எந்தப் பொருளை எங்கே வைத்தோம் என்று மறப்பது சகஜமான விஷயம்தான். அது எல்லோருக்குமே ஏதோ ஒருசமயத்தில் ஏற்படக்கூடிய ஞாபக மறதியேயாகும். ஆனால், அதையும்தாண்டி சிலருக்கு வயது முதிர்ச்சியின் காரணமாக தன்னுடைய வீட்டினுடைய விலாசம் மறந்துவிடும், வீட்டிற்கு செல்லும் வழி மறந்துவிடும், நெருங்கியவர்களின் முகம் மறந்துவிடும். இதுபோன்று ஏற்படும் ஞாபக மறதியைதான் அல்சைமர் நோய் என்கிறோம். அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
அல்சைமர் நோய் என்பது மூளையில் நரம்பியல் சிதைவுகளால் ஏற்படும் நோயாகும். மூளையில் இருக்கக்கூடிய செல்கள் இறப்பதால், ஞாபக மறதி, யோசிக்கும் திறன் போன்றவை குறைந்துவிடும். இது பெரும்பாலும் 65 வயதிற்கு மேற்பட்டவர்களையே தாக்கும். இந்த நோயை முழுமையாக குணப்படுத்த முடியாது என்றாலும் சில மருந்துகள் மற்றும் தெரபிகள் மூலமாக தற்காலிகமாக போக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நோய் வந்ததை உடனே தெரிந்துக்கொள்ள முடியாது. முதலில் சின்னச் சின்ன ஞாபக மறதியில் தொடங்கி, நாளடைவில் நெருங்கியவர்களைக்கூட அடையாளம் காண முடியாத அளவிற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இந்த நோய் வருவதற்கான முக்கியமான காரணங்களாக சொல்லப்படுவது, வயது முதிர்ச்சி, குடும்பத்தில் இருக்கும் ஜீன்கள், மூளையில் ஏற்படும் மாற்றங்கள், உணவு, சூழ்நிலை போன்றவையும் காரணமாக அமையும் என்று கூறப்படுகிறது.
அல்சைமருடைய முதல் அறிகுறி Dementia. தினமும் செய்யும் அன்றாட வேலைகளைச் செய்வதில் பிரச்னை, பணத்தை கையாள்வதில் குழப்பம், முடிவெடுக்க முடியாமல் திணறுவது, பொருட்களை இடம் மாற்றி வைத்துவிட்டு தடுமாறுவது, குணங்களில் மாற்றங்கள் போன்றவை அல்சைமரின் அறிகுறிகளாகச் சொல்லப்படுகின்றன.
இதுபோன்ற பிரச்னைகள் ஏற்பட்டால், உடனே நல்ல மருத்துவரை பார்ப்பது சிறந்ததாகும். அல்சைமர் வராமல் இருக்க உண்ண வேண்டிய உணவுகள், ப்ளூ பெர்ரி, மீன், கீரைகள், பீன்ஸ் போன்றவை சாப்பிடுவது மிகவும் நல்லது. ஆரோக்கியமான உணவுகள், உடற்பயிற்சி, புகைப்பிடிக்காமல் இருத்தல் போன்ற பழக்கங்கள் அல்சைமரை தடுக்கக்கூடிய வழிமுறைகளாகும். அல்சைமர் நோய் வந்தோருக்கு அவருடைய குடும்பம் கொடுக்கும் அன்பும், ஆதரவும்தான் அதிக பக்கபலமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.