டினைடஸ் பிரச்னை https://www.healthline.com
ஆரோக்கியம்

காதில் ஏதோ இடைவிடாத சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறதா? அச்சச்சோ… ஜாக்கிரதை!

மகாலெட்சுமி சுப்ரமணியன்

சிலர் எப்போதும் தங்கள் காதில் ஏதோ ஒரு ஒலி கேட்டுக்கொண்டே இருக்கிறது என்பர். எதிரில் யாரும் இல்லாத நிலையிலும், ஒலி ஏதும் கேட்காவிட்டாலும் தங்களுக்கு தொடர்ந்து ஒரு சத்தம் கேட்டுக்கொண்டே இருப்பதாகச் சொல்வர். அதுமட்டுமின்றி, இதனால் மன நிம்மதியை இழந்து கஷ்டப்படுவர். இந்தப் பிரச்னை, ‘டினைடஸ்’ (Tinnitus) என்று கூறப்படுகிறது. இது போன்றவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம்.

காதில் இடைவிடாத சத்தம், சீறுதல், சலசலப்பு, விசில் அல்லது புறச் சத்தம் கேட்கும் பிரச்னை இதுவாகும். டினைடஸ் உள்ள நபருக்கு ஒரு காது அல்லது இரண்டு காதுகளிலுமே  இந்த நிலை ஏற்படலாம்.

இந்த டினைடஸ் பிரச்னை ஏற்பட பல காரணங்களை கூறுகின்றனர் மருத்துவர்கள். பொதுவாக, உரத்த சத்தத்தை நீண்ட நேரத்திற்குக் கேட்பதே இதற்கு முக்கியமான காரணமாகக் கூறப்படுகிறது. ‘காக்லியா’ எனப்படும் காதில் உள்ள சுழல் வடிவ உறுப்பில் ஒலி உணர்திறன் செல்களுக்கு நிரந்தர சேதத்தை இந்தத் தொடர் சத்தம் ஏற்படுத்துகிறது.

இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட நபர் காது கேட்கும் திறனை விரைவில் இழக்கும் நிலைக்கு ஆளாகிறார். தச்சர்கள், ராக் இசைக் கலைஞர்கள், விமானிகள், இயந்திரங்களை பழுது பார்ப்பவர்கள், மர ஆலையில் ரம்பம் அறுத்தல் தொழிலில் ஈடுபடுபவர்கள், அதிக சத்தத்தில் வேலை செய்வோருக்கு இந்த டினைடஸ் பிரச்னை ஏற்படுகிறது.

இவை தவிர, காது சைனஸ் தொற்றுகள், பெண்களில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், காதுகளின் உட்பகுதியில் ஏற்படும் மெனியர்ஸ் நோய், தலை, கழுத்தில் ஏற்படும் காயங்கள், தைராய்டு கோளாறுகள், மூளைக் கட்டிகள் போன்றவையும் இந்த உடல் பிரச்னையை ஏற்படுத்துகின்றன. இதுபோன்று காதில் இடைவிடாத சத்தம் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். இப்பிரச்னைக்கு மருத்துவர் நோயின் தன்மைக்கேற்ப சிகிச்சை அளிப்பார்.

காக்ளியர் இம்ப்ளான்ட்: இது டினைடஸ் உள்ள நபருக்கு பரிந்துரைக்கப்படுகிறது. இது புறச் சத்தத்தை காதுக்குள் கொண்டு வருகிறது. காது நன்கு கேட்கும் திறனை கொடுக்கிறது. இதைத் தவிர, ‘ஒலித் தடுப்பான்’ எனப்படும் காதுகளுக்குப் பின்னால் அணியும் சாதனமும் மருத்துவரால் பரிந்துரைக்கப்படுகிறது. இது குறைந்த அலைவரிசை சமிக்ஞைகளை வெளிப்படுத்துவதோடு, காதினுள்ளே ஏற்படும் சத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.

டினைடஸ் என்பது ஒருவித மன நோய்க்கும் ஒருவரை ஆளாக்கக் கூடும். இதனால் உற்றார், உறவினர்கள் பாதிக்கப்பட்டவருக்கு அனுசரணையாக இருக்க வேண்டும். அவருக்கு ஆதரவாக, உளவியல் ரீதியான பலத்தைக் கொடுத்து டினைடஸ் பிரச்னைகளை களைய துணை நிற்க வேண்டும்.

அதிகளவு புரதச் சத்து தரக்கூடிய 6 வகை மாவுப் பொருட்கள்!

ஐயப்பனின் சபரிமலை பதினெட்டு படிகள் உணர்த்தும் தத்துவம்!

கோதுமைப் புல்லின் ஆரோக்கிய நன்மைகள்!

கார்த்திகை மாத சோமவார விரதம் மற்றும் சங்காபிஷேகம் ஏன் சிவபெருமானுக்கு விசேஷம்?

ஓ! இப்படித்தான் நம்ம உடல் வெப்பத்தை கட்டுப்படுத்துதா? 

SCROLL FOR NEXT