ஐஸ்கிரீம், ஸ்மூத்தீஸ், ஜூஸ் போன்றவற்றில் தற்போது சப்ஜா விதையோ அல்லது சியா விதையோ இடம்பிடித்து விடுவதைப் பார்க்க முடிகிறது. மக்களும் இவற்றை விரும்பி சாப்பிடுகிறார்கள். இவை இரண்டுமே உடல் எடையைக் குறைக்க உதவினாலும், இதில் எது சிறப்பாக செயலாற்றுகிறது என்பது பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
சியா விதை பார்ப்பதற்கு கருப்பு, சாம்பல், வெள்ளை நிறம் கலந்தது போல இருக்கும். இது சற்று பெரிதாக முட்டை வடிவத்தில் இருக்கும். இதுவே சப்ஜா விதை கருப்பாக, சிறியதாக உருண்டை வடிவத்தில் இருக்கும்.
சப்ஜா விதைகளை சாப்பிடுவதற்கு முன்பு கண்டிப்பாக தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இதுவே சியா விதைகளை ஊற வைத்தும் சாப்பிடலாம் அல்லது அப்படியே வெறுமனே சாப்பிடலாம்.
சியா விதையை சாப்பிடுவதால், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது, உடலுக்கு அதிக சக்தி கிடைக்கிறது. சியா விதையில் ஊட்டச்சத்துக்கள், ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. சியா விதைகளை சாப்பிடுவதால் இதயத்திற்கும், எலும்பிற்கும் நல்லதாகும்.
சப்ஜா விதையை உண்பதால், அசிடிட்டி மற்றும் வயிற்றுப்போக்கை குணப்படுத்துகிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உடலில் உள்ள இரத்தத்தின் தரத்தை உயர்த்தவும் உதவுகிறது.
சியா விதைகளுக்கு என்று எந்த சுவையும் கிடையாது. அதை எதில் சேர்க்கிறோமோ அந்த சுவையை தரும். இதை இனிப்பு மற்றும் கார உணவுகளில் பயன்படுத்துவார்கள். சப்ஜா விதைகளில் துளசியின் சுவை சற்று தெரியும். இருப்பினும், இதுவும் எதில் சேர்க்கிறோமோ அந்த சுவையைக் கொடுக்கும்.
சியா விதை மற்றும் சப்ஜா விதை இரண்டுமே உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. இரண்டு விதைகளை சாப்பிடுவதனால் வயிறு நிரம்பிய உணர்வு கிடைக்கும். எனவே, மற்ற உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது. சப்ஜா விதையை ஒப்பிடுகையில், சியா விதையில் அதிக புரதச்சத்து, நார்ச்சத்து, ஒமேகா 3 உள்ளதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
சியா விதைகள் உடல் எடையை குறைக்கும்போது தசையை குறைப்பதில்லை. எனவே, உடல் எடையை விரைவாக குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சியா விதைகளை பயன்படுத்துவது சிறந்தது. இரண்டு விதைகளுமே தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடக்கூடியது என்பதால், உடலில் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவுகிறது. இந்த இரண்டு விதைகளையும் உணவுடன் சேர்த்துக்கொள்வதனால், அதிக ஆரோக்கியத்தைப் பெறலாம்.