ஆப்பிள் சைடர் வினிகரை பல காலமாக உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தி வருகிறோம். இது உடல் எடைக் குறைக்க, கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த, சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. தினமும் ஆப்பிள் சைடர் வினிகரை எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பயன்களைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
ஆப்பிள் சைடர் வினிகர் என்பது புளித்த ஆப்பிள், சர்க்கரை, ஈஸ்ட் போன்றவற்றை சேர்த்து செய்யப்படும் ஒருவகை வினிகராகும். இதை ஊறுகாய், சாலட் போன்ற உணவுகளைப் பதப்படுத்த பயன்படுத்துகின்றனர்.
ஆப்பிள் சைடர் வினிகரை தினமும் ஒரு தேக்கரண்டி எடுத்துக்கொள்வதால், உடல் எடை குறைவதாக சொல்லப்படுகிறது. வினிகரில் உள்ள அசிடிக் ஆசிட் உடலில் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.
ஆப்பிள் சைடர் வினிகர் இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. சாப்பிட்ட பிறகு ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகரை எடுத்துக்கொள்வது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. நெஞ்செரிச்சல் பிரச்னைக்கு ஆப்பிள் சைடர் வினிகர் அருமருந்தாக இருக்கிறது.
இதை தலைமுடியில் பயன்படுத்தி அலசும் பொழுது தலையில் இருக்கும் பொடுகு தொல்லை நீங்கி முடி நன்றாக பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் வளருவதற்கு உதவுகிறது.
தேனுடன் ஆப்பிள் சைடர் வினிகரை கலந்து குடிப்பதால் ஜுரம், இருமல் போன்ற தொல்லைகள் நீங்கும். ஆப்பிள் சைடர் வினிகரில் அசிடிக் ஆசிட் இருக்கிறது. இது குடலில் உள்ள செரிமான பாதையில் உள்ள புண்களை ஆற்ற உதவுகிறது. மேலும், இது உணவு செரிமானத்திற்கும், உடலை டீடாக்ஸிக் செய்யவும் உதவுகிறது.
ஆப்பிள் சைடர் வினிகரை கண்டிப்பாக தண்ணீரில் கலந்து நீர்க்கச் செய்த பிறகே அருந்த வேண்டும். அதுவே சரியான முறையாகும். இதை வெந்நீர் அல்லது குளிர்ந்த நீரில் உணவுக்கு முன்போ அல்லது பின்போ எடுத்துக்கொள்வது சிறந்ததாகும்.
ஆப்பிள் சைடர் வினிகரை எண்ணெய் பசை உள்ள சருமத்திற்கு டோனராக அல்லது கிளென்சராக பயன்படுத்தலாம். இது சருமத்தின் PH அளவை சமன் செய்ய உதவுகிறது. இதனால் சருமம் பளபளப்பாகும். இதில் ஆன்டி பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு தன்மை உள்ளதால், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க உதவுகிறது. ஆப்பிள் சைடர் வினிகரை தினமும் அளவாக எடுத்துக்கொள்வது நல்ல பலனைத் தரும்.