குழந்தைகள் சிலர் அடிக்கடி தங்களது விரல்களால் மூக்கை நோண்டுவதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். இது ஓர் அருவருக்கத்தக்க பழக்கம் என்பதை அவர்கள் உணர்வதில்லை. இந்தப் பழக்கத்தால் எந்தப் பாதிப்பும் இல்லை என்று பெற்றோரும் அதை கண்டுகொள்ளாமல் இருப்பது வழக்கம். மோசமான பழக்கமே என்றாலும் கூட, இது எந்த விதத்திலும் தீங்கை ஏற்படுத்தாது என்றே இத்தனை நாளும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அது உண்மையல்ல. இதனால் பல மோசமான பாதிப்புகள் ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
மூக்கை நோண்டும் பழக்கத்தால் மூக்கினுள் ஒரு அபாயகரமான பாக்டீரியா தோன்றி மூக்கினுள் பரவி நிமோனியா காய்ச்சலை உருவாக்குகிறது என்பதை ஐரோப்பிய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கைவிரல்கள் மூக்கினுள் நோண்டும்போது இது நிகழ்கிறது என்கிறார்கள். இந்தப் பழக்கத்தால் நிமோனியா காய்ச்சல் வந்து இதுவரை 1.4 மில்லியன் குழந்தைகள் உலகில் இறந்து போனார்கள் என்று அதிர்ச்சி தருகிறார்கள்.
இதனை தவிர்க்க எளிய வழி உங்கள் குழந்தைகளின் கைவிரல்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க பழக்குங்கள். முடிந்தால் அறிவுரை கூறி மூக்கை நோண்டும் பழக்கத்தை கைவிட வலியுறுத்துங்கள்.
மூக்கினுள் விரலை விடும் இந்தப் பழக்கத்திற்கு Rhinotillexomania என்று பெயர். இந்தப் பழக்கம் தொடர்பாக முதன்முதலாக கடந்த 1995ல் அமெரிக்காவை சேர்ந்த தாம்சன், ஜெஃப்பர்சன் என்ற ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் பெரியவர்கள் குறிப்பாக இளைஞர்கள் அதிகம் இப்பழக்கத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது தெரிய வந்தது.
7.6 சதவீதம் பேர் ஒரு நாளைக்குக் குறைந்தது 20 தடவையாவது இப்பழக்கத்தில் தாங்கள் ஈடுபடுவதாகவும், 20 சதவீதம் பேர் இப்பழக்கம் பெரிய பிரச்னைக்குரியது என்று ஒப்புக்கொள்வதாகவும் தெரிவித்தனர். நாசியில் உள்ள அழுக்கை அகற்றவும், அரிப்பை சரி செய்வதற்கும் இப்பழக்கத்தில் ஈடுபடுவதாகப் பலர் தெரிவித்தனர். 12 சதவீதம் பேர், இந்தப் பழக்கத்தில் ஈடுபடுவது நன்றாக இருப்பதால் அவ்வாறு செய்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
மூக்கை நோண்டும் பழக்கத்தால் நாசிக் குழி பாதிக்கப்படுவதாகவும் மூக்கில் உள்ள வாசனை நரம்பு மூலமாக மூளைக்கு பாக்டீரியா செல்ல வாய்ப்புள்ளதாகவும் ஆய்வு கூறுகிறது. மூளைக்குச் செல்லும் இந்த பாக்டீரியா, அமைலாய்டு பீட்டா புரொட்டீனை தூண்டி அல்சைமர் நோய் உருவாவதற்குக் காரணமாக இருக்கிறது. இதுமட்டுமின்றி, ஞாபக மறதி, மொழிப் பிரச்னை, புரிதல் பிரச்னை மற்றும் கணிக்க முடியாத வகையில் நடத்தை மாறுதல் போன்றவையும் இதனால் ஏற்படுகிறது.
Chlamydia pneumonia என்ற பாக்டீரியாதான் மனிதர்களிடம் தொற்றை ஏற்படுத்தி நிமோனியாவை உண்டாக்குகிறது. அதேபோல், மறதியை ஏற்படுத்தும் டிமென்ஷியா நோயும் இதனாலேயே வருகிறது. நாசிக் குழி வழியாக மூளையை சென்றடையும் இந்த பாக்டீரியா, மத்திய நரம்பு மண்டலத்தை ஆக்கிரமிக்கிறது.
அதன் பின்னர் அல்சைமர் நோய்க்கு காரணமாகவுள்ள அமைலாய்டு பீட்டா புரொட்டீனை மூளையில் உள்ள செல்கள் அங்கே படிய விடுகின்றன.
குளிர்காலத்தில் மூக்கடைப்பு ஏற்படுவது சாதாரண விஷயம். சளி, இருமல் அல்லது வேறு சில எரிச்சல் காரணமாக மூக்கு அடைக்கிறது. பல சமயங்களில் மூக்கில் உள்ள சளிகள் நாசி துவாரத்தை அடைத்துக் கொண்டிருப்பதால் கூட தூங்கும்போது மூச்சுவிட சிரமப்படுவோம். இதை சரி செய்கிறேன் என மூக்கை நோண்டுவதற்குப் பதிலாக, மூக்கை சுத்தமாக்க பல எளிமையான வழிகள் உள்ளன.
ஆவி பிடிப்பதால் மூக்கில் உள்ள சளி சீரான இடைவெளியில் வெளியே வந்துவிடும். எப்போதும் கையில் தூய்மையான துணியை வைத்திருங்கள். மூக்கில் உள்ள அழுக்குகள், தூசிகள், சளி ஆகியவற்றை சுத்தப்படுத்த இது உதவும். பகல் நேரத்தில் எந்த நேரத்திலும் மூக்கை கழுவலாம். இப்படிச் செய்வதால் கிருமிகள் மற்றும் அலர்ஜிகள் தாக்குவதிலிருந்து பாதுகாப்பு பெறலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.