Korean weight loss drink 
ஆரோக்கியம்

உடல் எடை குறைய கொரிய மக்கள் அருந்தும் 9 வகை பானங்கள் தெரியுமா?

ஜெயகாந்தி மகாதேவன்

ம் அனைவருக்கும் பொதுவாக உள்ள பிரச்னை  உடல் பருமன். உடல் எடை கூடும்போது மூட்டு வலி போன்ற பல உடல் உபாதைகள் உண்டாக வாய்ப்பேற்படுகிறது. உடல் எடை குறைய உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, நடைப்பயிற்சி என பல வழிமுறைகளைப் பின்பற்றி வருகிறோம். கொரிய மக்கள் உடல் எடை குறைய 9 வகை பானங்களை அருந்தி அதில் வெற்றி பெற்றும் வருகின்றனர். அந்த 9 வகை பானங்கள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. பார்லி டீ: கொரியாவில் அந்நாட்டு மக்கள் புத்துணர்ச்சி பெற அருந்துவது இந்த டீ. இது காஃபின் இல்லாதது. இயற்கை முறையில் உடலுக்கு நீரேற்றம் தருவதுடன், நச்சுக்களை வெளியேற்றவும், வயிற்றிற்குள் வீக்கத்தைக் குறைத்து செரிமானம் சீராக நடைபெறவும் உதவும்.

2. கோம்புச்சா: நொதிக்கச் செய்து தயாரிக்கப்படும் இந்த டீ நுரையும் குமிழ்களும் சேர்ந்து கண் கவரும் தோற்றமும் அதிக சுவையும் கொண்டது. இது செரிமான உறுப்புகளை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைக்க உதவும். எடையை சமநிலையில் வைத்துப் பராமரிக்கவும் உதவி புரியும்.

3. சிட்ரான் டீ: வைட்டமின் C அதிகம் நிறைந்தது இந்த டீ. உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். உடற்பயிற்சி செய்யும்போது கொழுப்பை எரிப்பதற்கு வைட்டமின் C சிறந்த முறையில் உதவும். இதிலுள்ள இயற்கையான இனிப்பு சுவை, மற்ற இனிப்பு சேர்த்த பானங்களுக்கு ஒரு சிறந்த மாற்றாக இதை உபயோகிக்கச் செய்கிறது.

4. க்ரீன் டீ: க்ரீன் டீயில் உள்ள கேட்டச்சின் மற்றும் காஃபின் போன்ற பொருள்கள் மெட்டபாலிச ரேட்டை உயரச் செய்து உடல் எடை குறைய உதவுகின்றன. மேலும் இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலின் மொத்த ஆரோக்கியம் மேம்பட உதவும்.

5. க்ரீன் பிளம் டீ: நொதிக்கச் செய்த க்ரீன் பிளம்ஸ்களிலிருந்து தயாரிக்கப்படும் இந்த பானத்தில் சிட்ரிக் ஆசிட் அதிகம் உள்ளது. இது சிறப்பான செரிமானத்துக்கும், கல்லீரல் நச்சுக்களை நீக்கவும், மெட்டபாலிச ரேட்டை அதிகரிக்கச் செய்யவும் உதவும்.

6. பிரவுன் ரைஸ் டீ: பிரவுன் ரைஸில் சர்க்கரை அளவு குறைவு. மேலும் இது மெட்டபாலிச ரேட்டை உயர்த்தவும் உதவும். இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்களும் மற்ற ஊட்டச் சத்துக்களும் இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்க உதவும். மேலும், 'எதையாவது சாப்பிட்டுக்கொண்டே இருக்க வேண்டும்' எனத் தோன்றும் உணர்வைக் கட்டுப்படுத்தி எடைக் குறைப்பிற்கு உதவும்.

7. சோயா பீன்ஸ் மில்க்: சோயா பீன்ஸை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் பானங்கள் கொரியாவில் மிகவும் பிரசித்தமானவை. அவற்றில் புரோட்டீன் சத்து அதிகம். சோயா பீன்ஸ் மில்க் அருந்தினால், நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வு உண்டாகும். இரண்டு உணவுகளுக்கிடையில் ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்ற உணர்வு ஏற்படாது.

8. பக் வீட் (Buck wheat) டீ: வறுத்த பக் வீட் விதைகளிலிருந்து தயாரிக்கப்பவது இந்த டீ. இதில் காஃபின் கிடையாது. வயிற்றில் வீக்கங்களைக் குறைத்து செரிமானம் சிறப்பாக நடைபெற உதவும். இரத்த சக்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும். அதன் மூலம் அடிக்கடி சாப்பிட வேண்டும் என்ற உணர்வை நீக்கும்.

9. பட்டை - இஞ்சி டீ: இந்த இரண்டு பொருள்களையும் சேர்த்து தயாரிக்கப்படும் பானமானது அதிக ஆரோக்கிய நன்மைகளைத் தரக்கூடியது. பட்டை- இஞ்சி, இந்த இரண்டு பொருள்களுமே ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணம் கொண்டவை; மெட்டபாலிச அளவை அதிகரிக்கவும் உதவக்கூடியவை.

மேற்கூறிய பானங்களை நாமும் அடிக்கடி உட்கொண்டு சீரான முறையில் உடல் எடையைப் பராமரிப்போம்.

மாதவிடாய் சுழற்சியும், சரும பாதிப்புகளும்! 

World Tourism Day - இந்நாள் சுற்றுலா மற்றும் அமைதியைக் கொண்டாடுகிறது!

நகைச்சுவை மட்டுமின்றி, உடல் மொழியாலும் ரசிக்க வைத்த சிரிப்பு சக்கரவர்த்தி நாகேஷ்!

Soya chunks ஆ? மீல்மேக்கர் ஆ? உடலுக்கு நல்லதா? கெட்டதா? பின்னணி என்ன?

பிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வைத் தடுக்கும் வழிகள்!

SCROLL FOR NEXT