கொட்டாவி, இந்த வார்த்தையைக் கேட்டதுமே கொட்டாவி விட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறதா? அடுத்தவர்கள் கொட்டாவி விடுவதைப் பார்க்கும்போது நம்மை அறியாமல் நாமும் கொட்டாவி விட ஆரம்பித்து விடுவோம். இதற்கான காரணம் என்ன? கொட்டாவி ஏன் நமக்கு வருகிறது? போன்றவற்றை இந்தப் பதிவில் காண்போம்.
பொதுவாக, கொட்டாவி என்பது நமக்கு மிகவும் போர் அடித்தாலோ அல்லது தூக்கம் வரும்போது வரக்கூடிய ஒரு அறிகுறி என்று நினைக்கிறோம். ஆனால், கொட்டாவி என்பது நம்முடைய மூளை நம்மை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள அல்லது நம்மை எழுப்பி விடுவதற்காக உடலில் நடக்கக்கூடிய ஒரு செயலாகும்.
கொட்டாவி விடுவதால், உடலில் உள்ள தசைகளும், மூட்டுக்களும் விரிவடையும், இதயதத்துடிப்பு அதிகரிக்கும், நம்மை மேலும் எச்சரிக்கையாக இருக்க உதவும்.
கருவிலிருக்கும் குழந்தைக்கூட ஒரு நாளைக்கு 25 முறை கொட்டாவி விடும் என்று சொல்லப்படுகிறது. கொட்டாவி விடுவது வயதாக ஆக குறைந்து விடுவதாகக் கூறப்படுகிறது. கொட்டாவி என்பது மனிதர்களுக்கு மட்டுமே வருவது இல்லை. இது நாய், பூனை, மாடு, பறவை, மீன் போன்றவற்றுக்கும் வருகிறது.
கொட்டாவி விடும்போது மூளை குளிர்ச்சியடைவதாக சொல்லப்படுகிறது. அதிகமாகக் காற்றை உள்ளே இழுப்பதன் மூலமாகவும், முகத்தில் உள்ள இரத்த ஓட்டம் மாறுபடுவதுமே இதற்குக் காரணமாகும்.
கொட்டாவி வருவதற்கான காரணங்களாக சொல்லப்படுவது என்னவென்றால், தூங்கி எழுந்ததும் கை, கால்களை முறுக்கிக்கொண்டு கொட்டாவி விடுவது வழக்கமாக இருக்கும். இது நம் மூளையை எழுப்புவதற்காகவே ஆகும்.
நிச்சயமாக போர் அடிக்கும் பொழுதும் கொட்டாவி வரும். நாம் Stress ஆக இருக்கும் சமயத்திலும் கொட்டாவி வரும். உதாரணத்திற்கு, விளையாட்டு வீரர்கள் விளையாடுவதற்கு முன் கொட்டாவி விடுவார்கள்.
கொட்டாவி விடுவது போல நடிப்பதே உண்மையான கொட்டாவி வருவதற்குத் தூண்டுதலாக அமையும். அதிகமாக பசிக்கும்போதும் கொட்டாவி வரும். கொட்டாவி பற்றி யோசித்தாலோ அல்லது அடுத்தவர்கள் கொட்டாவி விடுவதைப் பார்த்தாலோ கூட கொட்டாவி வரும்.
கொட்டாவி விடுவது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு தொற்றிக்கொள்ளும் செயலாகும். கொட்டாவி விடுவது நம்முடைய Empathy உடன் தொடர்புடையது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ‘நானும் அதுபோலத்தான் உணருகிறேன்’ என்று சொல்வதன் வெளிப்பாடாகக் கருதப்படுகிறது.
விமானத்தில் பயணிக்கும்போது கொட்டாவி விடுவது நம் காதுகளில் இருக்கும் அழுத்தத்தை சமன் செய்வதற்கு உதவுகிறது. இந்தக் கட்டுரையைப் படித்து முடிப்பதற்குள் நீங்கள் எத்தனை கொட்டாவி விட்டீர்கள் என்று நினைவிருக்கிறதா?