தென்னிந்தியாவில் பிரபலமான தோசை, உலகெங்கிலும் உள்ள மக்களின் சுவை மொட்டுக்களையும் கவர்ந்துள்ளது. புளிக்கவைக்கப்பட்ட அரிசி மற்றும் உளுந்து மாவிலிருந்து தயாரிக்கப்படும் இந்த சுவையான தோசை பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இந்தப் பதிவில் தோசையை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
அதிக ஊட்டச்சத்துக்கள்: தோசை, அரிசி மற்றும் உளுத்தம் பருப்பு கலவையிலிருந்து தயாரிக்கப்படுவதால் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அனைத்துமே இதில் அடங்கியுள்ளது. புளித்த மாவு இயற்கையான நொதித்தல் செயல்முறைக்கு உட்பட்டு அதன் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்கிறது. தோசை கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், நார்ச்சத்து, விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகியவற்றின் நல்ல மூலமாகும்.
செரிமான ஆரோக்கியம்: தோசை தயாரிப்பதற்கு நொதிக்க வைக்கப்பட்ட மாவு பயன்படுத்தப்படுவதால் அதில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்கள் உடைந்து, எளிதில் ஜீரணிக்க உதவுகிறது. தோசை போன்ற புளித்த உணவுகளில் உள்ள ப்ரோபயோடிக்கள் ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரிகளை ஊக்குவிக்கிறது. இதனால் செரிமான அமைப்பு நன்கு செயல்பட்டு ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
இதய ஆரோக்கியம்: தோசையில் குறைந்த நிறைவுற்ற கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் இருப்பதால் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்த தேர்வாகும். தோசையில் உள்ள உளுத்தம் பருப்பு தாவர அடிப்படையிலான புரதத்தை உடலுக்கு சேர்க்கிறது. இது இதய நோயின் அபாயத்தைக் குறைக்க உதவும். மேலும் தோசையின் நொதித்தல் செயல்முறை, இரும்புச்சத்து உறிஞ்சும் தன்மையை அதிகரித்து ஆரோக்கியமான ரத்த ஓட்டத்தை பராமரிக்க உதவுகிறது.
எடை மேலாண்மை: ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்க விரும்புபவர்கள் தோசையை உணவில் தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம். தோசையில் புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே இதை சாப்பிடும்போது விரைவாக வயிறு நிறைந்த உணர்வை ஏற்படுத்தும். இதனால் அதிகமாக உணவு உட்கொள்வது தடுக்கப்படுகிறது. தோசையில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் நீடித்த ஆற்றலை வழங்கி, ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
Gluten free: தோசை இயல்பாகவே பசையம் இல்லாதது. எனவே பசையமில்லாத உணவைப் பின்பற்றுபவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும். செலியாக் நோய் மற்றும் பசையம் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் தங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்க தோசையை தாராளமாக சாப்பிடலாம்.