மார்பக புற்றுநோய் உலகெங்கிலும் உள்ள பெண்களை பாதிக்கும் ஒரு புற்றுநோய் வகையாகும். இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கத் தவறினால் மரணத்தை விளைவிக்கும். இந்தப் பதிவின் நோக்கம் மார்பக புற்றுநோயின் பொதுவான அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான்.
2020 ஆம் ஆண்டில் ஏற்பட்ட புற்று நோய்களில் 15 சதவீதம் மார்பக புற்றுநோயாக இருந்தது. மேலும் இது, பெண்களுக்கு ஏற்பட்ட புற்றுநோய் மரணங்களில், 30 சதவீதத்திற்கும் மேற்பட்ட மரணத்திற்கு காரணமாக அமைந்தது. இந்தியாவில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் மார்பக புற்றுநோய் முதலிடத்தில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 1.6 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
மார்பக புற்றுநோயின் அறிகுறிகள்:
மார்பகத்தில் கட்டி அல்லது தடிமனாதல்.
மார்பக தோலில் மாற்றங்கள், சிவத்தல் அல்லது தடித்தல் போன்றவை காணப்படும்.
முலைக்காம்பில் திரவ வெளியேற்றம் (தாய்ப்பால் தவிர).
முலைக்காம்பு புண் அல்லது விரிசல்.
மார்பகம் அல்லது அக்குள் பகுதியில் வலி.
மார்பக அளவு அல்லது வடிவத்தில் மாற்றம்.
தோலில் ஏற்படும் மாற்றங்கள், ஆரஞ்சு தோல் போன்ற தோற்றம்.
தடுப்பு முறைகள்:
ஒவ்வொரு மாதமும் உங்கள் மார்பகங்களை சுயபரிசோதனை செய்யுங்கள். 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படுகிறது. 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 1-2 வருடங்களுக்கு ஒரு முறை மோனோகிராம் செய்துகொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
பெண்கள் தங்களது ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். சீரான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு மற்றும் ஆரோக்கியமான எடையைப் பராமரித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். மது, புகை போன்ற தீய பழக்கங்கள் உள்ளவர்களுக்கு புற்றுநோய் அபாயம் அதிகரிக்கக்கூடும்.
குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது மார்பக புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மார்பகப் புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால் வெற்றிகரமாக சிகிச்சை அளித்து அதை குணப்படுத்த முடியும். மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் பற்றி விழிப்புடன் இருந்து தவறாமல் சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
அல்லது மருத்துவ பரிசோதனைகளுக்கும், மோனோகிராம்களுக்கும் செல்லுங்கள். ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றினால் மார்பக புற்றுநோயின் அபாயத்தை கணிசமாகக் குறைக்க முடியும். இதை பெண்கள் அனைவரும் புரிந்துகொண்டு தங்களது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி அக்கறையுடன் இருக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.