உணவுப் பொருட்கள் எப்போதும் பிரஷ்ஷாக இருக்க வேண்டும் என்பதற்காக அவற்றை பிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்துவோம். குறிப்பாக, காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை பிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்துவது வழக்கம். ஆனால், நீங்கள் நினைப்பது போல எல்லா வகையான காய்கறிகளையும் பழங்களையும் பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தக் கூடாது. மீறி பிரிட்ஜில் வைத்தால் சில பழங்கள் கெட்டுப்போகும் அல்லது விஷமாக மாற வாய்ப்புள்ளது.
ஆப்பிள்: நம் வீட்டு பிரிட்ஜில் எப்போதும் ஆப்பிள் பழங்கள் இருக்கும். இதை அதிகப்படியான மக்கள் வாங்கி சாப்பிடுகிறார்கள். இதன் விலை அதிகமாக இருந்தாலும் பலரும் ஆப்பிளை விரும்பி சாப்பிடுவார்கள். ஆப்பிளை வாங்கியதும் முதலில் அவற்றை கொண்டு போய் பிரிட்ஜில்தான் வைப்பார்கள். ஆனால், பிரிட்ஜில் வைக்கப்பட்ட ஆப்பிள்கள் விரைவில் பழுத்துவிடும். ஒருவேளை அவற்றை வைப்பதாக இருந்தால் பேப்பரில் சுற்றி வைக்கவும்.
தர்பூசணி: கோடைக்காலத்தில் பெரும்பாலான மக்கள் வாங்கி சாப்பிடும் பழங்களில் தர்பூசணியும் ஒன்று. இந்தப் பழம் மிகவும் பெரிதாக இருப்பதால் ஒரு பழத்தை ஒரே வேளையில் சாப்பிட முடியாது. எனவே, அதை துண்டு போட்டு பிரிட்ஜில் வைத்து சாப்பிடுவதுண்டு. ஆனால், தர்பூசணிப் பழங்களை பிரிட்ஜில் வைப்பதால் அதில் உள்ள எல்லா ஆன்ட்டி ஆக்சிடென்ட் பண்புகளும் அழிந்துவிடும். எனவே, தர்பூசணி பழத்தையும் பிரிட்ஜில் வைக்கக்கூடாது.
வாழைப்பழம்: வாழைப்பழம் பெரும்பாலானவர்களின் வீட்டில் எப்போதுமே இருக்கும். ஏனென்றால், எல்லா நாட்களிலும் இதன் விலை குறைவாகவே இருப்பதால் அதை அனைவருமே விரும்பி உண்பார்கள். ஆனால், வாழைப்பழத்தை பிரிட்ஜில் வைக்கக் கூடாது என்பது உங்களுக்குத் தெரியுமா? அப்படி பிரிட்ஜில் வைத்தால் வாழைப்பழம் விரைவில் கருமை நிறத்திற்கு மாறிவிடும். மேலும், அதிலிருந்து வெளிவரும் எத்தலின் வாயு, உடனிருக்கும் மற்ற பழங்களையும் விரைவாக பழுக்கச் செய்துவிடும்.
மாம்பழம்: மாம்பழத்தையும் பிரிட்ஜில் வைத்தால் அதன் சத்துக்கள் குறைந்து, விரைவில் கெட்டுப்போக ஆரம்பிக்கும். எனவே, இந்தத் தவறை இன்னொரு முறை செய்யாதீர்கள்.
ஆரஞ்சு: எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற புளிப்பு சுவை கொண்ட பழங்களை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அதில் சிட்ரிக் அமிலம் அதிகம் இருக்கும் என்பதால், மற்ற பழங்களையும் விரைவில் கெட்டுப்போகச் செய்துவிடும். அதுமட்டுமின்றி சில பழங்களின் தன்மையை முற்றிலுமாக மாற்றி உடலுக்குக் கெடுதல் விளைவிக்கும் ஒன்றாகக் கூட மாற்றிவிடும் வாய்ப்புள்ளது.