உலர் திராட்சை 
ஆரோக்கியம்

கோபத்தைத் தணித்து மனதை சாந்தப்படுத்தும் உலர் திராட்சை!

பொ.பாலாஜிகணேஷ்

‘பழங்கள் கோபத்தைக் குறைக்க உதவுமா? இது என்ன புதுக் கதையாக இருக்கு?’ என்று நீங்கள் யோசிக்கலாம். ஆமாம், உலர் திராட்சை உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. பழங்களில் மிகவும் சிறந்தது உலர் திராட்சை. உலர் திராட்சையின் மருத்துவக் குணம் அளவற்றது. அது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

உலர் திராட்சையை அடிக்கடி உண்டு வர, கண்களில் ஏற்படும் சூட் டைக் குறைத்து. கண் பார்வையை மேம்படுத்தும். மலம், சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் தடையை அகற்றி, அவற்றின் வெளியேற்றத்தை எளிதாக்கும்.

உலர் திராட்சை லேசான இனிப்பு மற்றும் சிறிது துவர்ப்பான சுவையை கொண்டிருப்பதால் இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் இயல்புடையது. உலர் திராட்சை குளிர்ச்சித் தன்மையுடையது என்பதால் உடல் சூடாக இருப்பவர்கள் உலர் திராட்சையை தினமும் உண்டு வர, சூட்டைக் குறைத்து உடலை குளிர்ச்சியடையச் செய்யலாம். இது செரிமானத்துக்கு கடினமானது. அதனால், மற்ற பழங்களுடன் சேர்க்காமல் இதை தனித்துச் சாப்பிடுவதே நல்லது.

வாய் கசப்பினால் துன்பப்படும் நபர்களுக்கு உலர் திராட்சை ஒரு வரப்பிரசாதமாகும். சிறியளவில் அடிக்கடி வாயினுள் உலர் திராட்சையை போட்டுக் கடித்து, அதன் சாற்றுடன் எச்சிலை விழுங்க வாய்க்கசப்பு விரைவில் அகலும். மதுபானம் அருந்தி, மயக்கத்தினால் தள்ளாடுபவர்களுக்கு உலர் திராட்சை கொடுக்க, விரைவில் தெளிவுறச்செய்து மயக்கத்தை அகற்றும்.

உலர் திராட்சையை உண்டு வர தண்ணீர் தாகம், வறட்டு இருமல், வாயு, பித்தங்களால் ஏற்படும் மூச்சிரைப்பு, குரல்வளை உடைந்து ஏற்படும் வலி மற்றும் சீராகப் பேச முடியாத நிலை ஆகியவை மாறும்.

தொடர் இருமலால் ஏற்படும் இரத்தக் கசிவு உபாதைக்கு உலர் திராட்சையை நெய்யில் வறுத்துச் சாப்பிடுவதன் மூலம் நல்ல குணம் பெறலாம். பொன்னிறமாகக் கிடைக்கும் உலர் திராட்சைக்குத்தான் இத்தனை சிறப்புகள் என்றில்லை, கறுப்பு உலர் திராட்சையில் கொட்டைகள் இருப்பதால், பலரும் அதை விரும்புவதில்லை. ஆனால், அதற்கும் மேற்கூறிய மருத்துவ குணங்கள் இருக்கின்றன.

இரவில் படுக்கப்போகும் முன்பு 8 முதல் 10 உலர் திராட்சைகளை வெந்நீரில் போட்டு ஊற வைத்து, மறுநாள் காலை அவற்றைக் கசக்கிப் பிழிந்து நீரை மட்டும் வெறும் வயிற்றில் குடித்தால் கல்லீரலில் பித்த நீர் சுரப்பானது மட்டுப்படும்.

தினசரி உலர் திராட்சையை உண்டு வர தேவையில்லாத கோப தாபங்களைத் தவிர்க்கலாம். குழந்தைகளுக்கு மாலை நேர ஸ்நாக்ஸாக பிஸ்கட் போன்றவற்றை சாப்பிடக் கொடுப்பதற்கு பதிலாக உலர் திராட்சையை சாப்பிடக் கொடுக்கலாம்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT