ஆரோக்கிய வாழ்வு 
ஆரோக்கியம்

ஆசைப்பட்டதை சாப்பிடுங்கள்; ஆரோக்கியமாக வாழுங்கள்!

ஆர்.வி.பதி

சைப்பட்ட எல்லா உணவுகளையும் சாப்பிட வேண்டும் என்று நினைப்பவரா நீங்கள்? ஆனால், அப்படி சாப்பிட்டால் ஏதாவது ஆகிவிடுமோ என்று பயமாக இருக்கிறதா? அப்படியென்றால் இந்தப் பதிவு உங்களுக்குத்தான்.

தற்காலத்தில் யுடியூப் சேனல்களின் வருகைக்குப் பின்னர் பலர் இலவசமாக தங்களுக்குத் தெரிந்தவை, தெரியாதவை என பலவற்றை அறிவுரைகளாக வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவற்றில் ஒரு உணவு சம்பந்தப்பட்டது. ‘இதைச் சாப்பிடாதீர்கள். அதைச் சாப்பிடாதீர்கள். அப்படி மீறி சாப்பிட்டால் அவ்வளவுதான். ஹார்ட் அட்டாக் வந்து விடும்’ என நம்மை பயமுறுத்தும்  அறிவுரைகள் நமது நிம்மதியைக் கெடுக்கின்றன. ஆசைப்பட்டதை நிம்மதியாக சாப்பிடக்கூட இயலாத நிலை. ஆசைப்பட்டதை சாப்பிடாமல் பயந்து பயந்து நூறு வயது வாழ்வதில் என்ன பலன் இருக்கப்போகிறது.

முதலில் ஒரு அடிப்படையான விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு மோட்டார் சைக்கிள் இயங்கத் தேவையான சக்தி பெட்ரோல் மூலமாகக் கிடைக்கிறது. அதுபோல நமது உடல் இயங்கத் தேவையான சக்தி உணவுகள் மூலமாகக் கிடைக்கிறது.

பெட்ரோலை நிரப்பி வண்டியை இயக்கினால் அது இஞ்சினை சுலபமாக அடைந்து தொடர்ந்து வண்டி இயங்க வேண்டும். இஞ்சினில் அடைப்பு ஏற்பட்டால் வண்டி பாதி வழியில் நின்று விடும். அதுபோலவே நாம் சாப்பிடும் உணவும் ஜீரணிக்கப்பட்டு சக்தியாக மாறி நமது இரத்தத்தில் கலந்து இதயத்தை சுலபமாகச் சென்றடைந்து சரியாக இயங்க வேண்டும். நாம் சாப்பிடும் அதிகப்படியாக உணவுகள் கொழுப்பாக மாறி உடலில் தங்கி இரத்தக்குழாய்களை அடைத்தால் ஒருகட்டத்தில் நமது வாழ்க்கைப் பயணம் பாதியிலேயே நின்றுவிடும். இதைத் தவிர்க்க நாம் அளவாக சாப்பிட வேண்டும். அல்லது அதிகப்படியாக சாப்பிட்டால் உடற்பயிற்சிகள் மூலமாக அவற்றைக் கரைக்க வேண்டும்.

அடிப்படையில் உணவு என்பது நமது உடல் இயங்கத் தேவையான ஒரு சக்தி.  அடுத்தபடியாக அது ஒரு ரசனைக்குரிய விஷயம். பசிக்கு மற்றும் தேவையான அளவிற்கு சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். தேவையின்றி சுவைக்காக அளவிற்கதிகமாக பலவிதமான உணவுகளை சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள்.

நாம் உண்ணும் உணவு சரியாக ஜீரணமாகி உடலை இயக்கி கழிவுகள் உடலில் தங்காமல் வெளியேற வேண்டும். இதற்கு நாம் செய்ய வேண்டியது உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி, சுறுசுறுப்பாக நம்மை வைத்துக் கொள்ளுதல். ஓரே இடத்தில் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேல் அமரக்கூடாது. அப்படிப்பட்ட வேலைகளைச் செய்பவர்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கட்டாயம் எழுந்து சிறிது தொலைவு காலாற நடந்து விட்டு வந்து அமர்ந்து வேலைகளைச் செய்ய வேண்டும்.

நம்மில் பலர் பரோட்டா, எண்ணெயில் பொரித்த உணவுகள், ஐஸ்கிரீம் மற்றும் இனிப்புகளை விரும்பி சாப்பிடுபவர்காக இருக்கிறோம். இதை தவறு என்று சொல்ல முடியாது. ஆனால், அதற்கு முன்னால் நீங்கள் தினமும் குறைந்தபட்சம் காலை வேளைகளில் ஒரு மணி நேரம் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். நடப்பது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல் பழகுவது முதலானவை சிறப்பான உடற்பயிற்சிகளாகும்.

நீங்கள் சாப்பிடும் உணவை உங்கள் உடல் ஏற்றுக்கொண்டு எந்தத் தொந்தரவும் ஏற்படாமல் இருந்தால் அந்த உணவை நீங்கள் தொடர்ந்து சாப்பிடலாம். ஏதாவது ஒரு உணவை சாப்பிட்ட பின்னர் உங்களுக்கு அதனால் தொந்தரவு ஏற்படுவதாக உணர்ந்தால் அந்த உணவை அடியோடு தவிர்ப்பது நல்லது. இதுதான் பொதுவான வழிமுறை.

நம்மைச் சுற்றி உள்ளவர்கள், ‘இதைச் சாப்பிடாதே. அதைச் சாப்பிடாதே’ என்று பயமுறுத்திக் கொண்டேதான் இருப்பார்கள். அதைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. ஆனால், உங்கள் உடல் நலன் உங்கள் கையில் இருக்கிறது என்பதை மட்டும் மறக்காதீர்கள். வாழ்வில் நீங்கள் விரும்பும் உணவைச் சாப்பிடுவது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் உடற்பயிற்சி. உணவு மனசு சம்பந்தப்பட்டது. உடற்பயிற்சி வாழ்க்கை சம்பந்தப்பட்டது.

எந்த ஒரு உணவையும் அளவிற்கு அதிகமாக சாப்பிடாதீர்கள். அளவாக சாப்பிடுங்கள். ஒரு உணவை சாப்பிட வேண்டும் என்று மனசு ஆசைப்படும் போது பயப்படாமல் சாப்பிடுங்கள். ஆசைப்பட்டதை சாப்பிடாமல் வாழ்கிறோமே என்ற மனக்கவலை தீரும். ஆனால், அடுத்த நாள் காலை தவறாமல் சற்று கூடுதலாக உடற்பயிற்சி செய்து விடுங்கள்.

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

12 ரோபோக்களைப் பேசி மயக்கி கடத்திய ரோபோ… திட்டம் போட்டு செய்த சம்பவம்… கிரிமினலாக மாறிய ஏஐ!

பெற்றோர்களை தெருவில் பிச்சையெடுக்க விடும் பிள்ளைகள்! கொடுமையின் உச்சம்!

SCROLL FOR NEXT