கள்
2. தண்ணீர் – 4 கப்
செய்முறை:
வாழைப்பழத் தோலை எடுத்து நன்றாக கழுவிக்கொள்ளுங்கள். அதனை சிறிது சிறிதாக வெட்டி எடுத்து தனியாக வைத்துக்கொள்ளலாம்.
பின் ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் ஊற்றி, அதில் நறுக்கிய வாழைப்பழத் தோலைப் போட்டு நன்றாக கொதிக்கவிடவும்.
நன்றாக கொதிக்கவிட்டப்பிறகு, அதை வடிகட்ட வேண்டும். இனிப்பு வேண்டுமென்பவர்கள், சர்க்கரை அல்லது தேன் சேர்த்துக் குடிக்கலாம்.
மிக எளிதான முறையில் வாழைப்பழத் தோல் டீ ரெடி!
டீயின் நன்மைகள்:
1. இது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி, சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும்.
2. வாழைப்பழத் தோலில் உள்ள ஆன்டி – ஆக்ஸ்டண்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், உடலில் ஏற்படும் அழற்சிகளை தடுக்கின்றன.
3. இந்த தேநீர், உங்கள் மனதை ரிலாக்ஸாக வைத்துக்கொள்ளும். மன அழுத்தம், பதட்டம் போன்ற பிரச்னைகள் நீங்கி மனம் நிம்மதியாக இருக்கும்.
4. மேலும், இது செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும். இதனை எடுத்துக்கொள்வதன் மூலம், குடல் சிக்கல் சீராகி, மலச்சிக்கல் மற்றும் அஜீரணக் கோளாறுகள் ஆகியவை குணமாகும். இது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி, ஆரோக்கியமான செரிமானத்திற்கு வழிவகுக்கும்.
5. இரவில் தூக்கம் வராதவர்கள், இந்த தேநீர் அருந்திவிட்டுத் தூங்கலாம். இந்த வகையான டீயில், மக்னீசியம் மற்றும் டிரிப்டோபான் போன்ற சத்துக்கள் உள்ளன. இவை உடலை ரிலாக்ஸ் செய்து இரவில் நிம்மதியான மற்றும் அமைதியான தூக்கத்திற்கு வழி செய்கின்றன.
ஆகையால், இனி வாழைப்பழம் வாங்கும்போதெல்லாம், வீட்டில் வாழைப்பழத் தோல் டீ போட்டு குடியுங்கள். ஆரோக்கிய வாழ்க்கையை அனுபவியுங்கள்.