குழந்தைகள் தூக்கத்தில் பல்லை நரநரவென கடிப்பார்கள். அடிக்கடி மூக்கை நோண்டுவார்கள். ஆசனவாயில் அரிப்பு இருக்கும். சரியாக உணவருந்த மாட்டார்கள். அப்படியே சாப்பிட்டாலும் அவர்களுக்கு உடல் எடை அதிகரிக்காது. இதனால் பிள்ளைகளின் வளர்ச்சி குறையும். இரவில் நன்கு உறங்காமல் அடிக்கடி எழுந்து அழுவார்கள். இவை அனைத்தும் உங்கள் குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சி இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள் ஆகும்.
வயிற்றில் பூச்சிகள் ஏற்பட காரணம்: அதிக இனிப்பு சாப்பிடுவதால்தான் குடற்புழுக்கள், கீரை பூச்சிகள் உண்டாகின்றன என்று கூறினாலும் வேறு சில காரணங்களும் இதற்கு உள்ளன. அசுத்தமான சுற்றுப்புறம் ஒரு முக்கியமான காரணம்.
புழுக்களில் உருண்டை புழு, கொக்கி புழு, நூல் புழு, நாடா புழு என பல வகைகள் இருக்கின்றன. இவை இடும் முட்டை மனித உடலில் மலம் மூலமாக வந்து நிலத்தில் மண்ணில் கலந்து விடும். குழந்தைகள் மண்ணில் விளையாடும்போது கைகளிலும், நக இடுக்குகளிலும் அந்த கிருமிகள் ஒட்டிக் கொள்ளும். குழந்தைகள் தன்னை அறியாமல் கைகளை வாயில் வைக்கும்பொழுது புழுக்கள் எளிதாக அவர்கள் குடலுக்குள் செல்கின்றன. அதேபோல், சில குழந்தைகள் செருப்பில்லாமல் வெறும் கால்களில் நடக்கும்பொழுது கால்கள் வழியாக கொக்கி புழுக்கள் உடலுக்குள் செல்லும் வாய்ப்பு அதிகம்.
பூச்சிகளை எப்படி வெளியேற்றுவது?
1. பூச்சியை வெளியேற்ற ஆரம்ப சுகாதார மையங்களில் இலவசமாகவே மருந்துகள், மாத்திரைகள் கிடைக்கின்றன. முக்கியமாக, வயிற்றுப் பூச்சிக்காக மருந்து எடுத்துக் கொள்ளும்போது வீட்டில் இருக்கும் அனைவரும் ஒரே சமயத்தில் அந்த மாத்திரையை எடுத்துக்கொள்வது நல்லது. அப்போதுதான் நிரந்தர தீர்வு கிடைக்கும்.
2. கை வைத்தியம் என்று பார்த்தால் குழந்தைகளுக்கு இளம் கொழுந்து வேப்ப இலைகளை அரைத்து சாறு எடுத்து கொடுக்கலாம். கொஞ்சம் பெரிய குழந்தைகளாக இருந்தால் இளம் வேப்பம் கொழுந்துகளை அரைத்து சிறிது உப்பு போட்டு மோரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கக் கொடுக்க, நல்ல பலன் கிடைக்கும்.
3. குடற்புழுக்கள் வராமல் தடுக்க பப்பாளி ஜூஸ் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து வாரம் இரு முறை பருகக் கொடுக்கலாம்.
4. பூண்டை உணவில் அதிகம் சேர்ப்பது நல்லது. பூண்டை சிறிது நெய்யில் வறுத்து உப்பு சேர்த்து குழந்தைகளுக்கு ரசம் சாதத்துடன் சேர்த்து கொடுக்க குடற்புழுக்கள் உருவாவதைத் தடுக்கலாம்.
5. வயிற்றில் பூச்சிகள் வராமல் இருக்க சுத்தம்தான் மிகவும் அவசியம். குழந்தைகளின் நகங்களை அவ்வப்பொழுது வெட்டி விட வேண்டும். பிள்ளைகள் விரல்களை வாயில் வைக்க அனுமதிக்கக் கூடாது.
6. ஈக்கள் மொய்த்த பண்டங்களை சாப்பிடாமல் இருப்பது. எதையும் சாப்பிடுவதற்கு முன்பு கைகளை நன்கு கழுவ வேண்டியது அவசியம்.
7. கால்களில் செருப்பு அணியாமல் வெளியே செல்ல அனுமதிக்கக் கூடாது. அதேபோல், வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளை தூக்கிக் கொஞ்சவோ, முகத்துக்கு அருகில் முகம் வைத்து விளையாடவோ கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது.
8. நாடா புழுக்களை அகற்ற பூசணியின் உலர்ந்த விதைகளை பொடித்து நீர் விட்டு நன்கு கொதிக்க விட்டு வடிகட்டவும். இதனை வாரம் இரு முறை வெறும் வயிற்றில் குடிக்கக் கொடுக்க நல்ல பலன் தெரியும் கிடைக்கும்.
புழுக்கள் இவை எதற்கும் கட்டுப்படவில்லை என்றால் தகுந்த மருத்துவரை கலந்தாலோசித்து மருந்துகள் கொடுப்பது நல்லது. அவசியமும் கூட.