ஆரோக்கியம்

உடலில் வைட்டமின் ஈ குறைபாட்டால் என்ன ஆகும் தெரியுமா?

இந்திராணி தங்கவேல்

வைட்டமின் ஈ கொழுப்பில் கரையும் தன்மையுடையது ஆகும். வைட்டமின் ஈ உடலுக்கு பல்வேறு நன்மைகளை விளைவிக்கும் வைட்டமின் என்று கூறினால் அது மிகையல்ல. உடல் நலனுக்கு மிக முக்கியமாக ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தியாக வைட்டமின் ஈ உதவுகிறது. மேலும், வைட்டமின் கே உற்பத்திக்கும் இந்த வைட்டமின் உதவி செய்வதால் காயங்கள், புண்கள் போன்றவற்றில் ரத்தம் உறைவதற்கு மறைமுகமாக உதவுகிறது. இது இதயத்துக்குத் தேவையான ஆக்சிஜன் அளவை குறைப்பதால் இதய நோய்களுக்கும், இதய ரத்த அடைப்பு நோய்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

குறை மாத குழந்தைகளை பிழைக்க வைப்பதற்கு வைட்டமின் ஈ பெருமளவில் பயன்படுவதாக மருத்துவ ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  வைட்டமின் ஈ குறைந்துள்ள குறைமாத குழந்தைகளிடத்தில் கொழுப்புச்சத்தை உட்கிரகித்து கொள்ளும் திறன் குறைகிறது. கருவுற்றிருக்கும் தாய் போதுமான வைட்டமின் ஈ சத்துள்ள உணவுகளை உட்கொள்ளாததால் பிறக்கும் குழந்தைக்கும் வைட்டமின் ஈ சத்து குறைந்துவிடும். பெரியவர்களிடமும் வைட்டமின் ஈ சத்து குறைந்தால் கொழுப்பு சத்தும் குறைந்து போகும்.

சரும பிரச்னைகளில் வைட்டமின் ஈ முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக, உலந்த சருமம் உள்ளவர்களுக்கும், வெளித்தோலில் சுருக்கம் கொண்டவர்களுக்கும் இது பெரிதும் உதவுகிறது. மாதவிடாய் நின்றவர்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்னைகள் தீர்வதற்கு இந்த வைட்டமின் பெரிதும் பயன்படுகிறது. உடலில் வைட்டமின் ஏ வை சேகரிப்பதற்கும் இது பயன்பாட்டில் உள்ளது. வைட்டமின் ஈ மருந்துடன் இரும்பு சத்தும் சேர்த்து உட்கொள்ளக்கூடாது என்று மருத்துவ அறிவியல் அறிவுறுத்துகிறது.

வைட்டமின் ஈ குறைபாடு: எந்த வைட்டமின் குறைபாடு இருந்தாலும், வைட்டமின் ஈ குறைபாடு இல்லாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், இந்த வைட்டமின் குறைந்தால் முக்கியமான பல்வேற பிரச்னைகள் தோன்றுவதற்கு வழி வகுத்துவிடும். குறிப்பாக, ஜீரணக் கோளாறுகள், ஜீரணமான உணவை சரிவர கிரகிக்காத காரணத்தால் கொழுப்பு மற்றும் கொழுப்பில் கரையும் பல்வேறு வைட்டமின்கள் வீணாகின்ற போதும் இந்தக் குறைபாடு ஏற்படலாம். வைட்டமின் ஈ குறைபாட்டால் இதய நோய்கள், புண் ஆறாமல் இருத்தல், மலட்டு தன்மை, மாதவிடாய் கோளாறுகள் போன்றவை ஏற்பட வாய்ப்பு உண்டு. கல்லீரல் பாதிப்பு மற்றும் தசைகள் வலுவிழந்து பொலிவு குறைந்து விடுதல் போன்றவையும் உண்டாகலாம்.

அதுமட்டுமின்றி, முதுகு தண்டுவட பகுதியின் பின்பகுதி பாதிக்கப்படும். இதனால் உடலின் சில பகுதிகளில் தொடு உணர்ச்சியறிய முடியாது. சிலருக்கு நடக்க இயலாமல் போவதற்கும் வாய்ப்பு உண்டு. எனவே, வைட்டமின் ஈ விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, இந்த வைட்டமின் நாம் பயன்படுத்தும் உணவு எண்ணெய்களில் இருந்தே நமக்கு அதிகமாகக் கிடைக்கிறது.

வைட்டமின் ஈ அதிகமுள்ள உணவுகள்: கோதுமை, ஓட்ஸ் போன்ற தானியங்களில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. மேலும், கீரை வகைகள், முட்டை, கொட்டைகள், வித்துக்கள் போன்றவற்றிலும் போதுமான அளவு வைட்டமின் ஈ உள்ளது. இவை மட்டுமின்றி, தாவர எண்ணெய்களான சூரியகாந்தி, ஆலிவ் எண்ணெய் மற்றும் கொழுப்பில் வைட்டமின் ஈ நிறைவே உள்ளது. மாமிச உணவுகளில் இது குறைந்த அளவே காணப்படுகிறது.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT