தமிழகத்தில் பலரால் விரும்பி உண்ணப்படும் உணவுகளில் பரோட்டாவும் ஒன்று. அதன் சுவையை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. பரோட்டாவை பிச்சு போட்டு, அதில் சால்னாவை ஊற்றி குழப்பி அடிப்பதில் உள்ள சுகமே தனி. அதுவும் இரவு நேரத்தில் பலர் பரோட்டாவை விரும்பி சாப்பிடுகிறார்கள். இதனால் பல பாதகமான விளைவுகள் ஏற்படும் என சொல்லப்படுகிறது. எனவே இரவில் அதிகமாக பரோட்டா சாப்பிடுபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பரோட்டாவை இரவில் அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று செரிமானப் பிரச்சனை. பரோட்டா என்பது முழுவதும் கார்போஹைட்ரேட் ஆகும். இரவு நேரத்தில் உங்கள் செரிமான அமைப்பு இதை செரிப்பதற்கு சிரமப்படும். இதனால் வீக்கம், வாயுத்தொல்லை மற்றும் வயிற்று வலி போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
பரோட்டா சாப்பிடுவதால் குடல் அசௌகரியம் ஏற்படுவதால், அது உங்களது தூக்கத்தை கெடுக்கலாம். இதில் நிறைந்துள்ள அதிகப்படியான கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட், ரத்த சர்க்கரை அளவை அதிகரித்து தூங்குவதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இதனால் உங்களது தூக்க சுழற்சி தடைபடுவதால், மறுநாள் சோர்வாக உணர வைக்கும்.
பரோட்டாவில் நிறைந்து காணப்படும் எண்ணெய் நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டி பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இதனால் நீங்கள் தூங்கும்போது உணவு மற்றும் வயிற்று அமிலங்கள், உணவுக் குழாய்க்கு மீண்டும் பாய்ந்து, எரியும் உணர்வை ஏற்படுத்துகிறது. மற்றும் ஏற்கனவே ஏதேனும் ரிப்லெக்ஸ் பாதிப்புகள் இருந்தால் அதை அதிகப்படுத்துகிறது.
பரோட்டா போன்ற அதிக கலோரி நிறைந்த உணவை தூங்குவதற்கு முன் சாப்பிடுவதால், உங்கள் உடல் எடையில் அது கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும். மாலை நேரங்களில் நீங்கள் உட்கொள்ளும் உணவை வளர்ச்சிதை மாற்றம் செய்வதில் உடலின் செயல்திறன் குறைவாக இருக்கும். இந்த செயல்முறைக்கு அதிகப்படியான ஆற்றலும் தேவைப்படுவதால், அதிகப்படியான கலோரி கொழுப்பாக உடலிலேயே தேங்கிவிடும்.
எனவே இரவு நேரங்களில் அதிகமாக பரோட்டா சாப்பிடும்போது கவனமாக இருங்கள். நீங்கள் ஓர் அதிபயங்கர பரோட்டா விரும்பி என்றால், பரோட்டாவுடன் சேர்த்து நார்ச்சத்து மிக்க உணவுகளையும் எடுத்துக் கொள்வது நல்லது. அவை உங்களது செரிமானத்திற்கு பெரிதளவில் உதவும். இத்தகைய பாதிப்புகளால், பரோட்டாவை நீங்கள் சாப்பிட வேண்டாம் என நான் சொல்ல மாட்டேன். சமச்சீர் உணவின் ஒரு பகுதியாக பரோட்டாவை நாம் சாப்பிடலாம். ஆனால் இரவு நேரத்தில் இவற்றைத் தவிர்ப்பது நல்லது.
பரோட்டாவிற்கு பதிலாக, உங்களது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும், எளிதில் ஜீரணமாக கூடிய உணவுகளை இரவில் தேர்வு செய்து சாப்பிடுங்கள்.