உலக மக்களை மிகவும் அச்சுறுத்தும் நோய்களில் முக்கியமானது நீரிழிவு நோயாகும். இதில் வகை 1 நீரிழிவு, வகை 2 நீரிழிவு மற்றும் கர்ப்பகால நீரிழிவு போன்ற மூன்று வகைகள் உண்டு. நிர்வகிக்கப்படாத நீரிழிவு இருதய பிரச்னைகள், நரம்பு பாதிப்பு, கால் பாதிப்பு, சரும தொற்று நோய்கள் மனச்சோர்வு போன்ற பல பிரச்னைகளுக்கும் சிக்கல்களுக்கும் வழிவகுக்கும். இந்த ஆண்டு உலக நீரிழிவு தினத்தின் கருப்பொருள், ‘தடைகளை உடைத்தல் இடைவெளிகளைக் குறைத்தல்’ என்பதாகும். நீரிழிவு நோய் வராமல் தடுக்க உதவும் வழிமுறைகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
வழிமுறைகள்:
ஆரோக்கியமான எடை: உயரத்திற்கு ஏற்ற சரியான எடையை பராமரிப்பது மிகவும் அவசியம். சிறிதளவு உடல் எடையைக் குறைப்பது கூட நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்க உதவும்.
சரிவிகித உணவு: நொறுக்குத் தீனிகள், இனிப்பு பண்டங்கள், வறுத்துப் பொரித்த உணவுகள், துரித உணவு வகைகளை அறவே தவிர்த்து விட்டு சத்தான சமச்சீர் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், கொட்டைகள் மற்றும் விதைகள் போன்றவை மிகுந்த ஆரோக்கியம் தரும். அதிகமாக உண்பதைத் தவிர்த்து பகுதி பகுதியாகப் பிரித்து உண்பது நலம் தரும்.
சுறுசுறுப்பாக இருத்தல்: உடற்பயிற்சி, நடைப்பயிற்சி அவசியம் செய்ய வேண்டும். ஒரு வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள், மிதமான ஏரோபிக் செயல்பாடு நன்மை பயக்கும். நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும் வாழ்க்கை முறையை மேற்கொள்ள வேண்டும். ஒரே இடத்தில் நாற்காலியில் அமர்ந்திருப்பதைத் தவிர்த்து விட்டு ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து நடக்க வேண்டும்.
இரத்த சர்க்கரை அளவைக் கண்காணித்தல்: இரத்த சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணித்து வருவது நல்லது. சர்க்கரை அளவு கூடி விட்டால் அதற்கு ஏற்ப மாத்திரைகள் மற்றும் உடற்பயிற்சிகள் மூலம் அவற்றை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
மது, புகைப்பழக்கம் தவிர்க்கவும்: மது அருந்துதல் மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கத்தைத் தவிர்த்தல் நீரிழிவு உட்பட பல்வேறு நோய்களில் அபாயத்தையும் குறைக்கும்.
பரிசோதனைகள்: இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அளவுகள் மற்றும் இரத்த சர்க்கரை அளவை கண்காணிக்க வேண்டும். நீரிழிவு நோயாளிகள் இவற்றை தவறாமல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மூன்று மாதத்திற்கு ஒரு முறை இரத்த சர்க்கரை அளவை கண்காணிக்க ஹெச்பிஏ1சி என்கிற டெஸ்ட் செய்ய வேண்டும்.
மன அழுத்த நிர்வாகம்: மன அழுத்தம், மனப்பதற்றம், மனச்சோர்வு போன்றவை இரத்த சர்க்கரை அளவை பாதிக்கும், எனவே, மன அழுத்தத்தைக் குறைக்கும் நுட்பங்களை பயிற்சி செய்வது மிகவும் அவசியம். ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் இதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.
போதுமான தூக்கம்: தினமும் இரவு 7 மணி நேரமாவது தரமான தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும். மோசமான தூக்கம் அல்லது குறைந்த தூக்கம் இன்சுலின் உணர்திறனை எதிர்மறையாக பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.
மரபணு காரணிகளைக் கவனித்தல்: குடும்ப வரலாறு மற்றும் மரபணு முன் கணிப்பு பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்பத்தில் தாத்தா, அப்பா போன்றவர்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் அது அடுத்து வரும் தலைமுறையையும் பாதிக்க நிறைய சாத்தியக்கூறுகள் உண்டு. எனவே, அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக எடுக்க வேண்டும்.
ஆரம்ப கால நோயறிதல் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் போன்றவை நீரிழிவு நோய் உருவாக்கும் அபாயத்தை கணிசமாக குறைக்கும். கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் தாக்காமல் இருக்க அதற்கு ஏற்ப பரிசோதனைகள் செய்து கண்காணித்துக் கொள்ள வேண்டும்.