அன்றாடம் நாம் உணவில் பயன்படுத்தும் பொருட்களில் முக்கியமானதாக உள்ளது நிலக்கடலை. வெல்லம் சேர்த்துத் செய்யப்படும் பர்பி உருண்டை முதல், சட்னி வரை குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஸ்நாக்ஸ் உணவாகப் பயன்படுகிறது நிலக்கடலை. இதில் நிறைந்திருக்கும் சத்துகள் உடலுக்கு வலு தரும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், இந்த நிலக்கடலையை அதிகம் நாம் உணவில் சேர்த்துக்கொள்ளும்போது அதனால் என்ன பின் விளைவுகள் உண்டாகிறது என்பது தெரியுமா?
நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது, நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பைக் குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. அதாவது, 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம் மோனோ அன்சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலி அன்சாச்சுரேட்டேட் 16 கிராம் உள்ளது. இந்த இருவகை கொழுப்பும் நமது உடம்புக்கு நன்மை செய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது, நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
இதெல்லாம் நமக்கு நன்மை செய்யும் சரி… ஆனால், எப்படி தீமை ஆகிறது?
சிலர் நிலக்கடலை சாப்பிட்டால் ஜீரணமே ஆவதில்லை என்று புலம்புவார்கள். காரணம், நிலக்கடலையில் லெக்டின் எனும் சத்து அதிகம் இருப்பதால் இதனை எளிதாக ஜீரணிக்க முடியாது. மற்ற உணவுகளையும் செரிக்க விடாமல் தானும் செரிமானம் அடையாமல் அடைத்துக் கொண்டு விடும். இதனால் எலும்புகளில் வீக்கம், தேய்மானம் போன்றவை ஏற்படும்.
மேலும், நிலக்கடலையில் சோடியம் குறைவாகத்தான் இருக்கிறது. 28 கிராம் நிலக்கடலையில் 1500 மில்லி கிராம் சோடியம் இருக்கும். மதிப்புக் கூட்டப்பட்ட உப்புக்கடலை அல்லது எண்ணெயில் வறுத்த கடலை என்றால் இதன் அளவு இன்னும் அதிகரிக்கும். இதனைத் தொடர்ந்து சாப்பிடும்போது சோடியம் அளவு கூடும். அப்படி கூடினால் அவை ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இதனால் மாரடைப்பு, வாதம் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
ஒருசிலர் எப்போதும் வறுத்த கடலையை வாங்கிப் பாக்கெட்டில் வைத்துக் கொறித்துக்கொண்டே இருப்பார்கள். எந்த ஒரு பொருளும் அளவுக்கு மீறினால் நஞ்சுதானே? இதயம் காக்கும் நன்மை தரும் நிலக்கடலையை சரியான அளவில் உபயோகித்து தீமைகளில் இருந்து உடலைக் காப்போம்.