சக்கரவர்த்தி கீரை மிக அரிதாகவே கிடைக்கும் சுவை மிகுந்த கீரை ஆகும். நாட்டுக்கு ஒருவரே சக்கரவர்த்தி; அரிதானவர். அதுபோல இந்தக் கீரையும் அரிதாகவே கிடைப்பதால் இப்பெயரை இது பெற்றிருக்கலாம். மேலும் கண்ணாடிக் கீரை, சக்கோலி, சில்லி என்றும் இதனை அழைப்பார்கள்.
வளரும் இடங்கள்: ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா போன்ற மிதவெப்ப நாடுகளில் செழிப்பான இது வளருகிறது. நம் நாட்டில் தோட்டங்களிலும் இதைப் பயிரிடுகின்றனர். வயலைச் சார்ந்த நிலங்களிலும், விளை நிலங்களிலும் தளதளவென்று இவை தழைத்து நிற்பதைக் காணலாம். எல்லா வகை மண்ணிலும் செழித்து வளரக்கூடியது சக்கரவர்த்தி கீரை.
ஒவ்வொரு இனமும் வளரும் விதங்கள்: சக்கரவர்த்தி கீரையை வடமொழி நூலோர் மூன்று வகையாகப் பிரிப்பர். வாஸ்துகம், சாகவதம், யவகாசம் என்றும், வகைப்படுத்துவர். யவகாசம் ஒற்றை இலையுடன் தோன்றும். மற்றவை இரட்டை இலை உடையவை.
இந்தக் கீரை தன்னிச்சையாகவே வளரும் களைச் செடியாகும். சுமார் மூன்றடி உயரம் இதன் வளர்ச்சி ஆகும். சாய்வாக மேல்நோக்கி கிளைகள் செல்லும். பசுமை கலந்த செந்நிறக் தண்டுகளும், கருஞ்சிவப்பு தழைகளும் கொண்டிருக்கும். சின்னச் சின்ன பூக்கள் கொத்து கொத்தாய் பூக்கும். இரட்டை இலை வகையே உணவுக்கு சிறந்தது என்பர்.
சமையல் பயன்பாடுகள்: நல்ல சுவைமிக்க இரட்டை இலை சக்கரவர்த்திக் கீரை பத்தியத்திற்கு உகந்ததாகும். இக்கீரையுடன் துவரம் பருப்பு சேர்த்து கூட்டு வைத்து உண்ணலாம். பருப்பு சேர்த்து தேங்காய் துருவல் இட்டு பொரியலாகவும் சமைக்கலாம். வெறுமனே கடைந்தும், ‘சூப்’ வைத்தும் உட்கொள்ளலாம்.
ஊட்டச்சத்துக்கள்: ஊட்டச்சத்துக்களான தங்கச்சத்தும், இரும்புச்சத்தும், இணைந்திருக்கும் ஒரு சிறந்த உணவு சக்கரவர்த்தி கீரை ஆகும். மேலும் 45 விழுக்காடு புரதச்சத்தும், 361 மில்லி கிராம் சுண்ணாம்பு சத்தும், 71 மி.கி. மணிச்சத்தும், 16 மி.கி. இரும்புச் சத்தும் இக்கீரைக்குள் அடங்கியிருக்கின்றன.
மருத்துவப் பயன்கள்: அனைத்து தாதுப்புகளும், அதிக புரதச்சத்தும், சக்கரவர்த்தி கீரையில் உண்டு. பத்தியத்திற்கு மிக உகந்ததாகும். இக்கீரையை உண்பதால், நல்ல செரிமானம் கிடைக்கும். பசி மிகுதியாகும். மூலமும், சிறுநீரும் சுத்தமாகும். தாது விருத்தி பெறும்.
வயிற்றுப் போக்கு நோய்க்கு இக்கீரையானது கைகண்ட மருந்தாகும். வாரத்திற்கு நான்கு நாட்கள் இக்கீரையை உணவாக்கினால் உடல் சக்தி பெறும். கொக்கி புழு, நாக்கு பூச்சி போன்ற குடல் ஒட்டுண்ணிகள் இக்கீரையின் விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயில் ஒழிந்து போகும். ஈரல், இரத்த நோய், பித்தம், மூலம், போன்ற நோய்களும் குணமாகும்.
சக்கரவர்த்தி கீரை வைட்டமின் ‘ஏ' நிறைந்தது. இது கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, சிறுநீரகங்களை சுத்தம் செய்யவும், சிறுநீர் பிரிப்பை அதிகரிக்கவும் உதவுகிறது. இரத்த அழுத்தத்தை சீராக்கி உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. இந்தக் கீரைக்கு நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகள் உள்ளன. மேலும் சரும பிரச்னைகளை குணப்படுத்துகிறது.
அறுவை சிகிச்சையின்போது சேதமடைந்த பகுதிகளை ஆற்றும் தன்மை சக்கரவர்த்தி கீரையின் காற்றுக்கு உண்டு. மேலும், உடலுக்கு சக்தியை வழங்கி தசை வளர்ச்சியையும், உடல் எடையையும் சரியாகப் பராமரிக்கிறது.
எனவே, உடல் வலிமையையும் வனப்பும் தரவல்ல மருந்து பெட்டகமாகிய இக்கீரையை வீட்டுத் தோட்டத்தில் சக்கரவர்த்தியாக வளர்ப்போம். பயன் பெறுவோம்.