திராட்சை எல்லோராலும் விரும்பி உண்ணக்கூடிய பழமாகும். பல நூற்றாண்டுகளாக திராட்சை நம் உணவுப் பழக்கத்தில் இருந்து வருகிறது. இதில் நிறைய வைட்டமின், மினரல் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளன. இருப்பினும், திராட்சையில் சிறந்தது பச்சையா அல்லது கருப்பா? என்ற சந்தேகம் நிறைய பேருக்கு உண்டு. அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
கருப்பு திராட்சை பார்ப்பதற்கு கருப்பு அல்லது பர்புள் நிறத்தில் இருக்கும். திராட்சையில் உள்ள Anthocyanin என்னும் ஆன்டி ஆக்ஸிடென்ட் திராட்சைக்கு கருப்பு நிறத்தைக் கொடுக்கிறது. இந்த திராட்சையில் உள்ள அதிகப்படியான இனிப்பின் காரணமாக இதை ஜாம், ஜூஸ், ஒயின் போன்றவை செய்யப் பயன்படுத்துவார்கள்.
கருப்பு திராட்சையில் இருக்கும் Resveratrol என்னும் ஆன்டி ஆக்ஸிடென்ட் அழற்சி எதிர்ப்பு மற்றும் கேன்சர் நோயைப் போக்கக்கூடிய குணங்களைக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும். கருப்பு திராட்சைக்கு காயத்தை விரைவில் ஆற்றக்கூடிய ஆற்றல் உள்ளது.
பச்சை திராட்சை புளிப்புத்தன்மை கொண்டது. எனவே, இதை ஒயின், திராட்சை ஜூஸ், உலர் திராட்சையாக எடுத்துக்கொள்வார்கள். பச்சை திராட்சையில் வைட்டமின் சி, கே, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து உள்ளன. மேலும், இதில் Flavonoids போன்ற ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. வைட்டமி கே இரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்டது. வைட்டமின் சி உடல் திசுக்களில் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்ய உதவுகிறது.
பொதுவாக, திராட்சையில், அதிகப்படியான வைட்டமின்கள் உள்ளன. இதில் அதிகப்படியான நார்ச்சத்து உள்ளதால், செரிமானத்திற்கும், எடையை பராமரிக்கவும் உதவுகிறது. திராட்சை உண்பதால் கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் சீராகும். சருமத்தில் நெகிழ்ச்சித்தன்மையை அதிகரித்து சருமத்தை பளபளப்பாக்கும். மேலும். வயதாவதைத் தடுத்து இளமையாக வைக்க உதவும். சருமத்தில் உள்ள கரும்புள்ளி, சுருக்கத்தை நீக்கும்.
எனவே, கருப்பு மற்றும் பச்சை என இரண்டு திராட்சைகளிலுமே நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் எந்த திராட்சையை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது அவரவர் உடல் தேவையைப் பொருத்தது. இனிப்பு அதிகமாக வேண்டும் என்று நினைப்பவர்கள் கருப்பு திராட்சையையும், இனிப்பு குறைவாக சற்று புளிப்புத்தன்மையோடு வேண்டும் என்று நினைப்பவர்கள் பச்சை திராட்சையையும் எடுத்துக்கொள்ளலாம்.