தொற்று நோய்க் கிருமிகள் நம் உடலின் எந்தப் பகுதியிலும் உட் புகுந்து அங்கு நோய்களைப் பரவச் செய்வது என்பது சாதாரணமாக நடக்கக்கூடியதுதான். அதைத் தடுப்பதற்கு நாம் நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை, சத்தான உணவுகளை உட்கொண்டு அதிகரிக்கச் செய்ய வேண்டும். சில ஆரோக்கியமான வாழ்வியல் முறைகளையும் பின்பற்ற வேண்டும். நம் நுரையீரலில் தொற்று நோய் பரவுவதற்கான 8 காரணங்கள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. நெரிசலான சூழல்: நாம் குடியிருக்கும் இடம் காற்றோட்டமில்லாமல் நெரிசல் மிக்க இடமாக இருந்தால் நோய்க் கிருமிகள் சுலபமாக மூச்சுக்காற்று வழியே உள் புகுந்து நுரையீரலில் தொற்று நோயை உண்டாக்க வாய்ப்புகள் அதிகம்.
2. புகை பிடித்தல்: புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு நிமோனியா, காச நோய் உள்ளிட்ட பல வகையான மூச்சுப் பாதை சம்பந்தப்பட்ட தொற்று நோய்கள் வரக்கூடிய அபாயம் உண்டு.
3. ஊட்டச்சத்து குறைபாடு: ஊட்டச்சத்து குறைந்த உணவுகளை உட்கொள்வதால் நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடும் சக்தி நுரையீரலில் குறைந்து விடும். இதன் காரணமாகவும் நுரையீரலில் தொற்று நோய் சுலபமாகப் பரவிவிடும்.
4. காற்று மாசு: நாம் வாழும் இடத்தைச் சுற்றிலும் நிறைந்துள்ள காற்று, தூசும் அசுத்தங்களும் கலந்து மாசடைந்திருந்தால் அதை சுவாசிக்கும்போது நுரையீரலுக்குள் கிருமிகள் பரவி தொற்று நோய் உண்டாக சுலபமாக வழி வகுக்கும்.
5. இன்ஃபுளுயென்சா வைரஸ்: மூச்சுப் பாதைகளில் இன்ஃபுளுயென்சா வைரஸ் எனப்படும் கிருமிகள் காணப்படும். இவை நுரையீரலுக்குள் பரவி இருக்கும் பாக்டீரியாக்களின் அளவை அதிகரிக்கச் செய்து நுரையீரலை சேதமடையச் செய்யும்.
6. குளிர்ந்த காலநிலை: சாதாரண சளி அல்லது மற்ற மேல் சுவாசக் குழாய் தொற்று போன்ற குளிர் கால நோய்கள் அதிகளவு தொற்று நோய் பரவக் காரணிகளாகும்.
7. வறட்சியுற்ற சளி சவ்வு (Dry mucous membrane): இது நுரையீரலுக்குள் வீக்கங்களை உண்டுபண்ணி தொற்று நோய் பரவச் செய்யும். இதனால் மூச்சுப் பாதையில் உள்ள சளியை வெளியேற்றுவதில் சிரமம் ஏற்படும்.
8. கொரோனா வைரஸ்: இது மூச்சு விடுவதில் சிரமம் உண்டாகச் செய்யும். அடிக்கடி சளி பிடிப்பது கொரோனா வைரஸினால் நுரையீரலில் தொற்று பரவியுள்ளதற்கான அறிகுறியாகும்.
நம் உடலுக்கு தூய ஆக்சிஜனை வழங்கி நாம் உயிர் வாழ உதவி புரியும் நுரையீரலின் நலம் காக்க நாமும் நல்ல பழக்க வழக்கங்களைப் பின்பற்றி ஆரோக்கியமாய் வாழ்வோம்.