germophobia 
ஆரோக்கியம்

ஜெர்மோஃபோபியா உள்ளவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் தெரியுமா?

தி.ரா.ரவி

ஜெர்மோஃபோபியா என்பது அழுக்கு, தூசு, பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் போன்ற கிருமிகளைப் பற்றிய தீவிர பயத்தைக் குறிக்கிறது. இந்த பயம் உள்ளவர்கள் அழுக்கு அல்லது அசுத்தமான எதையும் தொட அஞ்சுவார்கள். கிருமிகளை பற்றிய பயம் அவர்களுக்கு மிகுந்த மன உளைச்சலையும் கவலையையும் ஏற்படுத்தும். இதற்கு இன்னொரு பெயர் மைசோஃபோபியா. இதற்கான காரணம் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஜெர்மோஃபோபியாவின் அறிகுறிகள்:

1. ஜெர்மோஃபோபியா உள்ள நபர்கள் எப்போதும் கிருமிகளைப் பற்றிய தீவிர பயத்தில் இருப்பார்கள். கிருமிகளின் வெளிப்பாடு தொடர்பான கவலை அல்லது பதற்றம் இருக்கும். எனவே, அழுக்கு அல்லது கிருமிகள் பற்றிய பயத்தால் அடிக்கடி பலமுறை கைகளை கழுவுவார்கள். அதுவும் நீண்ட நேரம் கழுவுவார்கள்.

2. தூய்மையின் மீது அதிக ஆர்வம் இருக்கும். துப்புரவு அல்லது சுத்திகரிப்புப் பொருட்களை அதிகமாகப் பயன்படுத்துவார்கள்.

3. கிருமிகளின் தொடர்பைத் தடுக்க எப்போதும் கையுறைகள் அணிவார்கள்.

4. பலர் கூடியிருக்கும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பார்கள். ‌வெளியிடங்களுக்குச் செல்லும்போது கழிவறைகளை பயன்படுத்த மாட்டார்கள்.

5. ஒரு நாளைக்கு பலமுறை குளிப்பார்கள். மேலும், அறிமுகம் இல்லாத மேற்பரப்பைத் தொடும் ஒவ்வொரு முறையும் சானிடைசர் உபயோகித்து கைகளை சுத்தம் செய்வார்கள்.

6. பிறருடன் உணவை பகிர்ந்து கொள்ளவோ பொது போக்குவரத்தை பயன்படுத்தவோ விரும்ப மாட்டார்கள்.

உடல் அறிகுறிகள்: ஜெர்மோஃபோபியா உள்ள நபர்களுக்கு அடிக்கடி எரிச்சல், தலைவலி, விரைவான இதயத்துடிப்பு, அமைதியின்மை, வியர்வை, மூளை மூடுபனி, அழுகை போன்றவை இருக்கும்.

ஜெர்மோஃபோபியாவின் காரணங்கள்:

1. மரபியல்: ஒரு நபருக்கு ஜெர்மோஃபோபியா ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். மரபியல் ரீதியான காரணங்களும் இருக்கலாம். குடும்பத்தில் யாருக்காவது இந்த பயம் இருந்தால் அது பின்னாளில் வரும் பிற குடும்ப உறுப்பினரையும் பாதிக்கலாம்.

2. மூளை அமைப்பு: மூளையில் உள்ள வேறுபாடுகள், குறிப்பிட்ட பயம் அல்லது கவலை கொண்ட நிலைமைகளை உருவாக்கும்.

3. அதிர்ச்சி: சுத்தம் அல்லது கிருமிகள் தொடர்பான ஏதாவது அதிர்ச்சிகரமான நிகழ்வை அனுபவித்திருக்கலாம்.

4. மனநலக் கோளாறு: 61 சதவிகிதம் பேருக்கு மனச்சோர்வு, கவலை, ஓசிடி போன்ற மனநலக் கோளாறு இருந்தால் ஜெர்மோஃபோபியாவுக்கு ஆளாகிறார்கள் என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

ஜெர்மோஃபோபியா பயத்தை எப்படிக் குறைப்பது?

கிருமிகளைப் பற்றிய பயம் இருந்தால் அதை நிர்வகிக்க ஆரோக்கியமான வழிகளை கடைப்பிடிப்பது அவசியம். போதை, மது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அன்புக்குரியவர்களிடம் அதிகமாக நேரம் செலவழிக்க வேண்டும். கிருமிகள் மற்றும் நோய்களைப் பற்றிய அச்சங்களில் இருந்து மனதை திசை திருப்ப ஒரு புதிய பொழுதுபோக்கு எடுத்துக் கொள்ளலாம். ஏதாவது புதிய விஷயத்தை கற்றுக் கொள்ளலாம்.

தியானம், யோகா போன்றவற்றை கடைப்பிடிக்கலாம்.  சுவாசப் பயிற்சி, வழக்கமான உடற்பயிற்சி போதுமான தூக்கம், காஃபின் பொருட்களை குறைத்துக் கொள்ளுதல், நினைவாற்றல் நடைமுறைகள் போன்றவை உதவும். இதற்கு மிக முக்கியமாக உளவியல் சிகிச்சை தேவை. அறிவாற்றல் நடத்தை சிகிச்சை நல்ல பலன் தரும். பயத்தை உண்டுபண்ணும் எதிர்மறை சிந்தனை முறைகளை அடையாளம் கண்டு அவற்றை மாற்ற வேண்டும். மேலும், படிப்படியாக பயத்தை குறைத்து சகஜ நிலைக்குக் கொண்டு வர வேண்டும்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT