பசுமை மத்திய தரைக்கடல் உணவு (Green Mediterranean diet) என்பது தாவர அடிப்படையிலான உணவுகளை குறிக்கிறது. இறைச்சி உணவு உட்கொள்ளலை மிகவும் குறைத்து காய்கறிகள், பழங்கள், கொட்டைகள், முழு தானியங்கள் போன்றவற்றை உண்ணுவதன் மூலம் உடலுக்கு விளையும் ஆரோக்கியத்தைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
மத்திய தரைக்கடல் உணவுகளை உண்பதால் ஏற்படும் நன்மைகள்:
எடை மேலாண்மை: பசுமையான மத்திய தரைக்கடல் உணவு வகைகளில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பருப்பு வகைகள், கொட்டைகள், விதைகள், குறைந்த பதப்படுத்தப்பட்ட தாவர அடிப்படையிலான உணவுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இவை முழுமையான ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகள். எனவே, உடல் எடை நன்றாக குறையும். இந்த உணவு முறையை கடைப்பிடிப்பவர்களுக்கு உடல் எடை கட்டுக்குள் இருக்கும். எடை மேலாண்மைக்கு இது சிறந்தது.
இதய ஆரோக்கியம்: இதில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள், ஊட்டச்சத்து, நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் ஆகியவற்றின் காரணமாக இதய நோய அபாயம் வெகுவாக குறையும். நாள் முழுவதும் ஒருவரை மிகவும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
டைப் டு நீரிழிவு தடுப்பு: அரிசி, கோதுமை போன்ற கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுப் பொருட்களுக்கு மாற்றாக, இதில் காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகமாக இருப்பதால் டைப் டு நீரிழிவைத் தடுக்க உதவுகிறது. இதில் கார்போஹைட்ரேட் மிகவும் குறைவாக இருப்பதால் புரதம் மற்றும் நார்ச்சத்து நிரம்பிய உணவு வகைகள் அதிகமாக இருப்பதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு மிக மெதுவாகத்தான் ஏறும் எனவே, சர்க்கரை நோயாளிகளுக்கு மிக மிக ஏற்றது இந்த உணவு வகை.
புற்றுநோய் தடுப்பு: இந்த வகை உணவில் உள்ள அதிக ஆக்சிஜனேற்றம் மற்றும் நார்ச்சத்து காரணமாக புற்று நோய்களின் அபாயம் வெகுவாகக் குறைகிறது. இதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதால் நோய்களும் அவ்வளவு எளிதில் அண்டாது.
குடல் ஆரோக்கியம்: புளித்த உணவுகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சேர்ப்பது ஆரோக்கியமான உடல் நுண்ணுயிரிகளை ஊக்குவிக்கிறது. உடலின் நோய் எதிர்ப்பு செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் ஆதரிக்கிறது.
சுறுசுறுப்பு: அரிசி, கோதுமை போன்ற மாவுச்சத்து நிறைந்த உணவு பொருட்கள் உண்பதால், மயக்கம், சோர்வு போன்றவை வரும். ஆனால், புரதச்சத்து, நார்ச்சத்து ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த மத்திய தரைக்கடல் உணவை உண்பதால் எப்போதும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் ஒருவரால் இருக்க முடியும். நாள் முழுவதும் உற்சாகமாக உழைக்க முடியும்.
சுற்றுச்சூழல் நன்மைகள்: தாவர உணவு உற்பத்தி செய்ய கணிசமான குறைந்த நீரே தேவைப்படுகிறது. குறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் மண் அரிப்பை குறைக்கவும் நிலையான விவசாய நடைமுறைகளை மேம்படுத்தவும் உதவும்.
சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பு: தாவர அடிப்படையிலான உணவுகள் சுற்றுச்சூழலுக்கு மிகுந்த நன்மையை தரும். பாரம்பரிய மேற்கத்திய உணவுகளுடன் ஒப்பிடும்போது பசுமையான மத்திய தரைக்கடல் உணவு வகைகள் குறைவான சுற்றுச்சூழல் தாக்கத்தையே ஏற்படுத்தும்.
பல்லுயிர் பாதுகாப்பு: நிலையான விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலமும், வளம் மிகுந்த விலங்கு பொருட்களுக்கான தேவையை குறைப்பதன் மூலமும் பல்லுயிர் பாதுகாப்புக்கு உதவுகிறது.
மத்திய தரைக்கடல் டயட்: கொண்டைக்கடலை சாலட், அக்ரூட் பருப்புகள், புதிய பழங்கள், காய்கறிகள், கொட்டைகள், பருப்பு வகைகள், கீரை வகைகள், ஆலிவ் எண்ணெய், மூலிகைகள், முழு தானியங்கள் போன்றவையும் இறைச்சி வகைகளை மிகவும் குறைத்துக் கொண்டு, டோஃபு பீன்ஸ் போன்றவற்றை உண்ணலாம். ஒரு சிறிய கப் சாதம் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த டயட்டில் இனிப்புகள் மற்றும் வெண்ணை உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். சிவப்பு இறைச்சியை மிக மிகக் குறைவாக சாப்பிட வேண்டும்.