நம் உடல் 60 சதவீதம் தண்ணீரால் நிரம்பியுள்ளது. செரிமானம், உடலின் வெப்பநிலையை சீராக பராமரிப்பது, முடி மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு தினமும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் குடிப்பது அவசியமானது. அதே சமயம், தண்ணீரைப் பருகுவதற்கென்று, சில வழிமுறைகளும் உள்ளன. 'தண்ணீர் குடிப்பதில் ரூல்ஸா?' என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், நாம் எவ்வாறு, எப்படித் தண்ணீர் குடிக்கிறோம் என்பது நம் ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கும் ஒன்றாக உள்ளது. ஆகையால், உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள தண்ணீரை எப்படிக் குடிக்கவேண்டும் எனக் காணலாம்.
உடலில் தண்ணீரின் அளவு குறையும்போது, அது பித்தம், வாதம் மற்றும் செரிமான பிரச்னைகளை அதிகரிக்கச் செய்யலாம். எனவே, உடலில் நீரின் அளவைச் சீராக வைத்துக்கொள்ள, தினமும் குறிப்பிட்ட மற்றும் தேவையான அளவுத் தண்ணீர் குடிக்க வேண்டும். இந்த குறிப்பிட்ட அளவு என்பது ஒவ்வொரு நபரையும் பொறுத்து மாறுபடலாம். நாக்கு வறட்சி, வறண்ட உதடுகள், சருமம் வறண்டு போவது, வியர்வை வராமல் இருப்பது, மலச்சிக்கல், மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுவது போன்றவை போதிய அளவுத் தண்ணீர் குடிக்கவில்லை என்பதற்கான அறிகுறிகளாகும்.
தண்ணீர் குடிக்கும்போது, கொஞ்சம் கொஞ்சமாக, பொறுமையாகக் குடிக்க வேண்டும். அவசர அவசரமாகத் தண்ணீரை விழுங்கக் கூடாது.
தண்ணீர் குடிக்கும்போது உட்கார்ந்த நிலையில்தான் குடிக்க வேண்டும். உட்கார்ந்த நிலையில், தண்ணீர் குடிப்பது, உடலில் நரம்பு மண்டலத்தையும் தசைகளையும் புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது. சிறுநீரகப் பிரச்னை வராமலும் தடுக்க உதவுகிறது.
ஒருபோதும் நின்று கொண்டு தண்ணீர் குடிக்க கூடாது. இது மூட்டுவலி, செரிமானக் கோளாறு, நுரையீரல் பிரச்னை மற்றும் உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்பட வழிவகுக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அதிகச் சூடான தண்ணீரையோ அல்லது அதிகக் குளிச்சியான தண்ணீரையோ குடிக்கக் கூடாது. இயற்கையாக, அறை வெப்பநிலையில் தண்ணீர் எப்படி உள்ளதோ, அதைக் குடிக்க வேண்டும். சூடான தண்ணீர் குடிக்கும் பட்சத்தில், அதைக் காய்ச்சி நன்கு ஆறிய பிறகு அல்லது வெதுவெதுப்பானத் தண்ணீரைக் குடிக்கலாம்.
காலையில், எழும்பியதும் வெறும் வயிற்றில், ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கலாம்.
உணவு உண்பதற்கு சுமாராக 30 நிமிடங்களுக்கு முன்பு தண்ணீர் அருந்துவது நல்லது. இது, அவரவரின் உடலின் தன்மையைப் பொறுத்து மாறுபடும்.
கோடைக்காலத்தில், உடல் சூட்டைத் தணிக்க வெட்டிவேர் சேர்த்து தண்ணீர் அருந்துவது நல்லது.
மற்ற பருவகாலங்களில், குடிக்கும் தண்ணீரில் கொஞ்சம் சீரகம் சேர்த்து, கொதிக்கவைத்துக் குடிப்பது, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் என கூறப்படுகிறது.
பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பிற பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தித் தண்ணீர் குடிக்கக் கூடாது.
குழாயில் இருந்து வரும் நீரை நேரடியாகக் குடிக்கக் கூடாது. ஏதாவது, பாத்திரத்தில் பிடித்து வைத்த பின், குடிக்க வேண்டுமாம்.