டார்க் சாக்லேட் 
ஆரோக்கியம்

டார்க் சாக்லேட் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

ஜெயகாந்தி மகாதேவன்

லகம் முழுவதும் அநேகம் பேர் டார்க் சாக்லேட்டை விரும்பி உட்கொண்டு வருகின்றனர். பலர் உணவுக்குப் பின் ஒரு துண்டு டார்க் சாக்லேட்டை வாயில் போட்டுக் கொள்ளத் தவறுவதில்லை. டார்க் சாக்லேட்டில் உள்ள அதீதமான ஊட்டச் சத்துக்களும், அதன் சுவையும்  கில்ட் ஃபிரீ (guilt free)யான தன்மையுமே இதன் காரணமாகும். இது நம்மை மகிழ்ச்சியான மன நிலைக்குக் கொண்டு செல்லும். நம் உடலிலுள்ள வீக்கங்களைக் குறைக்கும். இரத்த ஓட்டத்தையும் சீராக்கி இதய ஆரோக்கியத்தைப் பலப்படுத்தும். இதில் நிறைந்துள்ள பிளவனாய்ட், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் மக்னீசியம் போன்றவை ஸ்ட்ரெஸ்ஸைக் குறைத்து அமைதியான மனநிலை தந்து ஆழ்ந்த உறக்கம் பெற உதவும்.

டார்க் சாக்லேட் உண்ணும்போது அதிலுள்ள கோகோ பவுடர் உடலுக்குள் சென்று நைட்ரிக் ஆக்ஸைடை உற்பத்தி செய்யும். நைட்ரிக் ஆக்ஸைட் இரத்த நாளங்களை தளர்வு அடையச் செய்து இரத்த ஓட்டத்தை சீராக்கும். இரத்தக் குழாய்களில் இருக்கும் அடைப்பையும் நீக்கி இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்தும். இதனால் இதய ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். இந்த சாக்லேட்டில் உள்ள பிளவனாய்ட்கள் முதுமையைத் தள்ளிப் போடவும் உதவும். க்ரீன் டீ, ப்ளூ பெரி மற்றும் ரெட் ஒயினில் இருப்பதை விட டார்க் சாக்லேட்டில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இதனாலேயே இது ஒரு சூப்பர் உணவாகக் கொண்டாடப்படுகிறது.

இத்தனை நன்மைகள் இருந்தும் இதில் ஒரு குறைபாடும் உள்ளது. அது யாதெனில் இந்த சாக்லேட்டில் காட்மியம் மற்றும் லெட் (Cadmium and Lead) என்ற ஹெவி மெட்டல் வகைகள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மெட்டல் வகைகள்  பூமியிலிருந்து காகோ (Cacao) மரத்தினால் உறிஞ்சப்பட்டு காகோ பீன்ஸ் கொட்டைகளுக்குள் கலந்து விடுகிறது. காகோ பீன்ஸ்ஸை அரைத்து வறுத்து கோகோ பவுடர் தயாரிக்கப்படுகிறது. டார்க் சாக்லேட் தயாரிப்பில் கோகோ பவுடர் அதிகளவில் சேர்க்கப்படுகிறது.

டார்க் சாக்லேட் உண்ணும்போது இந்த மெட்டல்கள் உடலுக்குள் சென்று நாளடைவில் திசுக்களில் கலந்து விடுகின்றன. இது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல. இதனால் டார்க் சாக்லேட்டை அறவே தவிர்க்க வேண்டும் என்று கூறிவிட முடியாது. டார்க் சாக்லேட் வாங்கும்போது நல்ல பிராண்ட்டை தேர்வு செய்து குறைந்த அளவு மெட்டல் கலந்துள்ளதா என பரிசோதித்து உறுதி செய்த பின் வாங்குவது நலம். மேலும், டார்க் சாக்லேட்டை தினசரி சாப்பிடுவதைத் தவிர்த்து வாரத்தில் இரண்டு முறை மட்டும் சாப்பிட்டு வந்தால் பாதிப்பு அதிகம் இருக்காது.

கடலை மாவை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க! 

ஐப்பசி அன்னாபிஷேகம் தோன்றிய வரலாறு!

உன்னால் முடியும் பெண்ணே! இந்த 5 அடிப்படை விஷயங்கள் இருந்தால் போதுமே!

Dear Girls… உங்கள் தொப்பையை மறைக்க இப்படி ட்ரெஸ் பண்ணுங்களேன்!

'இளமையில் கல்' என்பதன் அர்த்தமும் அதன் புரிதலும்... இது ரொம்ப தப்பாச்சே!

SCROLL FOR NEXT