பொதுவாக, இந்தியப் பெண்கள் புடைவை அணிவதற்கும் சுடிதார் ஷாலை பின் செய்வதற்கும் சேஃப்டி பின்னை பயன்படுத்துகிறார்கள். சிலருக்கு சேஃப்டி பின் ஒத்துக்கொள்ளாமல் உடலில் சரும வியாதிகள் வருகின்றன. அவை ஏன் வருகின்றன? தடுக்கும் முறைகள் என்ன என்பது பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
பிளாஸ்டிக் சேஃப்டி பின் கனமான ஆடைகளை பின் செய்வதற்கு உபயோகப்படுவதில்லை. அதனால் பெரும்பான்மையானவர்கள் ஸ்டீல் சேஃப்டி பின்னை பயன்படுத்துகின்றனர். ஸ்டீல் பின்னில் உள்ள நிக்கல் கோட்டிங் சில பெண்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். அவர்களுக்கு வியர்க்கும்போது சேஃப்டி பின்னில் உள்ள நிக்கல் அவர்களுடைய தோள்பட்டையில் பட்டு அரிப்பையும் சிவந்த தடிப்புகளையும் உருவாக்குகிறது. சிலருக்கு அரிப்பின் தன்மை அதிகமாகவும் இருக்கலாம். சிலருக்கு கொப்புளங்கள் கூட தோன்றக்கூடும்.
செயற்கை நகைகள் அணியும் பெண்களுக்கும் அதில் கலந்திருக்கும் நிக்கலால் இது போன்ற உடல் அசௌகரியங்கள் ஏற்படும். மருத்துவர் பரிந்துரைக்கும் ஆயின்மென்ட் போட்டால் சரியாகிவிடும். ஆனால், மறுபடியும் சேஃப்டி பின் மற்றும் செயற்கை நகைகள் உபயோகப்படுத்தினால் மீண்டும் அரிப்பு வரும்.
அதனால் சேஃப்டி பின்னில் நெயில் பாலிஷ் அடித்து காய்ந்ததும், அதை உபயோகப்படுத்தலாம். அதை புடைவையிலோ சுடிதாரிலோ குத்திக்கொள்ளும் போது அதனால் வரும் சரும அலர்ஜி தடுக்கப்படுகிறது. நிக்கல் கலந்த நகைகளை தவிர்க்கலாம். இல்லையெனில் இன்னொரு மாற்றுவழியை பிரயோகிக்கலாம்.
செயற்கை நகைகளை உபயோகித்து முடித்ததும், அவற்றை வியர்வையுடனே கழற்றி பெட்டியில் வைத்து விட்டு, மீண்டும் அவற்றை பயன்படுத்தும்போதுதான் சரும அலர்ஜி வருகிறது.
அதனால் அவற்றை உபயோகித்து முடித்ததும், அதில் படிந்துள்ள வியர்வை நீங்குமாறு காற்றாட உலரவைத்து, துடைத்து, மீண்டும் பெட்டிகளில் வைக்க வேண்டும். செயற்கை நகைகளை அணிவதற்கு முன், அந்த இடத்தில் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள். இப்படி செய்தால் அலர்ஜி ஏற்படாது.