நம்மில் சிலர், 'தயிர் சாப்பிட்டால் சளி பிடிக்கும்' எனக் கூறி தயிர் சாப்பிடுவதை தவிர்த்து வருவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், நெடுங்காலமாக நம் முன்னோர்கள் வகை வகையான உணவுகளை உட்கொண்ட பின்பு ஒரு பிடி தயிர் சாதம் சாப்பிடாமல் அந்த வேளை உணவை முடிப்பதில்லை. அந்த அளவுக்கு தயிரில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகளை அறிந்து வைத்துள்ளனர் அவர்கள். தயிரிலிருந்து கிடைக்கும் நற்பயன்கள் என்னென்ன என்பதை இப்பதிவில் காண்போம்.
தயிரிலிருக்கும் ப்ரோபயோட்டிக்ஸ் ஜீரண மண்டல உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. செரிமானம் நல்லவிதமாக நடைபெறவும், ஊட்டச்சத்துக்கள் உடலுக்குள் உறிஞ்சப்படுவதற்கும் உதவி புரிகின்றன. தயிரிலிருக்கும் நன்மை தரக்கூடிய பாக்டீரியாக்களானது உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்கின்றன.
தயிரில் அதிகளவில் நிறைந்திருக்கும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் எலும்புகளையும் பற்களையும் வலுவுடையதாக இருக்கச் செய்கின்றன. தயிரிலிருக்கும் கால்சியமும் புரோட்டீனும் அதிக நேரம் பசியுணர்வு வருவதைத் தடுத்து திருப்தியான உணர்வுடன் இருக்கச் செய்கிறது. இதனால் உட்கொள்ளும் உணவின் அளவு குறைந்து, எடையை கட்டுக்குள் வைத்துப் பராமரிக்க முடிகிறது.
தயிரிலிருக்கும் ஊட்டச் சத்துக்கள் சருமத்திற்கு மிருதுத் தன்மை அளிக்கின்றன. தலைமுடிக்கு வலுவும் ஆரோக்கியமும் கொடுக்கின்றன. மேலும், இதிலிருக்கும் அதிகளவு பொட்டாசியமானது உயர் இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்தி, இதயம் ஆரோக்கியம் பெற உதவுகிறது. இத்தனை ஆரோக்கியம் நிறைந்த தயிரை நாள்தோறும் உட்கொண்டு நலம் பல பெறுவோம்.