7 Essential Types of Rest 
ஆரோக்கியம்

மனிதர்களுக்கு அவசியம் தேவையான 7 வகை ஓய்வு பற்றி தெரியுமா?

எஸ்.விஜயலட்சுமி

டலுக்கும் மனதிற்கும் ஓய்வு அவசியம் தேவை. இது ஒட்டுமொத்த ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் உற்பத்தித் திறனுக்கு பங்களிக்கிறது. மனிதர்களின் புத்துணர்ச்சிக்கும் மீட்புக்கும் ஏழு வகையான ஓய்வு தேவைப்படுகிறது. அது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. உடல் ஓய்வு: உடல் ஓய்வு என்பது உடல் உழைப்பு அல்லது மன அழுத்தத்திற்குப் பிறகு உடல் தன்னைத்தானே சரி செய்து கொள்ள வேண்டிய மீட்பு நேரத்தைக் குறிக்கிறது. இதில் இரண்டு வகையான ஓய்வு உண்டு. ஒன்று, சுறுசுறுப்பான ஓய்வு. இது நடைப்பயிற்சி, உடற்பயிற்சி அல்லது யோகா போன்ற மென்மையான செயல்பாடுகள் உடலின் இயக்கத்தைப் பராமரிக்கின்றன. இரண்டாவது செயலற்ற ஓய்வு. இது எந்த உடல் செயல்பாடுகளும் இல்லாமல் படுத்திருப்பது, உறங்குவது அல்லது அசையாமல் உட்கார்ந்து இருப்பது போன்றவை. உடல் ஓய்வு சோர்வை குறைக்கவும் தசைகளை ஊக்குவிக்கவும் உதவுகிறது. உடற்பயிற்சிக்குப் பிறகு தசைகள், திசுக்கள் மற்றும் மூட்டுகள் புத்துணர்ச்சி பெறுகின்றன.

2. மன ஓய்வு: மன ஓய்வு என்பது மூளைக்கு அறிவாற்றல் சுமையிலிருந்து ஓய்வு கொடுத்து அதை ரீசார்ஜ் செய்ய அனுமதிப்பதை குறிக்கிறது. பகல் நேரங்களில் வேலை செய்யும்போது சிறிய இடைவெளிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இயற்கையில் நேரத்தை செலவிடுவது மன உளைச்சலில் இருந்து விடுதலை தரும். நினைவாற்றல் பயிற்சி, தியானம் போன்றவையும் மன அழுத்தம் பதற்றத்தை குறைக்கிறது.

3. உணர்ச்சி ஓய்வு: அன்றாட வாழ்க்கையின் உணர்ச்சிபூர்வமான செயல்களில் இருந்து விடுபடுவதைக் குறிக்கிறது. மகிழ்ச்சியைத் தரும் சுய கவனிப்பு நடவடிக்கைகளை பயிற்சி செய்ய வேண்டும். உணர்ச்சி ஆற்றலை பாதுகாக்க உறவுகளுக்கும், நட்புகளுக்கும் எல்லைக்கோடு அமைப்பது முக்கியம். உணர்ச்சி ரீதியான ஓய்வு நெகிழ்ச்சியை ஊக்குவிக்கிறது. மேலும், இது ஆரோக்கியமான தொடர்புகள் மற்றும் உறவுகளுக்கும் வழிவகை செய்கிறது.

4. சமூக ஓய்வு: மனிதர்கள் தங்கள் தனிப்பட்ட உறவுகள் மற்றும் சமூக அழுத்தங்களிலிருந்து தன்னை தூர விலக்கிக்கொள்ள வேண்டும். சமூக ஊடகங்கள் மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றிலிருந்து ஓய்வெடுத்துக்கொள்வது மிக அவசியம். சமூக வலைதளங்கள் ஏற்படுத்தும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளால் மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, அவற்றிலிருந்து ஓய்வு எடுத்துக் கொள்வது மிக மிக அவசியம். உறங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே அலைபேசி, லேப்டாப் போன்ற டிஜிட்டல் திரை நேரத்திற்கு ஓய்வு தர வேண்டும்.

5. ஆக்கபூர்வமான ஓய்வு: இது படைப்பாற்றலை ரீசார்ஜ் செய்வதற்கும் உத்வேகத்துடன் செயல்படுவதற்கும் தேவைப்படும் நேரம் ஆகும். விளைவுகளை பற்றி கவலைப்படாமல் மனதிற்கு பிடித்த கலை நடவடிக்கைகளில் ஈடுபடுதல் வேண்டும். அதேசமயம் எழுத்தாளர்களுக்கு படைப்பாற்றல் ஓய்வு முற்றிலும் அவசியம். இயற்கை சூழலில் சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டால் எழுத்தாளர்களுக்கு தங்கள் மூளையை ரீசார்ஜ் செய்து கொள்வதற்கும் படைப்பாற்றலை புதுப்பிப்பதற்கும் உதவியாக இருக்கும்.

6. உடல் செல்களுக்கு ஓய்வு: உடலுக்கு எந்த மாதிரியான உணவை உண்கிறோம் என்பதில் கவனம் செலுத்துவதைக் குறிக்கிறது. பதப்படுத்தப்பட்ட உணவுகள், நொறுக்குத் தீனிகள் அல்லது அதிகக் கொழுப்பு, அதிக சர்க்கரை உணவுகள் போன்றவற்றை உடல் ஜீரணிக்க மிகவும் சிரமப்படும். இது சோர்வு அல்லது சோம்பலை வளர்க்கும். எனவே உடலில் உள்ள செல்களுக்கு ஓய்வு கொடுப்பது முக்கியம். ஆரோக்கியமான ஜீரணிக்க எளிதான சத்தான உணவுகளை உண்ண வேண்டும்.

7. ஆன்மிக ஓய்வு: ஆன்மிக ஓய்வு நம்மை விட மேலான ஒன்றோடு ஆழமான இணைப்பில் ஈடுபடுவதைக் குறிக்கிறது. பிரார்த்தனை, தியானம் போன்றவை இதற்கு சிறந்த வழிகளாக இருக்கும். இது உள் அமைதியை வளர்க்கும். மனதிற்கு புத்துணர்ச்சியையும் நிம்மதியும் கொடுக்கும். இந்த ஏழு வகையான ஓய்வுகளை தினசரி வாழ்க்கையில் எடுத்துக்கொண்டால் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.

பல்லிகள் இங்கு சத்தமிடுவதில்லை; கருடன் வானில் பறப்பதில்லை! எங்கு தெரியுமா?

புரதச்சத்து மிகுந்த ஜோரான ரெசிபிக்கள் செய்து அசத்தலாமா?

ஒரு மனிதன் எப்போது மனிதனாகிறான் தெரியுமா?

தென்னிந்தியாவின் தாஜ்மகாலைப் பற்றித் தெரியுமா?

மூச்சிரைப்பு வந்தால் அதை சாதாரணமா நினைக்காதீங்க! 

SCROLL FOR NEXT