நம் உடலின் நடுப்பகுதியில் அமர்ந்து நான்கு திசைகளிலும் உள்ள உறுப்புகளுக்கு நல்ல இரத்தத்தை பம்ப் செய்து அனுப்புவதும், இதயத்துக்குள் கொண்டுவரப்படும் அசுத்தமடைந்த இரத்தத்தை சுத்தமடையச் செய்ய நுரையீரலுக்கு அனுப்ப வேண்டியதுமான தலையாய பணியைச் சிறப்புடன் செய்து வருவது நமது இதயம். இதயத்தின் நலனுக்காக நாம் உண்ண வேண்டிய அத்தியாவசியமான உணவுகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புகளடங்கிய எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் ஆயிலில் உணவுகளை சமைத்தும், சாலட் போன்ற உணவுகளின் மீது இதை ஊற்றியும், உண்பது இதய ஆரோக்கியத்திற்கு நன்மை தரும். மேலும், அதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் பல்வேறு இதய நோய்கள் உருவாகும் வாய்ப்பையும் தடுக்கக் கூடியவை.
நார்ச்சத்துக்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகளவு கொண்டுள்ள பாதாம், பிஸ்தா, வால்நட் போன்ற உலர்ந்த கொட்டைகளை உண்பதும் இதயத்துக்கு நல்ல ஆரோக்கியம் அளித்து நோய்கள் அண்ட விடாமல் பாதுகாக்க உதவும்.
ஸ்ட்ரா பெர்ரி, பிளாக் பெர்ரி போன்ற பழங்கள் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் குணம் கொண்டவை. இவற்றை அடிக்கடி உண்ணும்போது இரத்த அழுத்தம் சீராகி இதய நோய்கள் தடுக்கப்படுகின்றன. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகளவு உள்ள சால்மன் மீனை உண்பதால் இரத்தத்தில் உள்ள ட்ரைக்ளிசரைட்கள் குறைக்கப்படுகின்றன. இதன் விளைவாக இதயம் ஆரோக்கியம் பெற்று நோய்களிலிருந்து காக்கப்படுகிறது.
ஓட்ஸில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை இரத்தத்தில் உள்ள தேவைக்கு அதிகமான கொழுப்புகளைக் குறைக்கும் தன்மை கொண்டவை. காலை உணவாக ஓட்ஸை எடுத்துக்கொண்டால் இதயத்துக்கு அதிக சக்தியும் பாதுகாப்பும் கிடைக்கிறது.
அதிகளவு வைட்டமின்கள், மினரல்கள் கொண்டுள்ள பசலைக் கீரை, வெந்தயக் கீரைகளை அடிக்கடி உண்பதாலும் இதயம் ஆரோக்கியம் பெற்று நோய்களிலிருந்து காக்கப்படும்.
இதய ஆரோக்கியத்தில் கவனம் வைப்போம்... இளமையுடன் வாழ்வோம்.