பொதுவாக, குளிரும் பனியும் நிலவும் குளிர்காலங்களில் சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்கள் தாக்கக்கூடும், அவற்றிலிருந்து உடலை காத்துக்கொள்ள அத்திப்பழங்களை தினமும் உண்ணுவது அவசியம். அதன் பயன்களைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
1. அத்திப்பழங்களில் வைட்டமின் சி, ஏ மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் நிரம்பியுள்ளன. அவை உடலுக்கு தேவையான ஆற்றலையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் தருகின்றன. குளிர்கால நோய்களான சளி, காய்ச்சல் போன்றவற்றை எதிர்த்துப் போராடுகின்றன. மேலும், நோய் தொற்றுகள் தாக்காமல் பாதுகாக்கின்றன.
2. குளிர்காலத்தில் நமது உடலின் ஆற்றல் மிகவும் குறைந்து சோம்பலாக உணர்வோம். அத்திப்பழங்களில் இயற்கையாக குளுக்கோஸ், பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் உள்ளது. இவற்றை உண்பதால் உடலுக்கு தேவையான ஆற்றலை தந்து நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைக்கிறது.
3. ஜீரண சக்திக்கு வெகுவாக உதவுகிறது. நிறைய பேர் உடல் இயக்கம் குறைவாக இருக்கும் காரணத்தால் மலச்சிக்கலால் அவதிப்படுவார்கள். அவர்களுக்கு இந்த அத்திப்பழங்கள் கைகொடுக்கின்றன. ஜீரண சக்தியை தூண்டிவிட்டு நன்கு செரிமானம் ஆக வழி வகுத்து குடல் உறுப்புகளை ஆரோக்கியமாக வைக்கிறது. இவற்றை உண்பதால் வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. அதனால் உடல் எடையும் கூடுவதில்லை.
4. குளிருக்கு பயந்து கொண்டு வீட்டுக்குள்ளேயே இருப்பதால் எலும்பு சம்பந்தமான குறைபாடுகள் குளிர்காலத்தில்தான் அதிகமாக வரும். அத்திப்பழங்களில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்றவை எலும்புகளை உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகின்றன வயதானவர்களுக்கு மிகவும் உகந்ததாக திகழ்கின்றன.
5. அத்திப் பழங்களில் இருக்கும் பொட்டாசியம் சத்து ஒருவரின் இரத்த அழுத்தத்தை சீராக வைக்கிறது. இதனால் இதய சம்பந்தமான நோய்கள் வருவது தடுக்கப்படுகிறது. இதில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து உடலில் கொழுப்புகளின் அளவை குறைக்கிறது. அதனால் இதயத்திற்கு பாதுகாப்பு அளிக்கிறது.
ஃபிரஷ் ஆன அத்தி பழங்களையும் உண்ணலாம் அல்லது இவற்றை ஊற வைத்தும் கூட உண்ணலாம். இதில் உள்ள இயற்கையான இனிப்பு சுவை மனதுக்கும் மகிழ்ச்சி அளிக்கும்.