ஒவ்வொரு மனிதருக்கும் மூளையின் அளவு வேறுபடும். இந்த வேறுபாடுகள் மரபியல், சுற்றுச்சூழல், ஆரோக்கியம் மற்றும் பரிணாம காரணிகளின் கலவையால் தீர்மானிக்கப்படுகின்றது. அது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
மனித மூளையின் ஆச்சர்யங்கள்:
சிக்கலான உறுப்பு: மூளை உடலில் மிகவும் சிக்கலான உறுப்பு. இது தோராயமாக 86 பில்லியன் நியூரான்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் ஆயிரக்கணக்கான ஒத்திசைவுகளால் மற்ற நியூரான்களுடன் இணைக்கப்பட்டு, நம்ப முடியாத சிக்கலான வலையமைப்பை உருவாக்குகின்றன.
ஆற்றல் நுகர்வு: மூளை ஒரு நபரின் உடல் எடையில் 2 சதவிகிதம் மட்டுமே என்றாலும், அது உடலின் ஆற்றலில் 20 சதவிகிதம் பயன்படுத்துகிறது. இந்த அதிக ஆற்றல் பயன்பாடுக்கு மூளையின் நிலையான செயல்பாடே காரணமாகும். மூளையில் உள்ள நியூரான்கள் ஒரு மணி நேரத்திற்கு 268 மைல்கள் (431 கி.மீ./ம) வேகத்தில் தகவல்களை அனுப்பும்.
பிளாஸ்டிசிட்டி: மூளை வாழ்நாள் முழுவதும் புதிய நரம்பியல் இணைப்புகளை உருவாக்குவதன் மூலம் தன்னை மறுசீரமைக்க முடியும். நியூரோபிளாஸ்டிசிட்டி எனப்படும் இந்தத் திறன் கற்றல், நினைவாற்றல் மற்றும் மூளைக் காயங்களிலிருந்து மீள்வதற்கு முக்கியமானது.
ஒவ்வொரு மனிதருக்கும் மூளையின் அளவு வேறுபட்டு இருப்பதன் காரணங்கள்:
மரபியல்: பொதுவாக, மனிதர்கள் தங்களது உடல் அமைப்பு, உயரம், கண் அமைப்பு, நிறம் போன்ற பண்புகளை தம் பெற்றோரிடமிருந்து பெறுவது போல மூளையின் அளவும், மரபணு அமைப்பால் பாதிக்கப்படலாம்.
ஆண்/பெண் மூளை: ஆண்களின் மூளை பெண்களின் மூளையை விட பெரியது. ஆண்களின் மூளை சராசரியாக 1370 கிராம் எடை உள்ளது. பெண்களுக்கு சராசரியாக 1200 கிராம் இருக்கும். ஆனால், இந்த அளவு வேறுபாடு புத்திசாலித்தனத்துடன் தொடர்புடையது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோலவே, தனி நபர்களுக்கு இடையே மூளை அளவில் பெரிய வேறுபாடுகள் உள்ளன.
வரலாற்றுப் போக்குகள்: தற்கால மனித மூளைகள் ஆரம்ப ஹோமோ சேபியன்சை விட 13 சதவீதம் சிறிதாக இருக்கின்றன. இது வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்களுடன் தொடர்புடையது. சிந்தனை மாற்றம் மற்றும் வெப்பமண்டல சூழலுக்கு ஏற்ப சிறிய மொழிகள் மூளைகளாக மாறி இருக்கலாம் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.
ஊட்டச்சத்து: குழந்தைகளின் ஆரம்பகால வளர்ச்சியின்போது மூளை வளர்ச்சிக்கு ஊட்டச்சத்து மிகவும் முக்கியம். ஊட்டச்சத்து குறைபாடு சிறிய மூளை அளவு மற்றும் குறைபாடு வளர்ச்சிக்கு வழிவகுக்கும். கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகள் மூளை வளர்ச்சி மற்றும் இணைப்பை ஊக்குவிக்கும்.
கர்ப்பகால காரணிகள்: சிசு, தாயின் வயிற்றில் இருக்கும்போது தாயின் உடல் நலம், ஊட்டச்சத்து மற்றும் நச்சுப் பொருட்களின் வெளிப்பாடு போன்ற கர்ப்ப காலத்தில் ஏற்படும் நிலைமைகள் குழந்தையின் வளரும் மூளையை பாதிக்கலாம். அதேபோல, சில நோய்கள் அல்லது காயங்களும் மூளை வளர்ச்சி மற்றும் அளவை பாதிக்க நேரலாம்.
வளர்ச்சி: குழந்தைப் பருவத்தில் மனித மூளை வேகமாக வளரும். 2 வயதிற்குள், ஒரு குழந்தையின் மூளை வயது வந்தவரின் மூளையின் அளவில் 80 சதவிகிதம் வளரும். மேலும், அது இளமைப் பருவத்தில் அதன் தொடர்புகளை நன்கு வளர்த்து, செம்மைப்படுத்துகிறது.
மூளை செயல்பாடு: மூளை இரண்டு அரைக்கோளங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இடது அரைக்கோளம் தர்க்க ரீதியான சிந்தனை, மொழி மற்றும் பகுப்பாய்வு பணிகளுடன் தொடர்புடையது. வலது அரைக்கோளம் படைப்பாற்றல், இடஞ்சார்ந்த திறன் மற்றும் உள்ளுணர்வு ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.