Health benefits of almonds 
ஆரோக்கியம்

பாதாம் பருப்பை எப்படி உட்கொண்டால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

ஜெயகாந்தி மகாதேவன்

ம் உடலுக்கு ஆரோக்கியம் தருவதில் அரிசி, பருப்பு, காய்கறி, பழங்கள், மீன், மாமிசம் போன்றவை எவ்வாறு முன்னிலையில் நிற்கின்றனவோ அந்த அளவுக்கு தாவர வகைக் கொட்டைகள் மற்றும் விதைகளுக்கும் இடமுண்டு. கொட்டைகளில் பிரதானமாகக் கருதப்படுபவை பாதாம் (Almond), வால்நட் மற்றும் பிஸ்தா எனக் கூறலாம். இவற்றுள் பாதாம் பருப்பை எவ்வாறெல்லாம் உபயோகிக்க என்னென்ன நன்மைகள் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. பாதாம் பருப்பை இரவில் நீரில் ஊற வைத்துப் பின் காலையில் தோலை உரித்து விட்டு உட்கொண்டால் பருப்பின் கடினத் தன்மை நீங்கி, அது மிருதுத் தன்மை கொண்டிருக்கும். இதனால் செரிமானம் சிறப்பாக நடைபெற்று அவற்றில் உள்ள சத்துக்கள் முழுமையாக உடலுக்குள் உறிஞ்சப்படும்.

2. பாதாம் பாலை, டெய்ரி மில்க்கிற்கு (Dairy Milk) சிறந்த மாற்றாக எடுத்துக் கொள்ளலாம். இதில் கால்சியம், வைட்டமின் D மற்றும் ஆரோக்கியம் நிறைந்த கொழுப்புகள் நிறைந்துள்ளன. பாதாம் பால் எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், செரிமானம் சிறப்பாக நடைபெறவும் உதவும். இதில் கலோரி அளவும் குறைவு. பால் பொருட்கள் ஒவ்வாமை உள்ளவர்கள் எடுத்துக் கொள்ளக்கூடிய சிறந்த உணவு பாதாம் பால்.

3. பாதாம் எண்ணெய் சரும ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை தரக்கூடியது. இதிலுள்ள வைட்டமின் E சத்தானது, சருமத்தை ஈரப்பசையுடன் வைக்கவும் சருமத்திலுள்ள வீக்கங்களைக் குறைக்கவும் உதவும். மேலும், வயதுக்கு அதிகமான முதுமைத் தோற்றம் பெறுவதையும் இது தடுத்து நிறுத்தும்.

4. பாதாம் பவுடர் பேக்கரிகளில் விதவிதமான கேக்குகள் தயாரிப்பிலும், சமையலிலும் பாரம்பரிய மாவுகளுக்கு மாற்றாக உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. இது க்ளூட்டன் ஃபிரீயாகவும் புரோட்டீன் சத்து நிறைந்ததாக இருப்பதும் கூடுதல் நன்மை. மேலும், இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும் இது உதவும்.

5. பாதாம் பருப்பை அப்படியே பச்சையாக சாப்பிடுவதாலும் பல நன்மைகள் கிடைக்கும். இதிலுள்ள அதிகப்படியான நல்ல கொழுப்புகள், நார்ச்சத்து, புரோட்டீன் போன்றவை இதய ஆரோக்கியத்தை சிறந்த முறையில் காக்க உதவும். சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், உடல் எடையை சமநிலையில் வைத்துப் பராமரிக்கவும் உதவும். இதிலுள்ள வைட்டமின் E சத்து மூளையின் அறிவாற்றலை வளர்க்கவும், அல்ஸிமெர் என்னும் மறதி நோய் வராமல் தடுக்கவும் உதவும். நார்ச்சத்து குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் ஆரோக்கியமாக வளரவும், செரிமானம் சிறக்கவும், மலச்சிக்கல் நீங்கவும் உதவும்.

இத்தனை நன்மைகள் தரக்கூடிய பாதாம் பருப்பை நம் தினசரி உணவில் தவறாமல் சேர்த்து உட்கொண்டு நன்மை பெறுவோம்.

துணிந்தாருக்கு துக்கம் இல்லை!

இயற்கையிடம் சுறுசுறுப்பை கற்றுக் கொள்ளுங்கள்!

தலைக்கு ஷாம்பு பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க!

வாழ்க்கை என்பது கொடுக்கல் வாங்கல் மட்டுமல்ல…

புடவைக் கட்டும் பொழுது பெண்கள் செய்யக்கூடாத 9 தவறுகள்!

SCROLL FOR NEXT