Causes and solutions for the problem of 'motion sickness'! 
ஆரோக்கியம்

‘மோஷன் சிக்னஸ்’ பிரச்னைக்கான காரணங்களும் தீர்வுகளும்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

சிலருக்கு பஸ், கார், வேன் என எதில் பயணம் செய்தாலும் தலைவலி, வாந்தி வந்துவிடும். சிலருக்கு மலையேற்றப் பயணங்களின்போதும், கப்பல், விமானப் பயணங்களின் போதும் வாந்தி வரும். இந்த தர்ம சங்கடத்தைப் போக்குவதற்கு சிலர் பயணத்தையே தவிர்த்து விடுவார்கள். இந்த ‘மோஷன் சிக்னஸ்’ (Motion Sickness) அல்லது ‘டிராவல் சிக்னஸ்’ எனப்படும் பிரச்னை நம்மில் நிறைய பேருக்கு உண்டு. குடும்பத்துடன் சேர்ந்து பயணம் செய்யும்போது இப்படி ஒருவர் மட்டும் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தால் மொத்த பயண அனுபவமும் பாதிக்கப்படும்.

பயணம் என்பது ஒரு பயனுள்ள அனுபவம். நம் மனதையும், உடலையும் சந்தோஷப்படுத்த வெளியிடங்களுக்குச் சென்று இயற்கை அழகை ரசிக்க விரும்பினாலும், பயணத்தின்போது ஏற்படும் வாந்தி, தலைவலி போன்றவை நம் மகிழ்ச்சியை பாதித்துவிடும். இனிமையான பயணத்தைத் தொடர மருத்துவரின் ஆலோசனைப்படி நாம் கைவசம் சில மருந்துகளை எடுத்துச் செல்வது நல்லது. சிலருக்கு மேடு, பள்ளங்கள் நிறைந்த சாதாரணமான சாலைகளில் பயணிக்கும் பொழுதே தலைவலி, வாந்தி போன்றவை ஏற்படும். சிலருக்கோ வளைந்து நெளிந்து செல்லும் சாலைகள் கொண்ட மலைப் பிரதேசங்களில் பயணிக்கும்போது தாங்க முடியாத தலைவலி, குமட்டல், வாந்தி போன்றவை ஏற்பட்டு பயண அனுபவத்தையே ரசிக்க முடியாமல் செய்துவிடும். சிலருக்கு வாந்தியுடன் வியர்த்துக் கொட்டுவதும் உண்டு.

இதனை தவிர்க்க என்ன செய்யலாம்?

கார், பஸ், வேன் என எதில் பயணம் செய்தாலும் ஜன்னல் அருகில் வெளியே பார்த்தபடி உட்கார்ந்து வர வேண்டும். அடிக்கடி சிறிதளவு தண்ணீரை குடிக்கலாம். டின்னில் அடைக்கப்பட்ட பானங்கள், காப்பி, டீ போன்றவற்றை குடிப்பதை தவிர்க்கலாம். பயணம் செய்யும்போது சிறிது நேரம் வாகனத்தை நிறுத்தி வெளியே இறங்கி காலாற இரண்டு நிமிடம் நடந்து விட்டு பயணத்தைத் தொடரலாம். நீண்ட தூரம் பயணம் செய்வதாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மாத்திரையை பயணத்திற்கு ஒரு மணி நேரம் முன்பு எடுத்துக் கொள்ளலாம். பார்வையை ஒருமுகப்படுத்தும் செயல்களான படிப்பது, போன் பார்ப்பது ஆகியவற்றைத் தவிர்க்கலாம்.

சிலருக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? அதற்கான காரணங்கள்: பயணம் செய்யும்பொழுது நம் கண்கள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு நகர்வதாக சொல்கின்றன. கை, கால்களோ நாம் எங்கும் நகரவில்லை என்பதை உணர்த்துகிறது. காதுக்குள் சுரக்கும் எண்டோலிஃம்ப் (endolymph) எனப்படும் திரவம் ஆடுவதால் மூளைக்கு தகவல் போய் பயணம் செய்வதை உணர்த்துகிறது. இப்படி இந்தக் குழப்ப உணர்வு காரணமாக சிலருக்கு வாந்தி வெளிப்படுகிறது. அதாவது நம் உள்காது உணர்வது ஒன்றாகவும், பார்க்கும் காட்சிகள் வேறொன்றாகவும் இருப்பதால் வாந்தி வருகிறது.

வாந்தி வராமல் இருக்க சில எளிய வீட்டு வைத்தியங்கள்: புளிப்பு மிட்டாய்களை பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும். பயணம் செய்வதற்கு முன்பு வயிறுமுட்ட சாப்பிடுவதைத் தவிர்த்து லேசான வயிறுடன் பயணிக்க வாந்தி வராமல் தடுக்கலாம். பயணத்தின்போது மது அருந்துவதையோ, புகை பிடிப்பதையோ தவிர்த்து விடலாம்.

குமட்டல், தலைச் சுற்றல், வாந்தி வருவது போன்ற உணர்வு போன்றவற்றை கட்டுப்படுத்த இஞ்சி உதவும். ஒரு துண்டு இஞ்சியை வாயில் ஒதுக்கிக் கொள்ளலாம் அல்லது இஞ்சி மொரப்பாவை சாப்பிடலாம்.

ஏலக்காய் ஒன்றை வாயில் போட்டு மென்று கொண்டு வர பிரச்னை தீரும். துளசி இலைகள் நான்கை வாயில் போட்டு மெல்லுவதால் வாந்தி வராது.

ஆழ்ந்த சுவாசம் வாந்தி வருவதை தடுக்கும். மெதுவாகவும், ஆழமாகவும் மூச்சை உள்ளிழுத்து வெளியேற்றலாம்.

எலுமிச்சம் பழத்தின் தோலைக் கிள்ளி அதன் வாசனையை முகர்ந்து கொண்டு வரலாம். லெமன் ஜூஸ் பருகலாம். புதினா இலைகளை கசக்கி முகர்ந்து பார்க்கலாம். முக்கியமாக நம்மை மனரீதியாக தயார்படுத்திக் கொண்டாலே வாந்தி வருவதைத் தடுக்கலாம்.

சிக்கனமும் சேமிப்பும் வீட்டின் இரு கண்கள்!

நகங்களை வலிமையாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்!

திருமாலுக்கும், பிரம்மனுக்கும் பாடம் புகட்டிய சிவபெருமான்!

தனிமையில் வாழும் ஹெர்ட்ஸ் திமிங்கலங்கள்… என்ன காரணம்?

ஐந்து நிலை கோபுரங்களை கொண்ட கந்தகோட்டம் கந்தசாமி கோவில்!

SCROLL FOR NEXT