மழைக்காலத்தில் பெண்கள் இறுக்கமான ஜீன்ஸ் உள்ளிட்ட உடைகளை அணியும்போது, சிறுநீர் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மழைக்காலங்களில் பலவித தொற்றுநோய்கள் வந்து நம்மைப் பாடாய்ப்படுத்தும். பிடித்த உணவுகளை சாப்பிட்டாலும் ஜீரணம் ஆகாமல் வயிற்றுக் கோளாறுகள் ஏற்படும். சளி, இருமல், காய்ச்சல் இவற்றில் இருந்தெல்லாம் நாம் மழைக்காலத்தில் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
மழைக்காலத்தில் பெரும்பாலானோரை பாதிப்பது சிறுநீர் தொற்று. இது, ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கும். மேலும், பெண்கள் இறுக்கமான ஜீன்ஸ் உள்ளிட்ட உடைகளை அணியும்போது, சிறுநீர் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சிறுநீர் தொற்று குறித்து சில முக்கிய விஷயங்களை இந்த பதிவில் கண்போம்.
1. ஐந்து பெண்களில் ஒருவருக்கு சிறுநீர் தொற்று ஒருமுறையாவது அவருடைய வாழ்நாளில் ஏற்படும்.
2. குழந்தைகளுக்கு சிறுநீர் தொற்று ஏற்படாமல் பெற்றோர் கவனித்துக் கொள்ள வேண்டும்.
3. உடலை சுத்தமாக வைத்துக்கொள்ளாமை, அசுத்தமான நீச்சல் குளத்தில் குளித்தல் உள்ளிட்டவை சிறுநீர் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.
4. இறுக்கமான உடைகள் அணியும்போது காற்று உட்புகாமல், பாக்டீரியா தொற்று அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுகிறது. குறிப்பாக, கல்லூரி செல்லும் பெண்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
5. மாதவிடாய் பிரச்னைகள் இருக்கும் பெண்களுக்கும் சிறுநீர் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அதனால், அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
6. நைலான் துணியாலான உள்ளாடைகளை தவிர்ப்பது நலம்.
7. திரவ உணவுகளை மழைக்காலங்களில் எடுத்துக்கொள்வதன் மூலமும், காய்கறிகள், பழங்களை உணவில் அன்றாடம் சேர்த்துக் கொள்வதன் மூலமும் சிறுநீர் தொற்று ஏற்படாமல் தடுக்க முடியும்.
8. நறுமணம் ஊட்டப்பட்ட சோப்புகள் உள்ளிட்டவற்றை பெண்கள் தவிர்க்க வேண்டும். சில சமயங்களில் அவை சிறுநீர் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தும்.
மழைக்காலத்தில் மேற்கண்ட விஷயங்களை சரியாக கடைபிடித்து சிறுநீர் தொற்றிலிருந்து உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள். சிறுநீர் தொற்று என்பது பல நோய்களுக்கு வழி வகுத்து விடும் ஆகையால் எச்சரிக்கையோடு இருங்கள்.