ஆரோக்கியமும் அடர்த்தியும் கொண்ட அழகான தலை முடி வேண்டும் என்பது ஆண், பெண் பாகுபாடின்றி நாம் அனைவருக்கும் உள்ள பொதுவான ஆசையாகும். அதை நாம் முடி வளர்ச்சிக்கு உதவக்கூடிய பீட்டா கரோட்டீன் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் சத்து நிறைந்த உணவுகளை உண்பதின் மூலம் சுலபமாகப் பெறலாம். இனி, பீட்டா கரோட்டீன் அதிகமுள்ள ஏழு உணவுகள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
* ஸ்வீட் பொட்டட்டோவில் பீட்டா கரோட்டீன், புரோட்டீன், இரும்புச் சத்து, வைட்டமின் C போன்றவை அதிகம் உள்ளன. இவை முடிக் கால்களின் நுண்ணறைகள் (Follicles) சேதமடையாமல் பாதுகாக்கவும், முடி உதிர்வைத் தடுக்கவும் செய்கின்றன.
* ரெட் பெல் பெப்பரில் பீட்டா கரோட்டீன், வைட்டமின் C அதிகம் உள்ளது. இது ஹேர் ஃபோலிக்கில்கள் சேதமடையாமல் பாதுகாக்கவும், முடி உதிர்வைத் தடுக்கவும் செய்வதோடு கொலாஜன் உற்பத்திக்கும் உதவுகிறது.
* பசலைக் கீரையில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன், இரும்புச் சத்து, வைட்டமின் C, E ஆகியவை முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன. ஸீபம் (Sebum) என்றொரு ஹேர் கண்டிஷனரை உற்பத்தி செய்யவும் இது உதவுகிறது.
* கேரட்டிலுள்ள அதிகளவு பீட்டா கரோட்டீன் தலையில் முடி வளரும் முழுப் பகுதியின் ஆரோக்கியம் காக்க உதவுகிறது. ஹேர் ஃபோலிக்கில்களின் ஆரோக்கியத்தையும் வலுவடையச் செய்கிறது.
* காலே என்ற பச்சை இலைக் காயில் பீட்டா கரோட்டீன், வைட்டமின் C, இரும்புச் சத்து, கால்சியம் ஆகியவை மிக அதிகம். இவை உச்சந்தலைப் பகுதியின் ஆரோக்கியம் காக்கவும், ஸீபம், கொலாஜன் உற்பத்திக்கும் உதவுகின்றன.
* ஆரஞ்சு, ஸ்ட்ராபெரி போன்ற சிட்ரஸ் வகைப் பழங்கள் முடி உதிர்வைத் தடுக்க உதவுகின்றன. இவற்றிலுள்ள மக்னீசியம், நார்ச்சத்து, பீட்டா கரோட்டீன், பிளவனாய்ட் ஆகிய அனைத்தும், தீங்கிழைக்கும் ஃபிரிரேடிகல்கள் மூலம் ஹேர் ஃபோலிக்கில்கள் சேதமடையாமல் பாதுகாக்கின்றன.
* மஸ்க் மெலன் ஸீபம் உற்பத்திக்கும், தலைப் பகுதியை நீரேற்றத்துடன் வைக்கவும் உதவுகிறது. இதிலுள்ள பீட்டா கரோட்டீன், வைட்டமின் C, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஹேர் ஃபோலிக்கில்கள் சேதமடையாமல் பாதுகாக்க உதவுகின்றன.
மேற்கூறிய ஏழு வகை உணவுகளை அடிக்கடி உட்கொண்டு ஆரோக்கியமும் அடர்த்தியும் கொண்ட தலைமுடியைப் பெறுவோம்.