நமது உடல் மற்றும் மனநலத்திற்கு உடற்பயிற்சி அவசியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஜாகிங், யோகா மற்றும் பளு தூக்குதல் போன்ற செயல்பாடுகள் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தாலும், நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தி ஆயுட்காலத்தை கூட்டும் மற்றொரு வகையான உடற்பயிற்சிகளும் உள்ளன.
அவைதான் மூச்சுப் பயிற்சிகள். காலை நேரத்தில் மூச்சுப் பயிற்சி செய்வதால் சுவாச அமைப்பு மேம்படுவது மட்டுமின்றி, நமது ஆயுட்காலமும் கூடும் என சொல்லப்படுகிறது. இந்தப் பதிவில் மூச்சுப் பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
ஆக்சிஜனேற்றம்: காலையில் மூச்சுப் பயிற்சி செய்வதால் நம்முடைய சுவாசம் மேம்படுகிறது. இது நம் நுரையீரல் அதிக ஆக்ஸிஜனை எடுத்துக்கொள்ள அனுமதிக்கிறது. அதிகரித்த ஆக்ஸிஜனேற்றம் உங்கள் செல்கள், திசுக்கள் மற்றும் உறுப்புகளுக்கு ஊட்டம் அளித்து அந்த நாளை சிறப்பாகத் தொடங்குவதற்கான ஆற்றலை வழங்குகிறது.
மன அழுத்தம் குறைத்தல்: காலையில் சுவாசப் பயிற்சி செய்வதால் பேராசிம்பேட்டிக் நரம்பு மண்டலம் செயல்பட்டு மன அழுத்த அளவைக் குறைக்கிறது. உங்கள் சுவாசத்தில் கவனம் செலுத்தி அதை மெதுவாக்குவதன் மூலம், நீங்கள் உங்கள் மனதை அமைதிப்படுத்தலாம். இதனால் மனஅழுத்த ஹார்மோனான கார்ட்டிசோல் அளவு குறைந்து நேர்மறையான உணர்வை ஊக்குவிக்கிறது.
மேம்படுத்தப்பட்ட சுவாசம்: தொடர்ச்சியாக காலை வேளையில் மூச்சுப் பயிற்சி செய்வதால் சுவாச தசைகள் வலுப்பெற்று, நுரையீரல் திறன் அதிகரிக்கிறது. இது ஆக்சிஜன் பரிமாற்றத்தை மேம்படுத்தி, நச்சுக்களை நீக்கி, ஒட்டுமொத்த நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
நச்சு நீக்கம்: சுவாசம் என்பது உடலில் இருந்து நச்சுக்களை அகற்றுவதற்கான இயற்கையான வழியாகும். ஆழ்ந்த சுவாசம், நிணநீர் மண்டலத்தைத் தூண்டி கழிவுகள் மற்றும் நச்சுக்களை அகற்ற உதவுகிறது.
சிறப்பான நோய் எதிர்ப்பு அமைப்பு: நீண்டகால ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுக்கு வலுவான நோய் எதிர்ப்பு அமைப்பு இன்றியமையாதது. காலை மூச்சுப் பயிற்சிகள், உயிரணுக்களுக்கு ஆக்சிஜன் விநியோகத்தை அதிகரித்து, நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை ஆதரிக்கிறது. இதனால் பல்வேறு விதமான நோய்களுக்கு எதிராக உங்களுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது.
இருதய ஆரோக்கியம்: காலை வேலையில் வழக்கமாக சுவாசப் பயிற்சிகள் செய்வதால், இதய ஆரோக்கியம் மேம்படுவதாக சொல்லப்படுகிறது. ஆழ்ந்த சுவாசம் ரத்த அழுத்தத்தை குறைத்து இதயத்திற்கு பாதுகாப்பை வழங்குகிறது.
அதிகரித்த ஆயுள்: உங்கள் உடல் மற்றும் மனநலத்தின் அம்சங்களை மேம்படுத்துவதன் மூலம் காலையில் மூச்சுப் பயிற்சி செய்வது உங்கள் ஒட்டுமொத்த வாழ்நாளில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். ஆரோக்கியமான சுவாச செயல்பாடு, குறைந்த மன அழுத்தம், மேம்படுத்தப்பட்ட நோய் எதிர்ப்பு அமைப்பு மற்றும் இருதய ஆரோக்கியம் போன்றவற்றால் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை நீங்கள் வாழலாம்.