‘ஹேங் நெயில்ஸ்’ (Hangnails) எனப்படும் தொங்கு நகங்கள், கை விரல்கள் அல்லது கால் விரல்களின் பக்கவாட்டில் உள்ள சிறிய கிழிந்த சருமத்தின் துண்டுப் பகுதி. இவை விரல்களை சுற்றியுள்ள சருமத்தில் ஏற்படும் சிறிய விரிசல்கள். அவை ஏன் ஏற்படுகின்றன அவற்றை சரி செய்யும் விதம் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
தொங்கு நகங்கள் ஏற்படுவதற்கான காரணங்கள்:
1. வறண்ட சருமம்: வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு தொங்கு நகங்கள் தோன்றுவது ஒரு பொதுவான காரணமாகும். சருமம் வறண்டு இருக்கும்போது நகங்கள் உடையக் கூடியதாகவும் விரிசல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
2. வைட்டமின் குறைபாடுகள்: பயோட்டின், வைட்டமின் பி12 அல்லது வைட்டமின் ஈ போன்றவைகளின் குறைபாடுகள் காரணமாகவும் தொங்கு நகங்கள் ஏற்படும்.
3. தண்ணீரில் அதிக நேரம் வேலை செய்தல்: நீண்ட நேரம் குளித்தல், துணிகளை துவைத்தல், பாத்திரங்களை கழுவுதல் போன்ற தண்ணீரில் அதிகப்படியான நேரம் வேலை செய்வதன் காரணமாகவும் தோன்றலாம்.
4. கடுமையான ரசாயனங்கள்: ரசாயனம் அதிகம் உள்ள சோப்பு, துணி துவைக்கும் லிக்விட்கள் வீடு துடைக்கப் பயன்படும் ரசாயனம் கலந்த துடைப்பான்கள், சுத்தமூட்டிகள், துப்புரவுப் பொருட்கள் ஆகியவற்றின் வெளிப்பாடும் தொங்கு நகங்களுக்கு வழிவகுக்கும்.
5. நகம் கடித்தல்: சிலருக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருக்கும். அப்படி நகம் கடிக்கும்போது, அவர்களை அறியாமலேயே விரல்களின் பக்கவாட்டு சருமத்தைக் கடித்து விடுவர். அதனால் அவர்களுக்கு அடிக்கடி தொங்கு நகங்கள் ஏற்படும்.
6. நெயில் பாலிஷ் அகற்றுதல்: அசிட்டோன் அல்லது பிற கடுமையான ரசாயனங்கள் கொண்ட நெயில் பாலிஷ் ரிமூவர்களை பயன்படுத்துவது சருமத்தை வறண்டு தொங்கு நகங்களை ஏற்படுத்தும்.
7. ஹார்மோன் மாற்றங்கள்: கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன்களின் ஏற்ற இறக்கங்கள், மாதவிடாய் நிறுத்தம் மற்றும் பிற ஹார்மோன் மாற்றங்கள் வறண்ட சருமத்தையும் தொங்கல் நகங்களையும் ஏற்படுத்தும். அரிக்கும் சரும அழற்சி, தடிப்பு சரும அழற்சி போன்றவை தொங்கு நகங்களுக்கு வழிவகுக்கும்.
8. ஊட்டச்சத்து குறைபாடுகள்: துத்தநாகம், இரும்பு, கால்சியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் குறைபாடுகள் காரணமாகவும் இவை தோன்றலாம்.
தொங்கு நகங்களை தவிர்ப்பதற்கான வழிகள்:
1. சரியான அளவு நீர் அருந்தி உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும். சமச்சீரான பயோட்டின் வைட்டமின் பி12, வைட்டமின் இ போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும். மிகவும் சூடான அல்லது குளிர்ந்த நீர் போன்ற தீவிர வெப்ப நிலையில் உடலை வைத்திருக்கக் கூடாது. இது சருமத்தை மிகவும் பாதிக்கும்.
2. கை, கால்களில் அவ்வப்போது மாய்ஸ்ரைசர் தடவிக்கொள்ள வேண்டும். வறண்ட சருமமாக இருக்கும்போது தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவற்றை தடவிக்கொள்ள வேண்டும்.
3. பாத்திரங்கள் தேய்ப்பதற்கு முன்பு, துணி துவைக்கும் முன்பு மற்றும் தண்ணீரில் வேலை செய்யும் முன்பு கைகளில் தேங்காய் எண்ணெய் தடவிக் கொண்டு வேலை செய்ய வேண்டும் அல்லது கையுறைகளையும் அணியலாம்.
4. அதேசமயம் கடுமையான ரசாயனங்களைக் கொண்ட துவைக்கும் சோப்பு, குளிக்கும் சோப்பு, பாத்திரம் தேய்க்கும் சோப்பு கிளன்ஸர்களைத் தவிர்த்து விட்டு, மென்மையான வாசனையில்லாத சோப்புகள் கிளன்ஸர்களைப் பயன்படுத்த வேண்டும். அவை அதிகமாக சருமத்தை வறட்சி அடையச் செய்யாது.
5. நகங்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும். நகம் கடித்தல் போன்றவற்றில் ஈடுபடக் கூடாது. நெயில் பாலிஷ் உபயோகிக்கும்போது தரமான நெயில் பாலிஷ்களை உபயோகிக்க வேண்டும். அசிட்டோன் போன்றவற்றை உபயோகப்படுத்தக் கூடாது.