சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னால் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய், தூக்கமின்மை முதலானவை அறுபது வயதைக் கடந்தவர்களையே தாக்கின. காரணம். அக்காலத்தவர்கள் பெரும்பாலும் நடந்தே தங்களுடைய அன்றாடப் பணிகளைச் செய்து வந்தார்கள். ஆனால், தற்காலத்தில் இளம் வயதினரைக் கூட இத்தகைய நோய்கள் தாக்குகின்றன. இதனால் ஏற்படும் இழப்புகள் ஏராளம்.
தற்காலத்தில் சிறுவயதினர் முதல் பெரியவர்கள் வரை அருகில் உள்ள இடங்களுக்குச் செல்ல வேண்டுமென்றால் கூட மோட்டர் சைக்கிளைப் பயன்படுத்தும் மனோபாவம் வளர்ந்து விட்டது. மேலும், இனிப்புகள் மற்றும் துரித உணவுகளை அதிக அளவில் சாப்பிடத் தொடங்கி விட்டனர். இதனால் அதிகப்படியான கொழுப்புகள் உடலில் சேர்ந்து பலவிதமான அபாயகரமான வியாதிகளை உண்டாக்குகின்றன. இதையெல்லாம் தவிர்த்து ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதற்கான ஒரே வழி நடப்பதுதான்.
தினந்தோறும் காலை வேளைகளில் குறைந்தபட்சம் நிற்காமல் நாற்பத்தைந்து நிமிடம் தொடர்ந்து நடக்க வேண்டும். இதுவே முறையான நடைப்பயிற்சி. இப்படிச் செய்து வந்தால் உடலில் புத்துணர்ச்சி ஏற்பட்டு வியாதிகள் உங்களை நெருங்க பயப்படும் என்பது அறிவியல்பூர்வமான உண்மை. இனி தினந்தோறும் நடப்பதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றிப் பார்ப்போம்.
தினந்தோறும் நாற்பத்தைந்து நிமிடங்கள் நடந்தால் அதிகப்படியான உடல் எடை குறையும். இதனால் இதய நோய்கள் மற்றும் பக்கவாத நோய்கள் தாக்குவதைத் தவிர்க்கலாம்.
தினமும் காலை வேளையில் நடப்பதனால் சுத்தமான காற்றை நாம் சுவாசிக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மனதிற்கும் ஒருவித புத்துணர்ச்சி கிடைக்கும்.
தொடர்ந்த நடைப்பயிற்சி தசைகளையும் எலும்புகளையும் வலுவாக்குவதாக ஆய்வுகள் கூறுகின்றன. நடப்பதன் மூலமாக ஆயுளும் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.
தொடர்ந்து வேகமான நடைப்பயிற்சி செய்வதால் அது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி மேம்பட்டு சளி, காய்ச்சல் முதலான நோய்கள் தாக்குவது குறைகிறது.
தொடர்ந்து நடைப்பயிற்சியால் நல்ல ஆழ்ந்த உறக்கம் ஏற்படும். தினமும் இரவில் எட்டு மணி நேரம் நன்றாகத் தூங்கினால் மனம் அமைதி அடைந்து மறுநாள் சுறுசுறுப்பாக இயங்க வழிவகை செய்கிறது.
நாம் சாப்பிடும் உணவுகள் எளிதில் செரிமானம் அடைய நடைப்பயிற்சி உதவுகிறது. நாம் சாப்பிட்ட உணவானது சரியான அளவில் செரிமானம் அடைந்து விட்டால் நமது உடல் ஆரோக்கியமாக சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கும்.
காலை வேளைகளில் நடப்பது சிறந்ததாகக் கருதப்படுகிறது. நடைப்பயிற்சியின்போது தெரிந்தவர்கள் எவரேனும் வந்தால் அவருடன் நின்று பேசுவதைத் தவிர்க்க வேண்டும். மேலும், நடைப்பயிற்சியின்போது தெரிந்தவர்கள் எதிரில் வந்தால் அவர்களைப் பார்த்து ஒரு ஹலோ சொல்லிவிட்டு நடைப்பயிற்சியைத் தொடர வேண்டும். இடைவிடாத தொடர்ந்த நடைப்பயிற்சியே முழுமையான நன்மைகளைத் தரும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
நடைப்பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதால் அளவிற்கு அதிகமாகவும் நடக்கக் கூடாது. இது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். உடல் பாதிப்புகளைக் கூட உண்டாக்கக் கூடும். தினமும் சீரான வேகத்தில் நாற்பத்தைந்து நிமிடங்கள் நடப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
நடைப்பயிற்சி என்பது தொடக்கத்தில் சிரமமாகத்தான் இருக்கும். ஆனால், ஒரு மாதம் தொடர்ந்து நடந்து பழகிவிட்டால் அதன் பின்னர் அது உங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிடும். ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக அமையும். இன்று முதல் நடைப்பயிற்சியைத் தொடங்குங்கள். ‘நட’ப்பதெல்லாம் நன்மைக்கே என்பதை வெகு விரைவில் உணர்வீர்கள்.